Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“தமிழக உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டது!” ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் வாக்குமூலம்


 

மெரினா போலீஸ் 

மிழக காவல்துறையில் ஆள்பற்றாக்குறை என்பது ஆண்டாண்டு காலமாகவே தொடர்ந்து நீடித்து வருகிற ஒன்றுதான். ஊர்க்காவல்படை, போலீஸ் நண்பர்கள் குழுக்களில் இருந்து காவல்துறைக்குத் தேவையான மனிதசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு மட்டுமே மக்களின் பார்வையில் தெரிகிற காவல்பணியாக இருந்தாலும் காவல்துறையில் இன்னும் பல பிரிவுகளும் உள்ளன. மத்திய குற்றப்பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, கடலோரக் காவல்படை,  உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, சைபர் க்ரைம், ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை, அதிரடிப்படை என காவல்துறையில் பல பிரிவுகள் செயல்படுகின்றன. காவல்துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் உளவுப்பிரிவுக்குப் போதிய எண்ணிக்கையில் போலீஸார் இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் இத்துறையினர் கடுமையான திணறலில் உள்ளனர். காவல்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற துணை கமிஷனர் எம்.கருணாநிதியிடம் உளவுப்பிரிவில் நீடிக்கும் ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல கேள்விகளை முன் வைத்தோம்."பெரும்பாலும் ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது போலீஸ் தடியடி நடத்துகிறது. இந்தளவுக்கு மக்கள் கூடுவார்கள் என்பதை முன்னரே உளவுப்பிரிவு போலீசாரால் கணிக்க முடியாமல் போகிற நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள் ?""தங்களுடைய தேவைக்காகவும், உரிமைகளுக்காகவும் மக்கள்  போராட்டத்தை நடத்துவது ஜனநாயக நாட்டில் அவர்களின் உரிமை. அதை செய்யக்கூடாது என்று சொல்ல மாட்டேன். அதேவேளையில் கவுன்சிலர்., எம்எல்ஏ., அமைச்சர், எம்பி. என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளிடம் அவர்கள், தங்களின் பிரச்னைகளுக்காக அணுகியிருக்க வேண்டுமல்லவா? ஆர்ப்பாட்டம் செய்கிற இடத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்றால் மொத்த மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீஸ்தானே. நடந்துமுடிந்த ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் நான்குபேரை மட்டுமே பிடித்து வைத்து அவர்களை அதற்கு பொறுப்பாக்க முடியாது. 'இந்த இடத்தில் இந்த காரணத்துக்காக இத்தனைபேர் கூடப் போகிறார்கள்; அதன்மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது அவர்களின் திட்டம். சமூக விரோதச் செயல்களிலும் சிலர் இறங்க வாய்ப்பு உள்ளது' என்று முன்னெச்சரிக்கை செய்ய வேண்டியது உளவுப்பிரிவு போலீசாரின் கடமை"   "சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக இளைஞர்கள் திரண்டது, அண்மையில் நடந்த ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் போன்றவற்றில் காவல்துறையின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?" "ஜல்லிக்கட்டுத் தேவை என்ற நல்ல நோக்கத்துக்காகத்தான் மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தினர்... ஆனால், அடுத்தடுத்த நாள்களில் அந்த இலக்கு தவறான பாதையை நோக்கிச்செல்வதை உளவுப்பிரிவுதான் கண்டுபிடித்து ரிப்போர்ட் அனுப்பியது. மெரினா என்பது பலதரப்பட்ட மக்கள் கூடும் பொதுஇடம். அங்கே இப்படியான அசாதாரண சூழலை காவல்துறை அனுமதிக்க முடியாது. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தொடர்ச்சிதான் மெழுகுவத்தி ஏந்திய போராட்டமும். பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுவதை எப்போதும் ஏற்க முடியாது. படித்தும் வேலைகிடைக்காத இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் போன்றோரைக் குறிவைத்தே எப்போதும் சமூகவிரோத சக்திகள் இயங்குகின்றன. அதை அவ்வப்போது முளையிலேயே கிள்ளி எறியும் வேலையைச் செய்வது காவல்துறைதான். அதற்கு உதவியாக இருப்பது உளவுப்பிரிவு போலீசார்தான்"

