Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர்... இப்போது எப்படி இருக்கிறது? #SpotVisit

தூண்டில் வளைவு

எண்ணூர் துறைமுகக் கப்பல் விபத்து என்பது, சென்னை அருகே எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டது. இந்த விபத்து 28 ஜனவரி 2017 அன்று நடந்தது.

ஈரானில் இருந்து எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வந்த '.பி.டபிள்யூ மேப்பிள்' என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த 'எம்.டி. டான் காஞ்சிபுரம்' என்ற கப்பலும் எண்ணூர் துறைமுகத்தில் மோதிக்கொண்டன. துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இரு கப்பல்களும் குறைந்த வேகத்திலேயே வந்தன. துறைமுகத்துக்கு வெளியே ஒரு கடல்மைல் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு கப்பல்களும் பயங்கர சத்தத்துடன் நேருக்குநேர் மோதிக்கொண்டன. மும்பையில் இருந்த வந்த கப்பலின் பாகங்கள் உடைந்ததால், அதில் கொண்டுவரப்பட்ட எண்ணெய்ப் பீப்பாய்களிலிருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இந்தக் கச்சா எண்ணெய்க் கசிவு, எண்ணூரில் இருந்து திருவான்மியூர்வரை பரவியிருந்தது.

65 டன் எடைகொண்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இது, கடலில் கலந்து, கடல்நீரை மாசுபடுத்தியதோடு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. மீன்வளத்துக்குப் பாதிப்பை உண்டாக்கியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த விபத்தின் பாதிப்பு அவர்களிடமிருந்து இன்னும் நீங்கவில்லை. 

மீனவர்கள்

இதுகுறித்து அங்குள்ள மீனவரான ரஜினி, ''நான் 20 வருடங்களாகப் மீன்பிடித்து வருகிறேன். அன்றாடத் தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஆனால், எண்ணெய்க் கசிவுக்குப் பின் இரண்டு மாதங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து, மீனவர் போராட்டம் தொடங்கிய காரணத்தால்... மேலும், ஒருமாதம் மீன்பிடிக்கத் தடை ஏற்பட்டது. இதனால் குடும்பச் செலவுக்குக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது'' என்றார்.

ரஜினி மீனவர் ''எண்ணெய்க் கசிவினால் 2 மாதம் மீன்பிடிக்கத் தடை ஏற்பட்டதால், தமிழக அரசு மீனவக் குடும்பங்களுக்குத் தலா 11,000 நிதி அளிப்பதாக அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எண்ணூர் தாலுக்காவைப் பொறுத்தவரையில், தாழன்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், காட்டுக்குப்பம் என சுமார் 60,000 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. இதில், ஒருநாளைக்கு 500 படகுகளில்... படகு ஒன்றுக்கு நான்கு பேர்வீதம் ஆயிரம் பேர் மீன்பிடிக்கச் செல்கின்றனர். எண்ணெய்க் கசிவு விபத்துக்குமுன் 1,000 ரூபாய்வரை விற்ற மீன்கள் இப்போது 200 அல்லது 300 ரூபாய்வரை மட்டுமே விற்பதால், குடும்பத்தின் அன்றாடச் செலவுக்கே அவதிப்படும் நிலையில் உள்ளோம். எண்ணெய்ப் பாதிப்புக்குப்பின் மீனின் உணவான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்ததால் மீன்வளம் குறைந்துள்ளது'' என்றனர் இன்னும் சில மீனவர்கள்.

இதுகுறித்து அங்குள்ள மீனவப் பெண்களிடம் பேசினோம். ''அடுத்தவேளை உணவுக்குப் போராடும் போராட்டம்தான் எங்களின் வாழ்க்கை. அரசாங்கம் வார்த்தைகளில் மட்டுமே எங்களுக்கு நிதி வழங்குகிறது. நாங்கள் அரசிடம் எதிர்பார்ப்பது எல்லாம் அறிவித்த நிதியை இப்போது அளித்தால், குழந்தைகளின் கல்விச் செலவுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் பிள்ளைகளையாவது நன்றாகப் படிக்கவைத்து ஒருவேலைக்கு அனுப்பிவைத்துவிட்டால், எங்களைமாதிரி கஷ்டப்பட வேண்டியது இல்லை'' என்றனர்.

இந்த நிலையில், கடல் கொந்தளிப்பு அதிகம் உள்ள காலங்களில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வருடத்துக்கு ஐந்து பேர்வீதம் உயிரிழக்க நேரிடுகிறது. அதன் காரணமாக, அலைகளைக் கட்டுப்படுத்தத் தூண்டில் வளைவு அமைத்துத் தரும்படி அரசிடம் தாழன்குப்பம் மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, தாழன்குப்பம் கடற்கரைப் பகுதியில் அரசு சார்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. ''இது, கடலின் முன்பகுதியிலேயே அமைக்கப்படுவதால் அதனால் எந்தப் பயனுமில்லை'' என்றனர் மீனவர்கள்.

நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் இன்னும் முடியவில்லை

 - ம.நிவேதா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement