வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (08/06/2017)

கடைசி தொடர்பு:17:38 (08/06/2017)

''வலி உணர்வோம்!'' - புற்றுநோய் குழந்தைகளுக்காக சினிமா இயக்குநரின் முயற்சி

சினிமா இயக்குநர் உஷா கிருஷ்ணன்

"றந்த பின்னாடி கண்தானம், உடல் உறுப்புதானம் செய்யலாம். ஆனா உயிரோடு இருக்கும்போது செய்யக்கூடிய தானங்கள்ல முடி தானத்தை உயர்வானதா நினைக்கிறேன். அத்தானத்தைச் செய்ய ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு இருந்தாலும் மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு தயங்கினதாலேயே இவ்வளவு காலம் காலதாமதம் ஆனது. இப்போ சந்தோஷமா முடி தானம் செய்திருக்கேன்" என உணர்வுபூர்வமாகப் பேசுகிறார், ராஜா மந்திரி பட இயக்குநர் உஷா கிருஷ்ணன். 

"புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது முடி உதிர்வது இயல்பான விஷயம் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆண்களைப் பொறுத்தவரை முடி இழப்பை அத்தனை பெரிதான விஷயமா எடுத்துக்கமாட்டாங்க. ஆனா பெண்கள், முடியை அழகின் வெளிப்பாடாகவும், தன்னம்பிக்கையாகவும் பார்ப்பாங்க. நான் படிச்ச சென்னை அண்ணா யூனிவர்சிட்டி கேம்பஸ்க்குப் பக்கத்தில்தான் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் இருக்கு. அங்க சிகிச்சை முடிஞ்சு வெளிய வர்றவங்க சங்கடத்தோடவும், மத்தவங்களோடு சகஜமா பேசத் தயங்குறதையும் பார்த்திருக்கிறேன். விக் எல்லாம் அவங்களால வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்வா இருக்கும். அதையெல்லாம் பார்க்கிறப்ப என்னால என்ன பண்ண முடியும்னு யோசிப்பேன். சரி நம்மோட முடியைத் தானம் பன்ணிடலாம்னு முடிவெடுத்தேன். ஆனா பக்கத்தில் இருக்கிறவங்க நம்மோட புற அழகை முக்கியமா நினைக்கிறப்ப, முடியில்லாம இருக்கிற என்னை என்ன நினைப்பாங்கனு தயக்கமா இருந்துச்சு. அதனால தானம் பண்ற முயற்சி தள்ளிப்போயிட்டே இருந்தது" என்பவர் முடியை டொனேட் செய்த கதையைக் கூறுகிறார். 

சினிமா இயக்குநர் உஷா கிருஷ்ணன்

"சக பெண்களைப் போல நானும் முடியைப் பெரிய கான்ஃபிடன்ஸா நினைச்சேன். சின்ன வயசுல இருந்து மொட்டை கூட போட்டது கிடையாது. ஒருகட்டத்துல இயக்குநரா சமூகப் பிரச்னைகளுக்குத் தைரியமா குரல் கொடுக்கணும்ங்கிற பொறுப்பு நமக்கு இருக்கிற மாதிரி, சமூகத்துக்கு உதவ நாம முன்வரணும்னு நினைச்சேன். நம்ம முடியை இழக்கிறதால, ரெண்டு வருஷத்துல முடி முழுமையா வளர்ந்திடும். ஆனா நிரந்தரமா முடிவளராத புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண் அல்லது பெண் குழந்தை நம்மளால மகிழ்ச்சியடைவாங்கன்னு நினைச்சேன். அதனால தைரியமா முடியை டொனேட் செய்ய தீர்மானிச்சேன்.

குறைந்தது 15 இன்ச் முடி இருக்கணும்; பொடுகு உள்ளிட்ட தலை முடிப் பிரச்னைகள் இருக்கக்கூடாது; நிரந்தர கலரிங், டையிங், கர்லிங் பண்ணியிருக்கக்கூடாது உள்ளிட்ட சில அடிப்படை விதிகளைக் கடைபிடிச்சேன். அதன்படி ரெண்டு நாளைக்கு முன்னாடி மொட்டையடிச்சுக்கிட்டேன். அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின் ஆந்திரா வங்கி பில்டிங்கின் மூன்றாம் தளத்தில் இருக்கிற ஹேர் டோனர் பிரிவில் என்னோட முடியைக் கொடுத்தேன். குறிப்பா ஒரு பெண் குழந்தைக்கு என்னோட முடியைத் தானம் செய்யுங்கன்னு கோரிக்கை வெச்சேன்" என்பவர் மொட்டைத் தலையுடன் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறார். 

சினிமா இயக்குநர் உஷா கிருஷ்ணன்

"முன்னை விட என்னோட அழகும், தைரியமும் அதிகமாகி இருக்கிறதா நினைக்கிறேன். என்னோட முயற்சிக்குப் பலரும் வாழ்த்தவும் பாராட்டவும் செய்தாங்க. அதைத்தாண்டி 'நாங்களும் முடியைத் தானம் செய்ய முயற்சி செய்கிறோம்'னு பலரும் சொன்னது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்குது. ஆனா அம்மாதான் என்னைப் பார்த்ததும் திட்டி தீர்த்துட்டாங்க. அவங்க அறியாமையில் அன்பு கலந்திருக்கு. அம்மாவுக்கு என் தரப்பு விளக்கத்தை விளக்கினேன். இப்போ என்னோடு சேர்ந்து அவங்களும் ஹேப்பிதான். நீங்களும் உங்களால முடிஞ்சா உங்களோட முடியைத் தானம் செய்யலாம். நம்மோட முடியினால் ஒரு குழந்தை சந்தோஷப்படும்னா தாராளமா செய்யலாம்தானே" எனப் புன்னகைக்கிறார் உஷா கிருஷ்ணன். 


டிரெண்டிங் @ விகடன்