வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (07/06/2017)

கடைசி தொடர்பு:15:44 (07/06/2017)

பள்ளிக் கட்டணத்துக்கு பணம் இல்லாமல் தவிக்கும் மீனவர்கள்!

'மீன்பிடித் தடைக்காலம் நீடித்துவருவதால், மீனவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்' என்று அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கத் தலைவர் சே.சின்னத்தம்பி தெரிவித்துள்ளார். 

மீன்பிடித் தடைக்காலம் 45 நாள்களில் இருந்து 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 15ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதன்பிறகுதான், விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியும். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கத் தலைவர் சே.சின்னத்தம்பி, 'மீன்பிடித் தடைக்காலம் 61 நாள்களாக நீடிக்கப்பட்டதால், மீன்பிடித் தொழிலை நம்பி வாழும்  பல லட்சம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்

வருவாய் இல்லாமல் சிரமப்பட்டுவரும் இந்த நேரத்தில் பள்ளிகள் தொடங்கியுள்ளன. அதனால், மீனவர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கப் பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தனியார் பள்ளி நிர்வாகங்கள், பள்ளிக் கட்டணத்தைக் கட்டினால்தான் பள்ளிக்குள் அனுமதிப்போம் என்று கூறிவருகின்றன. இதனால், புதிதாக மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழல் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, பள்ளிக் கட்டணத்தை ஜூன் 16ஆம் தேதிக்குப் பிறகு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி கட்டணத்தைக் கட்டும் வரையில் குழந்தைகள் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும்' என்றும் தெரிவித்தார்.