Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்ற அரசுப் பள்ளி!

அரசுப் பள்ளி


நேற்று திருவிழா முடிந்த களைப்பில், கிராமத்தில் பலரும் விடிந்தும் உறங்கிக்கொண்டிருந்தனர். தீடீரென்று மேளமும் நாதஸ்வரமும் இசைக்கும் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து எழுந்தனர். வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தால் பள்ளிச் சீருடையுடன், கழுத்தில் மாலையோடு சின்னப் பிள்ளைகள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்கு முன் இசைக்குழு வாசித்துக்கொண்டு சென்றது.

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியத்தின் வடசிறுவளூரில் நடந்த சம்பவம்தான் இது. இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழாதான் இது என்றால் நம்ப முடிகிறதா? அந்த ஊரே வியந்துபார்க்க புதிய மாணவர்கள் பள்ளியை நோக்கி நடந்தனர். வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ராஜேஷிடம் இது குறித்து கேட்டோம்.

அரசுப் பள்ளி

"வழக்கமாக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது ஜூன் மாதத்தில் தொடங்கி ஜூலை மாதத்தில்தான் முடிவடையும். இதனால் தாமதமாக சேரும் மாணவர்கள் சில பாடங்களைத் தவற விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைத் தடுக்க, பள்ளி முதல் வேலை நாளிலேயே மாணவர் சேர்க்கையை முடித்துவிட திட்டமிட்டோம். அதன்படி எங்கள் பள்ளியின் சிறப்புகளை ஒரு மாதத்துக்கு முன்பே ப்ளெக்ஸ் பேனர் அடித்து விளம்பரப்படுத்தியிருந்தோம். அந்த விவரங்களைச் சின்ன நோட்டீஸாக அச்சடித்து இரண்டு நாள்களுக்கு முன் கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் கொடுத்தோம்.

எங்கள் பள்ளியின் எல்லைக்கு உட்பட்ட வடசிறுவளூர், நாகபுரம், மல்லிகா புரம், சுடரொளி நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக பள்ளியில் சேரும் வயதிலிருப்பவர்களைக் கணக்கெடுத்தோம். மொத்தம் 26 பேர் இருந்தனர். அவர்களுக்குப் பள்ளிச் சீருடையைத் தயார் செய்தோம். நேற்று முதல்நாளே அவர்களின் வீடுகளுக்குச் சென்று, மறுநாள் காலை பிள்ளைகளைத் தயாராக இருக்கச் சொன்னோம். இந்தச் செய்தியை அறிந்த ஊர் மக்கள் ஒரு வருடத்துக்குப் பள்ளியின் அடிப்படைத் தேவைகளை அன்பளிப்பாக தருவதாக கூறினர். இது எங்களின் முயற்சியை இன்னும் உற்சாகப்படுத்தியது. நேற்று பள்ளிச் சீருடை, மாலை அணிவித்து ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அழைத்து வந்தோம். ஊர் மக்களுக்கும் பள்ளிக்குத் தேவையான வாளி, துடைப்பம் போன்ற பொருட்களுடன் எங்களோடு இணைந்துகொண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்தோம். எங்களின் முயற்சியை வாழ்த்த உதவி தொடக்கக் கல்வி அலுவரும் வட்டார வள மேற்பார்வையாளரும் வந்திருந்தனர்.

அரசுப் பள்ளி

இந்த நிகழ்ச்சியில் எங்களை நெகிழ்ச்சியடைய வைத்த விஷயங்கள் இருக்கின்றன. தனியார் பள்ளியில் சேர்க்கவிருந்த தனது இரண்டு பிள்ளைகளை இந்த நிகழ்ச்சியைப் பார்த்து எங்கள் பள்ளியில் ஒரு பெற்றோர் சேர்த்தனர். மாணவர்களை அழைத்துவரும்போது மேளம், நாதஸ்வரம் இசைத்த கலைஞர்கள் தங்களுக்கான ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டனர். 'நல்ல விஷயம் செய்றீங்க... அதுக்கு எங்க பங்களிப்பா இருக்கட்டும்' எனச் சொல்லிவிட்டார்கள். ஊரையே அசர வைக்குமளவுக்கு இரண்டு மேளம், இரண்டு நாதஸ்வரம் கச்சேரியை நடத்தியவர்களின் நல்ல மனதைப் புரிந்துகொண்டோம். அதுபோல, மைக், ரேடியோ செட் அமைத்தவரும் ஒரு ரூபாய்க்கூட வேண்டாம் என மறுத்துவிட்டார். சிறிய அளவில் ஹோட்டல் நடத்துபவர் பள்ளி வந்த சிறப்பு விருந்தினருக்கு தொகை ஏதும் வாங்கிக்கொள்ளாமல் விருந்தளித்தார். ஊரே சேர்ந்து அரசுப் பள்ளியைத் தாங்கிப் பிடிக்கிறது எனும் நம்பிக்கையும் அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உறுதியும் நேற்று பிறந்தது.

எங்கள் பள்ளியில் சுகாதாரத்துடன் கழிவறைகளைப் பராமரிப்பதைப் பார்த்தாலே மாணவர்கள் மீதான பள்ளி ஆசிரியர்களின் அக்கறையும் கவனிப்பும் புரிந்துவிடும். தலைமை ஆசிரியர் பத்மாவதி அவர்கள், மாணவர்களுக்கு உதவும் விதத்தில் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பவர். இந்திய அளவில் நடத்தப்படும் 'டிஸைன் ஃபார் சேஞ்ச்' போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்கள் இரண்டு முறை பங்கேற்று பரிசுகளைப் பெற்று வந்திருக்கின்றனர். வட்ட, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. இன்னும் நிறைய சொல்லலாம். மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் திறமைகளைக் கொண்டு வர முயல்கிறோம்" என்றார் ராஜேஷ். 

அரசுப் பள்ளிகளின் உற்சாகம் இன்னும் பல மடங்குகள் அதிகரிகட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement