வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (08/06/2017)

கடைசி தொடர்பு:12:00 (08/06/2017)

பரபரப்பான அரசியல் சூழல்: 5-வது முறையாகக் கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக்கூட்டம், இன்று பிற்பகல் 3 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது.

சட்டசபைக் கூட்டம்

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்து 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுநாள் வரை பரபரப்பு இல்லாமல் இருந்துவந்த தமிழக அரசியல், டி.டி.வி.தினகரன் ஜாமீனுக்குப் பின் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பக்கம், இரு அணிகள் இணைப்பு ஒரு பக்கம் என தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று 3 மணியளவில் அமைச்சரவை கூடுகிறது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, நேற்று சட்டசபைக் கூட்டத்தொடர் ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதனால், இன்று துவங்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேரவைக்கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், விரைவில் அமலுக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி மசோதாகுறித்தும் இன்று விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.