"உளவுப்பிரிவு என்றால், ரகசியமாக செயல்படும் போலீஸார்தானே. ஆனால், இன்றுள்ள உளவுப்பிரிவு போலீஸாரை சாமான்ய மக்களும் அறிந்து வைத்திருப்பது சரியான போக்குதானா?"  "இது மிகவும் மோசமான ஒரு நிலைப்பாடு. உளவுப்பிரிவிலேயே வெளியில் தெரியாத பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு உளவுப்பிரிவு போலீஸ் பணியில் இருப்பார். அதேபோல், ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் அந்த போலீஸூக்கு உயரதிகாரி அந்தஸ்தில் ஒருவர் இருப்பார். உளவுப்பிரிவுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போதே அவர்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது. உளவுப்பிரிவுக்கு தேர்வு செய்யப்படுவோரின் தனிப்பட்ட குணம், பழக்க வழக்கம், குடும்பப் பின்னணி என்று ஏராளமான விஷயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அதையும் தாண்டிதான் சில தவறுகள் நடந்து விடுகின்றன. அவர்களுக்கு பல விஷயங்களைச் சொல்கிறோம்... 'மக்களோடு மக்களாகச் சென்றே நீங்கள் விஷயங்களைச் சேகரிக்க வேண்டும். ஆனால், உங்களை அந்த மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடாது... உங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல்நிலையத்தில் பொய்வழக்கு போடுகிறார்களா? அந்தக் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கையூட்டு பெறுகிறாரா என்பன போன்ற விவரங்களை நேர்மையாக சேகரித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்றெல்லாம் பல விஷயங்கள் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும். ஒரு சில இடங்களில் அந்த மாதிரியான கையூட்டுப் போலீசாருக்கு உடந்தையாக உளவுப்பிரிவு போலீசாரே இருந்து விடுவதும் நடக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள்தான் துணிந்து காவல்துறை தலைமைக்கு தகவலை அளிக்க வேண்டும். ஏனெனில், சில தகவல்கள், காவல் உயரதிகாரிகளின் பார்வைக்குச் செல்வது தாமதமாகலாம்... விஷ விருட்சங்களை வளர விடாமல் தடுப்பதில் மக்களுக்கே பெரும்பங்கு உண்டு. மக்கள் உதவிக்கரம் நீட்டினால் உளவுத்துறை இன்னும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது"

ஓய்வுகாவல் அதிகாரி கருணாநிதி

"காவல்துறை உயரதிகாரிகள் சிலரால் உளவுப்பிரிவில் முட்டுக்கட்டை ஏற்படுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?"   "உளவுப்பிரிவினரைப் பயன்படுத்தும் உயரதிகாரிகளில் சிலர் திறமையற்றவர்களாக உள்ளனர். தங்களுடைய சொந்தப் பணிக்கு உளவுப் போலீசாரைப் பயன்படுத்தும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அதுபோன்ற நிலையை மாற்றினாலே நல்ல விளைவுகளை நாம் எதிர்கொள்ள முடியும். ஆண்டாண்டு காலமாக சிலைகளைப் பதுக்கி வைத்திருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்ற கும்பல், இப்போது பிடிபடுகிறது என்பதே உளவுத்துறையின் தோல்வியைத்தானே காட்டுகிறது.சிலைகள் மட்டுமல்ல; போலி பாஸ்போர்ட், போலி மதுபான ஆலை, போலிச் சான்றிதழ்கள், லாட்டரிச் சீட்டு போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பலை அண்மையில் கூண்டோடு பிடித்தோம் என்பதே, நீண்டகாலமாக உளவுத்துறை செயலற்றுப் போய்க்கிடந்ததன் எதிரொலிதானே?"  "உளவுப்பிரிவினருக்கான சலுகைகள், போதுமானதாக இருக்கிறதா, ஆள் பற்றாக்குறையில் உளவுத்துறை திணறுவதாக சொல்லப்படுகிறதே...?" "உளவுத்துறை போலீசாருக்கு எப்போதுமே 'ஸ்பெஷல் பே' உண்டு. மற்ற போலீசாருக்கு அளிப்பதைவிட பல மடங்கு கூடுதல் சலுகை அவர்களுக்கு உண்டு. அதேபோல் அவர்களுக்கு 24 மணி நேரமும் பணி. அதில், சமாதானத்துக்கு இடமில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உளவுத்துறையினர் போதிய எண்ணிக்கையில் இல்லாதபோது, விடுப்பு எடுக்கமுடியாத சூழல் ஏற்படும். தொடர்ந்து பணியில் இருக்க நேரிடும்போது, மன உளைச்சலுக்கு உளவுத்துறையினர் ஆளாக வேண்டிய நிலையும் ஏற்படும்.   "குற்றச்செயல்களில் தொழில்நுட்பம் அதிகமாகி விட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" "டெக்னாலஜி வளர்ச்சியடையும் அதேநேரத்தில் குற்றவாளிகளும் டெக்னாலஜியை வளர்த்துக்கொண்டு, குற்றங்களைச் செயல்படுத்துகிறார்கள். சமூக வலைதளங்களில் மிக மோசமான க்ரைம் போர் நடந்து கொண்டிருக்கிறது. செல்போன் மெசேஜ்களே பல குற்றங்களை உண்டாக்கி விடுகின்றன. வெளிநாடுகளில் பல வழக்குகளில் துப்பு துலக்க சி.சி.டி.வி. கேமிராதான் உதவிக்கரமாக இருக்கிறது. அனைத்து கேமராக்களையும் அரசே அங்கு வைத்திருக்கிறது. நம் நாட்டிலும் அதுபோன்று அரசு செய்திட முன்வரவேண்டும்"

"உளவுப்பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு இன்னும் என்ன மாதிரியான வசதிகளை ஏற்படுத்தலாம்? உளவுப்பிரிவு போலீஸாருடன்  உயரதிகாரிகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்?"   "காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி.க்கள் ஶ்ரீபால், தேவாரம், விஜயகுமார் போன்று இப்போதுள்ள உயரதிகாரிகள் இருந்தாலே போதுமானது. இவர்கள் மூவரிடமும் உளவுப்பிரிவுப் போலீசார் எந்த நேரத்திலும் விஷயத்தைக் கொண்டு போகமுடியும். காது கொடுத்துக் கேட்பார்கள். தகவலைப் புறக்கணிக்க மாட்டார்கள். கீழே பணியாற்றுகிறவர்கள் சொல்லும் தகவலை உதாசீனப்படுத்தும் தன்மையால்தான் உளவுத்துறை பலவீனமாகி வருகிறது. அந்தப்போக்கு மொத்தமாக மாறவேண்டும். அதில் மாற்றம் ஏற்படாத வரை உளவுப்பிரிவுக்கு எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாலும், எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.உதாரணத்துக்கு, 'கள்ளச்சாராயமும், ரவுடிகளின் புகலிடமும் ஒரே இடத்தில் இருப்பதால்தான் வடசென்னையில் மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்' என்ற தகவலை அப்போதைய டி.ஜி.பி. ஶ்ரீபால் கையில் கொடுத்தேன். நான் கொடுத்ததோ, இரவு நேரம்...போலீஸ் டி.ஜி.பி. ஶ்ரீபால் கொஞ்சமும் தாமதிக்காமல் ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீமையே நான் சொன்ன இடத்துக்கு அனுப்பி வைத்தார். இன்றுவரை அந்த குறிப்பிட்ட பகுதி மக்கள் நிம்மதியாக உள்ளனர்."

"நேர்மை, திறமை, கடமை இவைகளோடு போலீசாரை ஒப்பீடு செய்யுங்கள்?"  "இதில் ஒப்பிட என்ன இருக்கிறது. நேர்மை தவறாத, கடமை தவறாத ஒவ்வொரு காவலரும் உயரதிகாரிதான். இதில் இடறுகிறவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர் அதிகாரியாக இருக்க முடியாது.அண்மையில், காவல்துறையில் பெரிய அதிகாரிகளே கையூட்டு வாங்கிக் கொண்டு மிகப்பெரிய வழக்கு விசாரணையில் சிக்கிக் கொண்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கலாமா? அந்தக் குற்றச்சாட்டுகள், விசாரணை கமிஷன்வரை போய் முட்டிக் கொண்டு நிற்கும். திறமைசாலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. பல விஷயங்களில் உயரதிகாரிகள் பொறுப்புகளை தாங்களே வலிந்து ஏற்றுக் கொண்டு கீழுள்ளவர்களை அதற்கேற்ற முறையில் பயன்படுத்த வேண்டும்.டி.ஜி.பி. நிலையிலும் கூட நேர்மை, திறமை இல்லாத போக்கு நிலவுகிறது... காவல்துறையினரின் தனிப்பட்ட பண்புதான் அவர்களின் பணிகள் பற்றிப் பேச வைக்கும்" என்றார் முப்பத்தியேழு ஆண்டு காலமாக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து துணை ஆணையராக ஓய்வுபெற்ற கருணாநிதி.

'உளவுப் பிரிவு உள்பட தான் பணியாற்றிய காவல்துறை இன்றைய நவீனத்துவத்துக்கு ஏற்றபடி வளர வில்லையே' என்ற ஆதங்கம் அவரது பேச்சில் ஒலித்தது. 


    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement