Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘‘அந்த நல்லவர்களால உயிரோட இருக்கேன்’’ - மாற்றுத்திறனாளி சுபாஜாவின் நெகிழ்ச்சி கதை

மாற்றுத்திறனாளி சுபஜா

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குச் சென்றுவந்தவர்கள், சுபாஜாவை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். கருணை நிறைந்த கண்கள், தன்னம்பிக்கை மிளிரும் பேச்சு என வலம்வருபவர். எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் குறைகளைக் கேட்டு, மனுக்கள் எழுத உதவி செய்பவர். மாற்றுத்திறனாளிகளை இந்தச் சமூகம் தன்னிலிருந்து பிரித்து, வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களைப்போல பார்க்கிறது. அவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என ஒதுக்கிவைக்கிறது. ஆனால், எத்தனை வலிகள் வந்தாலும், தங்களாலும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர், சுபாஜா. மனுக்களை எழுதிக்கொடுத்து மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திவரும் சுபாஜா, தன் வாழ்வில் நடைபெற்ற மாற்றங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

‘‘என் அப்பா எப்படி இருப்பாருனுகூட பார்த்ததில்லை. என் அம்மா நான் அஞ்சாவது படிக்கிறப்ப இறந்துட்டாங்க. எங்களுக்குச் சொந்த ஊரு நாகர்கோவில். எனக்கு மூணு அக்கா, மூணு அண்ணன். பெற்றோர் இல்லாததால், ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்தபடி ஸ்கூல் படிச்சுட்டிருந்தேன். ஒருமுறை நாகர்கோவிலுக்குப் போறதுக்காக, கிளம்பிட்ட டிரெய்னில் ஓடிப்போய் ஏறினேன். அப்போ, தவறி விழுந்துட்டேன். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொடுத்தாங்க. இனிமேல் நடக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதைக் கேட்டதும் என் தலையில் பெரிய சம்மட்டியால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. நேத்து வரை ஓடி ஓடி சுற்றிவந்த இடங்களில் காலை இழுத்துக்கிட்டு தவழ்ந்தபோது, 'இப்படி வாழறதுக்குப் பதிலா செத்துப்போயிடலாம்'னு நினைச்சுப்பேன்’’ என குரல் தழுதழுக்கத் தொடர்ந்தார் சுபாஜா. 

மாற்றுத்திறனாளிமாற்றுத்திறனாளி

‘‘உடல் உபாதைகளைக் கழிக்கவே சிரமப்பட்டேன். அன்பு காட்டி உதவவேண்டிய அக்கா, அண்ணன்களோ வார்த்தைகளால் ஈட்டியைப் பாய்ச்சுற மாதிரி பேசினாங்க. 'இவளை எங்களோடு வெச்சுக்க முடியாது. அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டுடுங்க'னு கைகழுவிட்டாங்க. ஒரு கிறிஸ்துவ சிஸ்டர்ஸ் கான்வென்ட்ல சேர்ந்தேன். கால்களில் ஏற்பட்ட புண் சரியாகவே பல நாள் ஆச்சு. சிஸ்டர்ஸ்கிட்ட 'என்னை எப்படியாவது காலேஜ் படிக்கவைங்க. அந்தப் படிப்பைவெச்சு நான் பொழைச்சுக்கிறேன்'னு சொன்னேன். அவங்களும் சென்னையில் படிப்பைத் தொடர உதவினாங்க. பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன்’’ என்றவர், அப்போது சந்தித்த சிரமங்களைச் சொன்னார். 

‘‘ஒண்ணு, ரெண்டு இல்லீங்க. நிறையவே சிரமப்பட்டேன். ஜெர்மனில் இருக்கிற ஓர் அம்மாவுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன். அவங்கதான் என் படிப்புக்கான தொகையை ஸ்பான்சர் பண்ணினாங்க. செயற்கை கால் பொருத்திக்க ஏற்பாடு செஞ்சாங்க. அது செட்டாகாமல் கால்களிலிருந்து ரத்தம் வடியும். கொஞ்ச நேரம் முட்டிப் போடுறதே அவ்ளோ கஷ்டம். நான் எங்கே போனாலும் முட்டிப் போட்டுக்கிட்டுதான் போவேன். அப்புறம், பெங்களூரில் ஒரு ஆபரேசன் செஞ்சு, செயற்கை காலைப் பொருத்தினாங்க. காலேஜ் முடிச்சதும் என் அக்கா வீட்ல கொண்டுபோய் விட்டுட்டாங்க. அங்கே, அக்கம்பக்கம் இருக்கிற பசங்களுக்கு டியூசன் எடுத்தவாறு கொஞ்ச நாள் இருந்தேன். அந்தச் சூழல் எனக்குப் பிடிக்கலை. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதித்தர ஆரம்பிச்சேன். அதுதான் எனக்குள்ளே தன்னம்பிக்கையையும், சுயமாக நிற்கும் உணர்வையும் கொடுத்திருக்கு'' என நெகிழ்கிறார் சுபாஜா. 

‘‘நிலப் பிரச்னை, பென்சன் வரலைனு ஏகப்பட்ட பிரச்னையோட பலரும் வருவாங்க. மனுசுல இருக்கிறதை மனுவா எழுதச் சொல்லுவாங்க. நான் அவங்க என்ன சொல்ல வர்றாங்கனு புரிஞ்சுக்கிட்டு, மனு எழுதித் தருவேன். அதற்கான தீர்வு கிடைச்சதும் மனசார வாழ்த்திட்டுப் போவாங்க. வாழ்வே நிர்மூலமாயிருச்சுனு நினைச்சுட்டிருந்தப்போ, எத்தனையோ பேர் செஞ்ச உதவியால்தான், இன்னிக்கு மத்தவங்களுக்கு உதவும் நிலைக்கு வந்திருக்கேன். அதனால், மனு எழுதுறதுக்கு இவ்வளவு காசுனு நானா எதுவும் கேட்க மாட்டேன். அவங்களா விருப்பப்பட்டு தர்ற பணத்தை வாங்கிப்பேன். ஒருத்தர் அஞ்சு ரூவா தருவார், ஒருத்தர் ஐம்பது ரூபாய் தருவாங்க. சிலர், 'சில்லறை மாத்திட்டு வரேன்'னு சொல்லிட்டு அப்படியே போய்டுவாங்க. சிலர், 'காசு இல்லேம்மா. ஊருக்குப் போக வண்டி சார்ஜ்க்குதான் துட்டு இருக்கு'னு சொல்வாங்க. 'காசு கெடக்கட்டும். என்ன எழுதணும்னு சொல்லுங்க'னு கேட்டு எழுதிக்கொடுப்பேன்'' என்று புன்னகையுடன் சொல்கிறார் சுபாஜா. 

தற்போது, குரூப் 2 தேர்வுக்குத் தயாராகிவரும் சுபாஜா, ''ஒரு பக்கம் சுயநலமான மனிதர்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த உலகம் அன்பானவர்களால் நிறைஞ்சிருக்கு. அவங்களோட உதவியும் ஆதரவும் எனக்குத் தொடர்ந்து இருக்கு. ஏமாற்றுப் பேர்வழிகளை அடையாளம் காணும் அறிவு கிடைச்சிருக்கு. இந்த மனு எழுதும் வேலையில் என் தேவைக்குப் போதுமான பணம் கிடைக்குது. அதைவெச்சு தனியாக வீடு பிடிச்சு வாழ்ந்துட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் அரசாங்க வேலைக்குப் போயிடுவேன். யாரும் என்னை அனுதாபத்தோடு பார்க்கிறதை விரும்பலை. எங்களை மாதிரியான ஆட்களுக்கு மத்தவங்களின் அனுதாபம் வேண்டாம். உங்களோடு சேர்ந்து இந்தச் சமூகத்தில் இயங்க ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் போதும். தினம் தினம் போராடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். சுயமரியாதையோடு சக மனிதர்கள்போல வாழ்வோம்'' என்கிற சுபாஜா குரலில் கம்பீரம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement