வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (08/06/2017)

கடைசி தொடர்பு:15:56 (08/06/2017)

ஐ.டி.ஐ படித்தால் அரசு வேலை..! விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 15

நிறைய மதிப்பெண் பெற்றவர்களும், பொருளாதாரத்தில் பலம் பெற்றவர்களும் இன்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சலிங்காகவும், மருத்துவப் படிப்புக்கான கவுன்சலிங்காகவும் காத்திருக்கிறார்கள். ஆனால், பல்வேறு சூழ்நிலைகளால் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றோரும் அல்லது தோல்வி அடைந்தவர்களும் படிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். தொழில் பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு உதவிபெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேரலாம். 

ஐடிஐ தொழிற்பயிற்சி

தற்போது அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சேர, விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி, ஜூன் 15. ஆகஸ்ட் முதல்வாரத்தில் கவுன்சலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 

ஐடிஐ-யில் சேர எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் சேர்வதற்கு எனப் பல தொழிற்பயிற்சிகள் இருக்கின்றன. இதைப்போலவே, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களும் தனித்தனியே தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேரலாம். 

தொழிற்பயிற்சியில் பொறியியல் வகை தொழிற்பயிற்சிகள், பொறியியல் பிரிவு அல்லாத தொழிற்பயிற்சிகள் என இரண்டு வகைகள் உண்டு. பொறியியல் வகை தொழிற்பயிற்சிக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் மதிப்பெண்களின் அடிப்படையிலும், இதர தொழிற்பயிற்சிகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கை நடக்கிறது. பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களும், முன்னாள் ராணுவத்தினர் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். போரில் இறந்த ராணுவ வீரரின் மனைவி, கணவரால் கைவிடப்பட்டோர், விதவை, மகளிர் போன்றோருக்கு வயதுவரம்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐடிஐ-யில் பொறிப் பகுதி பொருத்துநர் (Fitter), கம்பியாள் (Wireman), கடைசல் பிடிப்பவர் (Turner), கம்மியர் மோட்டார் வாகனம் (Mechanic Motor Vehicle), கம்மியர் குளிர்ப்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் (Mechanic - Refigeration and Air - Conditioner), இயந்திரப் பட வரைவாளர் (Draughtsman - Mechanical), கருவி மற்றும் அச்சு செய்பவர், (Tool & Die Maker), பற்றவைப்பவர் (Welder), புகைப்படக் கலைஞர் (Digital Photographer), பிளாஸ்டிக் வழிமுறை பணியாள் (Plastic Proccessing Operator), உணவு தயாரிப்பவர் (Food Production), வரவேற்புகூட அலுவலக உதவியாளர் (Front Office Assistant), உணவு மற்றும் குளிர்பானங்கள் உபசரிப்பு உதவியாளர் (Food & Beverage Service Asst.), டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆப்ரேட்டர் (Desk Top Publishing Operator), லித்தோ ஆப்செட் மெஷின் மைண்டர் (Litho-offset Machine Minder), சுகாதாரப் பராமரிப்பு (House Keeper), உணவுப் பொருள்கள் பதப்படுத்துதல் (Food Beverage), கம்மியர் மின்னணுவியல் (Electronics Mechanic), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant), மின்சாரப்பணியாளர் (Electrician), தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information Communication Technology System Maintenance), கம்மியர் கருவிகள் (Instrument Mechanic), சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (Stenographer & Secretarial Assistant), அலங்காரப் பூத்தையல் தொழில்நுட்பம் (Surface Ornamentation Techniques - Embroidery), நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design & Technology), கணினி உதவியுடன்கூடிய பூத்தையல் மற்றும் வடிவமைப்பு (Computer Aided Embroidery Designing) என ஏராளமான படிப்புகள் இருக்கின்றன.

ஐடிஐ தொழிற்பயிற்சி

விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்திலிருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://skilltraining.tn.gov.in/itia2017/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். விண்ணப்பக் கட்டணத்தை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இந்தியன் வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 6526577760, AAO and Deputy Director (Admission and Trade Test), வங்கிக் கிளை: சைதாப்பேட்டை, சென்னை. வங்கி IFSC code IDIB000S004 என்பதைக் குறிப்பிட்டு செலுத்த வேண்டும். வங்கி பணம் செலுத்திய ஒப்புகை நகலை, கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

உங்களுடைய விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை இணையதளத்தின் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு மையத்தில் மதிப்பெண் தகுதி மற்றும் இன ஒதுக்கீட்டின்படி தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். இதை www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31.05.2017 என்று வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது அதை நீட்டித்து 15.6.2017 என அறிவித்திருக்கிறார்கள். ஒரேசமயத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்க்கைக்கான கல‌ந்தாய்வு நடத்தப்படும். இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் விண்ணப்பதாரர் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) மற்றும் தொழிற்பிரிவுகளைத் (Trade) தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தேர்ந்தெடுத்த பிறகு, பயிற்சியில் சேருவதற்கான சேர்க்கை ஆணையைப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில், சேர்க்கை ஆணை மற்றும் அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கட்டணம் செலுத்தி, பயிற்சியில் சேர வேண்டும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பயிற்சி தொடங்கப்படும். 

அரசு, அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கைக் கட்டணம் 235 ரூபாய் மட்டுமே. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உணவு வசதியுடன் விடுதி வசதியும் இருக்கிறது. விடுதியில் அறை கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூபாய் 236 மட்டுமே. விடுதியில் உணவுக்கு மட்டும் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை 500 ரூபாய், பேருந்துக் கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், ஒரு செட் சீருடை, ஒரு செட் காலணி போன்றவை அரசால் வழங்கப்படுகின்றன. 

அரசு ஒதுக்கீட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அமைந்து தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும்போது மாணவர்களுக்கு 12,000 ரூபாயும், கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும்போது 10,000 ரூபாயும் அரசுப் பயிற்சிக் கட்டணமாக வழங்குகிறது. சில தொழிற்சாலைகள், அரசு அனுமதியுடன் அடிப்படைப் பயிற்சி மையங்களை நடத்திவருகின்றன. இங்குப் பயிற்சி பெறுபவர்களுக்கு தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 7,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

ஐடிஐ-யில் ஒரு வருடப் பயிற்சியில் ஏழு மாதங்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், ஐந்து மாதங்கள் தொழிற்சாலை நிறுவனத்தில் செய்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. இரண்டு வருடப் பயிற்சியில் 15 மாதங்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், ஒன்பது மாதங்கள் தொழிற்சாலை நிறுவனங்களிலும் பயிற்சி வழங்கப்படும். தொழில் நிறுவனத்தில் பயிற்சிபெறும்போது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

தற்போது இன்ஜினீயரிங் பட்டம் படித்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், அவர்கள் படித்த படிப்புக்குத் தகுந்தாற்போல் வேலைவாய்ப்பு இல்லை. ஆனால், ஐடிஐ-யில் படித்தவர்கள் குறைந்த அளவில் இருப்பதால் மத்திய அரசும் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் போட்டிபோட்டு விளம்பரங்கள் செய்து ஐடிஐ-யில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவருகிறது. ஆக, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள், வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.


டிரெண்டிங் @ விகடன்