Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினாங்க... ஜெயிச்சுட்டேன்!” - பீச் வாலிபால் ராபின்

மாணவன் ராபின்

வெளிமாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துக்கவே பணப் பிரச்னையைச் சந்திக்கும் சாதாரண ஏழை மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். வெளிநாட்டுக்குப் போவேன்னு கனவிலும் நினைச்சுப் பார்த்ததில்லை. ஆனா, பிரான்ஸ் நாட்டுக்குப் போய் பீச் வாலிபால் போட்டியில், சர்வதேச அளவுல இரண்டாம் இடம்பிடிச்சது இப்பவும் கனவுபோல வியப்பா இருக்கு'' என்கிற ராபின் குரலில் மகிழ்ச்சிப் பொங்குகிறது. ஜூன் 3 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்.

“நாகப்பட்டினம் மாவட்டம், பழையாறு மீனவக் கிராமம் என்னுடைய ஊர். சின்ன வயசிலிருந்தே வாலிபால் போட்டியில் அவ்வளவு ஆர்வம். என் அண்ணனும் பீச் வாலிபால் போட்டியில் ஸ்டேட் லெவல் பிளேயர். என் ஸ்கூல் பீச் வாலிபால் டீம் மாநில அளவிலான போட்டியில் விளையாடி மூணாவது இடம் பிடிச்சது. அது, பீச் வாலிபால் மேலே எனக்கு இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. கடற்கரை மணலில்தான் பீச் வாலிபால் போட்டிகளை விளையாடவும் பயிற்சி எடுக்கவும் முடியும்.

நான் வசிக்கும் மீனவக் குப்பத்தில் எங்கும் பரவியிருக்கும் மணல் பரப்பு, அதுக்கு பெரிய உதவியா இருந்துச்சு. என் விளையாட்டு ஆசைக்கு ஸ்கூல் உடற்கல்வி ஆசிரியர் ஊக்கமும் பயிற்சியும் கொடுத்தார். பேரண்ட்ஸும் சப்போர்ட் பண்ணினாங்க. எட்டாவது படிக்கிறப்போ, எங்க ஸ்கூல் டீம் சார்பா கலந்துகிட்டு ஸ்டேட் லெவல் போட்டியில் தங்கம் வாங்கினோம். அப்போ, எனக்குக் கிடைச்ச சந்தோஷத்துக்கு அளவேயில்லை. எங்க மீனவ சமூகமே பெருமையோடு கொண்டாடின தருணம் அது. தொடர்ந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக்கிட்டு நிறைய பதக்கங்களை குவிக்க ஆரம்பிச்சேன்'' என்கிற ரபின், பிரான்ஸ் போட்டியில் பங்கேற்கும் முன்பு சந்தித்த சவால்களைச் சொன்னார்.
 

மாணவன் ராபின்

“தமிழ்நாடு பீச் வாலிபால் கழகத்தின் சார்பில் நடந்த போட்டியில் வெற்றிபெற்று, இந்திய அணியில் இடம்பிடிச்சேன். பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு பிரான்ஸில் நடந்த சர்வதேச பீச் வாலிபால் போட்டியின் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்குத் செலக்ட் ஆனேன். ஸ்கூல் புக்ஸ் வாங்கவே சிரமப்படும் ஃபேமிலியில் பிறந்தவன். வெளிநாட்டுக்குப்போக அதிகமா செலவாகுமேன்னு தயக்கத்தோடுதான் பேரண்ட்ஸ்கிட்ட சொன்னேன். கடலுக்குப் போய் மீன் பிடிக்கும் அப்பாவும், சந்தையில் மீன் விற்கும் அம்மாவும் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினாங்க. 'பணத்தைப் பத்தி உனக்கெதுக்கு கவலை? நாங்க ரெடி பண்றோம். நீ விளையாட்டுல எப்படி ஜெயிக்கலாம்னு மட்டும் பாரு. நாங்க எல்லாம் கடலே வாழ்க்கையா இருந்துட்டோம். நம்ம குடும்பத்துல கடல் கடந்து விமானத்துல பறக்கும் வாய்ப்பு உனக்கு கிடைச்சிருக்கேன்னு சந்தோஷமா இருக்குது. நிச்சயமா நீ பதக்கத்தோடு வருவே ராசா'னு வாழ்த்தினாங்க. பல இடங்களில் கடன் வாங்கி அனுப்பிவெச்சாங்க. 

 

மாணவன் ராபின்

லீக் சுற்றுப் போட்டிகளில் பல நாடுகளோடு விளையாடினது மறக்கவே முடியாது. ஒவ்வொரு நாட்டு பிளேயர்கிட்டேயும் ஒரு விஷயத்தை கத்துக்கிட்டேன்னுதான் சொல்லணும். இறுதிப் போட்டியில் பிரேசில் நாட்டுடன் விளையாடி தோல்வி அடைஞ்சாலும், சர்வதேச அளவுல வெள்ளிப் பதக்கத்தோடு இரண்டாம் இடம் பிடிச்சு சாதனை படைச்சிருக்கோம். என்னோடு சேர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இந்தச் சாதனையில் பங்கு வகிக்கிறாங்க. வெள்ளிக் கோப்பையோடு நாடு திரும்பினதும் என் மீனவ கிராமமே சந்தோஷ அலையில் வரவேற்றாங்க'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ராபின். 

 

பயிற்சியில் மாணவன் ராபின்

விளையாட்டுடன் படிப்பிலும் சாதனை படைத்துள்ளார் ராபின். ஆம்! இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 445 மதிப்பெண் எடுத்திருக்கிறார். ''தொடர்ந்து படிப்பிலும் விளையாட்டிலும் சரிசமமாக கவனம் செலுத்துவேன். அடுத்த முறை சர்வதேச அளவில் தங்கம் தட்டிட்டு வருவோம்" என நம்பிக்கை வார்த்தைகளோடு சிரிக்கிறார் ராபின்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement