வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (06/06/2017)

கடைசி தொடர்பு:22:21 (06/06/2017)

'நிர்வாக ரீதியாக யார் தடுத்தாலும் அதை எதிர்கொள்வோம்' – முதல்வர் நாராயணசாமி

”மத்திய அரசோ, மாநிலத்தில் இருப்பவர்களோ நிர்வாக ரீதியாக எங்களை யார் தடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று புதுச்சேரியில் ஓராண்டு காங்கிரஸ் ஆட்சி நிறைவு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியிருக்கிறார்.

தனியார் ஹோட்டலில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ”கடந்த ஆட்சியில் நிதி நிர்வாகத்தை சரியாக கையாளவில்லை. பொதுத்துறைகளின் நிதியை தவறான வழிகளில் செலவு செய்த காரணத்தால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுத் துறைகளில் கொல்லைப்புறமாக ஆட்களை வேலைக்கு நியமித்ததன் காரணமாக ஏகப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழலில்தான் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். புதுச்சேரிக்கான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் மானியத் தொகை 42%. ஆனால் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கென தனிக் கணக்குத் தொடங்கியதில் இருந்து 27% மட்டுமே மத்திய அரசு கொடுத்து வருகிறது. இது நம் மொத்த பட்ஜெட் தொகையான 7 ஆயிரம் கோடியில் 576 கோடி மட்டுமே.

நிர்வாகத்தை சரி செய்ய நானும் எனது அமைச்சர்களும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறோம். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்குக் கெட்டுப் போயிருந்தது. 50 ரூபாய்க்குக் கூட கொலைகள் நடந்தது. வீடு, நிலங்கள் அபகரிக்கப்பட்டது. ரவுடிகள் சாதாரணமாக உலா வந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பில்லாத நிலையில் இருந்தார்கள். இந்த நிலையை மாற்றி மக்கள் நிம்மதியாக இருக்க நாங்கள் எடுத்த முயற்சியால் ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறோம். முழுமையாக வெற்றி பெறவில்லை. ரவுடிகள் புதுச்சேரியை விட்டு வெளியேறிவிட்டனர். ரவுடிகள் தவறான முறையில் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், ரவுடிகள் தடைச் சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் காங்கிரஸ் தி.மு.க கூட்டனி இம்மி கூட தவறாது. மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஆட்சியில் அகில இந்திய அளவில் வளர்ச்சி விகிதம் 6.6 சதிவிகிதம் மட்டுமே. ஆனால் புதுச்சேரியில் நம் ஆட்சியில் 11.4 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். யார் எதிர்த்தாலும், தடை செய்தாலும் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். நாட்டை பேராபத்து சூழ்ந்திருக்கிறது. மதம் சார்ந்த அணிகள் ஒன்றிணைந்து நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். மத்திய அரசோ, மாநிலத்தில் இருப்பவர்களோ நிர்வாக ரீதியாக எங்களை யார் தடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்." என்று பேசியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க