Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் பதவியைக் காக்க என்ன செய்யவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி?

எடப்பாடி பழனிசாமி

டெல்லி திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கோபம் கொப்பளிக்க டெல்லியில் கொடுத்த பேட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் கிலியை கொடுத்துள்ளது.

சென்னை அடையாறு வீட்டுக்கு தினகரனைப் பார்க்கவரும் எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிரித்துக் கொண்டே செல்கிறது. ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து கோலொச்சினாலும் கட்சியின் கட்டுப்பாடு டி.டி.வி. தினகரன் வசம் இருப்பதையே அவரது வீட்டில் குவியும் தொண்டர்களின் உற்சாகம் வெளிப்படுத்துகிறது. அதைச்சமாளிக்க கோட்டையில் மாவட்ட வாரியாக தொகுதி எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்கும் வேலையை தொடங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனைச் சந்தித்திருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் அணியைத் தவிர்த்து 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதையும், அமைச்சரவையின் நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்பதையும் நிருபிக்க எடப்பாடி பழனிசாமி பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார். 

அதற்கு ஏற்றாற்போல, தினகரனும் தன்னைச் சந்தித்த எம்.எல்.ஏ-க்களிடம், "நீங்கள் முதல்வரைச் சந்திப்பதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார். அதனால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 'செம' உற்சாகத்தில் கோட்டையில் வலம் வருகிறார்கள். இதற்கிடையில் டி.டி.வி.தினகரனை அமைதிப்படுத்தும் முயற்சியில் மன்னார்குடி குடும்பத்திற்கு தூது போய் உள்ளார்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சிலர்.

எடப்பாடி பழனிசாமி

அதுகுறித்து, மன்னார்குடி வகையறாக்கள் பேசுகையில், ''கட்சியில் பிளவு வந்து விடக்கூடாது என்றுதான் டி.டி.வி.தினகரன் தானாக முன்வந்து, 'கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேன்' என்று அறிவித்தார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கு லஞ்சம் கொடுத்தார் என்றுதான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கட்சியின்  துணைப் பொதுச்செயலாளரான அவருக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கிறதா? டெல்லி போலீசார் அவரைக் கைதுசெய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தபோது உங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத்தானே ஓடி ஒழிந்தீர்கள். அவர்தானே இப்போதைய முதல்வரையும் முக்கிய நிர்வாகிகளுக்கு நல்ல இலாகாக்களை கொடுக்க ஏற்பாடு செய்தார். அதை மறந்துவிட்டதால்தான் இப்போது கோபப்படுகிறார்'' என்று தூது வந்தவர்களிடம் தெரிவித்தனர். 

இப்போது, டி.டி.வி.தினகரனின் தாய் மாமா திவாகரன்தான் சமரசப் பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவரிடம் எடப்பாடி அணியில் இருந்து சிலர் பேசியபோது ''ஆட்சியை டி.டி.வி.தினகரன் கவிழ்க்க மாட்டார்'' என்று  உறுதியோடு சொன்னாராம். இந்தத் தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லப்பட்டது. அதன் பிறகுதான் அவர் சற்று அமைதி அடைந்துள்ளார். இதையடுத்து ''டி.டி.வி.தினகரனுக்கு எதிராக இனி யாரும் பேசக்கூடாது" என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம்.

இந்நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 122 பேரின் மனநிலையை அறிந்து ஓர் அறிக்கையை தனியார் உளவு நிறுவனம் ரெடி பண்ணி முதல்வரிடம் கொடுத்துள்ளது. அதில், ''ஆட்சிக்கு எதிரான மனநிலையில் எந்த எம்.எல்.ஏ-க்களும் இல்லை. இன்னும் நான்கு ஆண்டு எம்.எல்.ஏ பதவியை இழக்கவும் அவர்கள் தயாராக இல்லை. சில எம்.எல்.ஏக்கள் பணப்பிரச்னையில் இருக்கிறார்கள். அரசு பணிகளுக்கான ஒப்பந்தங்கள், மணல் பிஸினஸ், மாதா மாதம் நிரந்தர வருமானம், அரசு பணி நியமனம், டிரான்ஸ்பர் போன்றவற்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்தால், அவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில், வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை சிறப்பாக நடத்தி அதில் பல அறிவிப்புகளை வெளியிட்டு தன்னுடைய பெயரை நிலைநாட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 'அனைத்துத் துறைகளிலும் அதிரடி அறிவிப்புகளை ரெடி பண்ணுங்கள்' என்று சொல்லி இருக்கிறாராம். டி.டி.வி. தினகரனோடு சமாதான தூதுவிட்டுள்ள நிலையில், தனது ஆட்சி நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுக்கும் வேலைகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். தனது எதிர்கால அரசியல் பயணத்தை ஸ்டெடியாக கொண்டுசெல்லத் தேவையான காய்களை இப்போது எடப்பாடி பழனிசாமி நகர்த்தி வருகிறார். துறைவாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார். அவர் வீட்டில் பொதுமக்கள் தரும் மனுக்களைப் பெற்றுக்கொள்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement