அ.தி.மு.கவின் ஐந்து அணிகளும் இணைய சில யோசனைகள்! | A satirical article on the groups of admk

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (08/06/2017)

கடைசி தொடர்பு:08:32 (08/06/2017)

அ.தி.மு.கவின் ஐந்து அணிகளும் இணைய சில யோசனைகள்!

'அம்மா ஆட்சி தொடரும்'னு மூச்சுக்கு முன்னூறு தடவை அ.தி.மு.க புள்ளிகள் சொல்றாங்க. ஆனால், நடக்குற கூத்தை எல்லாம் பார்த்தா, சீக்கிரமே எண்ட் கார்ட் போட்டுடுவாங்க போல. ஏற்கெனவே எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி, மாதவன் அணின்னு பிறந்தநாள் கேக் கணக்கா ஆளுக்கு ஒரு துண்டு போட்டுகிட்டாங்க. இப்போ புதுசா டி.டி.வி தினகரன் அணி வேற உருவாகியிருக்கு. இத்தனை அணிகளா இருந்தா தலை சுத்துதே, இவங்களை இணைக்க என்ன வழினு யோசிச்சப்போ சில எகிடுதகிடு ஐடியாக்கள் மாட்டுச்சு. கேளுங்களேன்!

அதிமுக

எல்லா அணித் தலைவர்களும் கேப்டன் நடிச்சு, சக்கை போடு போட்ட 'வானத்தை போல' படத்தை கும்பலா உட்கார்ந்து பார்க்கலாம். பார்த்து முடிச்ச கையோட செயற்கை மழையை பொழியவிட்டா ஓ.பி.எஸ் எல்லாருக்கும் சேர்த்து குடை பிடிக்க, அதைப் பார்த்து டி.டி.வி கண்ணீர் வடிக்கணும். அந்த இடமே விக்ரமன் பட செட் மாதிரி ஆயிடும். அப்புறம் என்ன? ட்ரேட்மார்க் 'லாலாலல்ல லாலாலல்ல' போட்டு இணைப்பை நடத்திட வேண்டியதுதான். இவங்க பண்ற கூத்துக்கு மழை கூட பொழியுமோ என்னவோ?
 
அது வேலைக்காகலைன்னா, இவங்க எல்லாரும் ரிங்டோனா வச்சுருக்கிற, 'அம்மா' பாட்டுகள் எல்லாத்தையும் எடுத்துட்டு, 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'ஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாக' மாதிரியான பாடல்களை ரிங் டோனா வச்சுக்கணும். இப்படியான பாடல்களை திரும்பத் திரும்ப கேக்குறப்போ உங்களுக்குள்ள இருக்குற பகைமை மறைஞ்சு சென்டிமென்ட் கொப்பளிக்கும்னு சொல்லுது சயின்ஸ். ஆகவே சீக்கிரமே சேர்ந்துட வாய்ப்பு இருக்கு. அப்படி ஒருவேளை இந்த ட்ரிக் ஒர்க் அவுட் ஆச்சுனா நீங்க எல்லாரும் சேர்ந்து இந்தப் பாட்டை ஸ்டாலின் - அழகிரி அண்ட் கோவுக்கு டெடிகேட் பண்ணலாம். 

பழைய கதைதான்னாலும், உங்களை ஒண்ணு சேர்க்க பயன்படும்ங்கிறதால மறுபடியும் எல்லாரும் மாங்கு மாங்குன்னு படிக்கலாம். அதான், வேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட பறவைகள் ஒற்றுமையா வலையோடு சேர்ந்து பறந்து தப்பிக்கும்ல, அந்த கதைதான். இங்க பறவைகள்ன்னா நீங்க எல்லாரும். வலை விரித்த வேடன் யார்ன்னா கேட்கறீங்களா? அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
இது லேட்டஸ்ட் வழி. கபால்ன்னு விஜய் டி.வியில கமல் தொகுத்து வழங்குற 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில நீங்க அஞ்சு பேரும் கலந்துக்கலாம். அந்த வீட்டுக்குள் போன், பேப்பர்ன்னு எந்த வசதியும் தர மாட்டாங்க. அதனால், எவ்வளவு நேரம்தான் பேசாம கொள்ளாம திருதிருன்னு முழிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பீங்க? ஏதோ இரு கட்டத்துல பழைய சம்பவங்களை எல்லாம் நினைச்சு பார்த்து ஒருத்தருக்கு ஒருத்தர் பேச ஆரம்பிச்சுடுவீங்க. அப்புறம் நூறு நாள்களும், 'பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க'ங்கிற கதையாகி ஆவின் பால் போல திக் ஆயிடுவீங்க!
 
இல்லன்னா, இருக்கவே இருக்கு பஞ்சாயத்து பண்ற ரியாலிட்டி ஷோக்கள். அதுல எதுலயாவது உங்க பஞ்சாயத்தை முறையிடலாம். அந்த தொகுப்பாளர் உங்க அஞ்சு பேரையும் உட்கார வச்சு காது வலிக்க வலிக்க பண்ற அட்வைஸ்ல ஆளா விட்டா போதும்டா சாமி'னு பிச்சுக்கிட்டு ஓடிடுவீங்க. உயிர்பயத்துல பழைய பகை எல்லாம் காணாம போயிடும். மிஷன் சக்சஸ். 
 
இவ்வளவு சொல்லியும் எங்களுக்கு பாசம் முக்கியமில்ல, பகைதான் முக்கியம்னு வீம்பு பண்ணீங்கன்னா... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம். சொல்றதுக்கு ஒண்ணுமில்ல!


டிரெண்டிங் @ விகடன்