Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காந்தியைப் பார்க்கணுமா..? சைதாப்பேட்டைக்கு வாங்க!

சென்னை சைதாப்பேட்டையில் ,`மகாலிங்கம்' என்றால் யோசிக்கிறார்கள்;  'நூலகத் தாத்தா' என்றால் சட்டென வழி சொல்கிறார்கள். சைதாப்பேட்டை கௌரி நிவாஸ் உணவகத்தின் எதிரில் இருக்கும் `மகாத்மா காந்தி நூலகம்'தான் மகாலிங்கத்தின் லேண்ட்மார்க். மக்கள்தொண்டு செய்ய, பணமோ வயதோ ஒரு தடை அல்ல. இதற்குச் சிறந்த உதாரணம், மகாலிங்கம். இவரிடம் பணமும் இல்லை; வயதும் இல்லை. ஆம்! ஓய்வூதியத்  தொகையுடனும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களுடனும் வாழ்ந்துவரும் இவரின் வாழ்வில்தான் எத்தனை  எத்தனை சுவாரஸ்யங்கள்! அப்பப்பா... அத்தனையும் அனுபவப் பொக்கிஷங்கள்.

காந்தி - நூலகத் தாத்தா!

நூலகத்துக்கும் மகாலிங்கத்துக்கும் முறையே 65 மற்றும் 87 வயது!

சிறிய முன்னுரை
வெறும் 30 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி நூலகத்தில், தற்போது 30,000 புத்தகங்களுக்குமேல் இருக்கின்றன. இதற்காக தனி ஒருவனாகப்  பாடுபட்டவர் மகாலிங்கம்.

1930 ஆம் ஆண்டில் பிறந்த மகாலிங்கம், ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்; ஏழை நெசவாளர் குடும்பத்தின் வாரிசு; அரசியலில் ஈடுபாடுகொண்டு, காந்தியத்தையே சுவாசமாக்கிக்கொண்ட காங்கிரஸ் தொண்டன். தையற்தொழிலில் சிறுசிறு வேலைகள் செய்த இவர்,  அயராத  உழைப்பின் மூலம் டெய்லராகப் பணி உயர்ந்தார். 1946 ஆம் ஆண்டில் இந்தி பிரசார சபாவில் ஒரு பஐனையின்போது காந்தியை நேரில் பார்த்த மகாலிங்கம், அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஏழைகளுக்குக் கல்வியறிவு அளிக்கும் பொருட்டே தன்னை நூலகப் பணியில் இணைத்துக்கொண்டார். 1952 ஆம் ஆண்டில், தன் ஆதர்ச நாயகரான மகாத்மா காந்தியின் பெயரிலேயே 30 புத்தகங்களுடன் குட்டி நூலகம் ஒன்றை ஆரம்பித்தார்.

காந்தி - நூலகத் தாத்தா!

நூலகத்தை நிறுவ இவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர், சக்தி டி.கே.கிருஷ்ணசாமி. இவர் நடிகர்திலத்தின் வாத்தியார். கோடம்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருந்த நண்பர் பழனிச்சாமியின் உதவியால் கிருஷ்ணசாமியிடம் அறிமுகமான இவர், பிறகு அவரின் நெருங்கிய நண்பரானார். கதை, வசனகர்த்தாவான சக்தி டி.கே.கிருஷ்ணசாமி, `வீரபாண்டிய கட்டபொம்மன்', `கர்ணன்' போன்ற  படங்களில் பணியாற்றியவர். அவரது முயற்சியை ஏளனம் செய்த நிலையில், கிருஷ்ணசாமி போன்ற நண்பர்கள் உதவியுடன் 2-11-1952 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சி.ஆர்.ராமசாமி தலைமையில், `பாரதியின் தம்பி' என்றழைக்கப்பட்ட பரளி சு.நெல்லையப்பரால் இந்த நூலகம் திறந்துவைக்கப்பட்டது. பிறகு, பொதுமக்களின் அன்பாலும், பல நல்ல மனிதர்களாலும் புத்தகங்கள் அன்பளிப்பாகப் பெறப்பட்டு நூலகம் வளரத் தொடங்கியது. இங்கு இருக்கும் எந்தப் புத்தகங்களைத் திறந்தாலும் அதில் அன்பளிப்பாளர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். `மக்களால்... மக்களுக்காக' என்ற வரிக்கு இந்த நூலகம் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

நூலகத் தாத்தா மகாலிங்கம்

நூலகத்தின் முகப்பில், மகாத்மா காந்தியின் சிலையும், இறக்கும் வரையில் இந்த நூலகத்துக்கான புரவலராக இருந்த சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் உருவப்படத்தையும் காணலாம்.  சிறு நூலகம்தான். ஆனால், இங்கு தடம் பதிக்காத மேதைகளே இல்லை. காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி, கக்கன், ம.பொ.சி., ஈ.ரா.செழியன் போன்ற அரசியல் தலைவர்களும் கண்ணதாசன், தமிழ்வாணன், அகிலன், ஜெயகாந்தன் போன்ற இலக்கியப் பெருமக்களும், எம்.கே.தியாகராஜ பாகவதர், சிவாஜிகணேசன், நாகேஷ் போன்ற திரை நட்சத்திரங்களும் பாதம் பதித்த இடம் இது. தன் 22 வயதிலேயே நூலகப் பணிக்கு வந்துவிட்ட மகாலிங்கம், 1973 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.  இவருக்கு மூன்று மகன்கள். அவர்களின் கல்விகூட காந்தி கண்ணதாசன், என்.சி.மோகன்தாஸ் போன்றோரின் உதவியாலேயே கிடைத்தது. 

ஏழ்மையிலும் தன் நூலகப் பணியை விட்டுவிடவில்லை, குழந்தைகளின் பொழுதுபோக்கிலிருந்து போட்டித்தேர்வுகளில் வெற்றி என்ற மகிழ்ச்சி வரை இந்தச் சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கையோடு இந்த நூலகம் இழைந்திருக்கிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கும் இந்த நூலகத்துக்கு, பெண் உறுப்பினர்கள்தான் அதிகம். பெண்களின் விருப்பமான இலக்கியப் புத்தகங்களோடு, சிறந்த பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களும் இங்கே கிடைப்பதே இதற்குக் காரணம். இது மட்டுமல்லாமல், நூல்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்களைப் பக்கவாட்டில் ஒட்டுவது, புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைப்பது, புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பது என, பெண் வாசகர்களின் பங்கு நிறைந்திருக்கிறது. அரிய புத்தகங்களைக்கூட அவர்களிடம் கொடுத்துதான் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் மகாலிங்கம்.

நூலகர் மகாலிங்கம்

தன் மனைவி உடல்நலமின்மையால் துன்புற்றபோது தனக்குக் கிடைத்த எதிர்பாரா உதவிகளை, அவர் குழந்தைகளின் மீதுகொண்ட பாசத்தின் பலனாலும் கடவுளின் கருணையாலும் கிடைத்தவையாகவே கருதுகிறார். அதுவரை `சாதாரண மழை பெய்தால்கூட பாதி அளவுக்கு நீர் புகுந்த இந்த நூலகத்தில், சென்னையே வெள்ளத்தால் சூழப்பட்டபோது ஒரு சொட்டு நீர்கூடப் புகவில்லை' என அவர் சொல்லும்போது அவரது நம்பிக்கை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

காந்தி பிறந்த நாளையொட்டி நடைபெறும் இந்த நூலக ஆண்டு விழாவில், சிறந்த எழுத்தாளர்களுக்கு சக்தி டி.கே.கிருஷ்ணசாமி பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்கள். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லக்கூடிய ஏழை மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகையும் வழங்குகிறார்கள். இந்தப் பணம் முழுவதும் நன்கொடையாக மட்டுமே திரட்டப்படுகிறது. நான்கு திசைகளிலிருந்து நிதியுதவி கிடைத்தாலும், அதிலிருந்து ஒரு ரூபாயைக்கூட தன் சொந்த செலவுக்காகப் பயன்படுத்துவதில்லை மகாலிங்கம். முதியோர் ஓய்வூதியத்தொகையைப் பெற இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையின் இழுபறியால், நூலகம் அமைக்க சொந்தமாக இடம் கிடைக்காத வருத்தம் அவர் பேச்சில் தெரிகிறது. 

`நூலகத் தந்தை' எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, சேவையொளி விருது,  புத்தகர் விருது, நூலகச் செம்மல் விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளைப் பெற்ற இவர், இன்றும் செருப்பு அணிவதில்லை. மக்கள் பணியையே தன் கொள்கையாகக்கொண்ட இவருக்கு, தன்னுடைய காலம் முடிவதற்குள் இந்த நூலகத்தை சொந்த இடத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்ற கனவு இருக்கிறது.

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இவரைப் பற்றி ஒருமுறை பேசுகையில், `காந்தியைப் பார்க்கணும்னா, சைதாப்பேட்டைக்குச் செல்லுங்கள்... மகாலிங்கத்தைப் பாருங்கள்!' என்றாராம்.

மு.சசிக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement