100 நாள்கள்.. 100 நாடகங்கள்.... அசத்தும் மதுரை கிராமம்!

கிராமத்துக் கோயில் திருவிழா என்றால், ஒரு கரகாட்டம், ஒரு ஆடல் பாடல், ஒரு பாட்டுக்கச்சேரி என விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல், நாடகத்தை மட்டும் திருவிழாவாக நடத்தும் கிராமம் ஒன்று மதுரை அருகே உள்ளது. அதுவும் ஒன்றிரண்டு நாள்கள் அல்ல; சுமார் 100 நாள்கள் இந்த நாடகத் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் என்றவாறு 100 நாடகங்கள் இங்கு நடைபெறுகின்றன. மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் நான்குவழிச் சாலையில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வலையங்குளம் கிராமம்.

நாடக நேர்த்திக்கடன்

`கிராமங்களின் அழகே திருவிழாக்கள்தான்' என்று கூறுவார்கள். இந்தக் கிராமமும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நூறு நாள்கள் களைகட்டும் திருவிழா, இங்கு தானாகத் தோன்றி குடிகொண்டிருக்கும் தனலிங்கப் பெருமாளுக்காகத்தான் நடைபெறுகிறது. நவீன உலகத்தில்கூட பெண்களை இந்தக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. அவர்கள் வெளியே இருந்தபடி கடவுளை வணங்குவதுதான் இந்தக் கோயிலுக்கான மரியாதையாக நினைக்கிறார்கள் இந்தக் கிராம மக்கள். கோயிலுக்கு முன்பாக நாடக மேடை அமைந்திருக்கிறது. இதை அவர்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். காலில் செருப்பை அணிந்து யாரும் இந்த மேடைக்கு அருகேகூடச் செல்லக் கூடாது. அதேபோல் நாடகத்தைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் இந்த மேடையில் அரங்கேற்றக் கூடாது.

இப்படி நாடகத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்குறித்து டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில், 'நாடகத்தின் முக்கியத்துவம் மற்றும் மேடை நடிப்புப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பாக்யஸ்ரீ தாக்ரே அவர்களிடம் பேசியபோது...

``நாடகம்தான் மனித உணர்வை சமூக அமைப்பிடம் கொண்டுசேர்க்கிறது. ஆன்மிகரீதியில் சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும், சமூக விழிப்புஉணர்வையும் கட்டமைப்பையும் நிர்ணயிக்க, நாடகங்களே அவசியமாகின்றன. இது வளரும் தலைமுறையினரிடம் அழிந்துவிடுமா என்ற பயம் இருந்தாலும்கூட, நம்பிக்கையுடன் நாடகக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி மகிழ்விப்போம்" என்றார்.

நாடக நேர்த்திக்கடன்

``இந்தக் கிராமத்தில் நாடகத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?'' என்ற கேள்வியை, கிராம முன்னாள் தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ``இந்தக் கோயிலில் இருக்கும் தனலிங்கப் பெருமாள் ஒரு நாடகப் ப்ரியர். அதனால் இங்கு இருக்கும் மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவைத்தால் ஒரு நாடகம் நடத்திக்கொடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். பிறகு, காணிக்கையாக நாடகத்தை நடத்துகிறார்கள். இப்படி நாடகங்களை நடத்துவது இறைவனின் விருப்பமும்கூட.

இப்படி நாடகம் நேர்த்திக்கடனாக மாறியதற்கு ஒரு காரணமும் உண்டு. ஒருமுறை, இந்தக் கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மழைவேண்டி மக்கள் நாடகம் நடத்துவதாக வேண்டிக்கொண்டார்கள். அந்த ஆண்டு மழை வந்து, ஊர் செழித்தது. அடுத்த வருடமும் இந்த நாடக விழாவை நடத்தினர். அன்றிலிருந்து இன்று வரை இந்தப் பழக்கம் நடந்துவருகிறது.

நாடக நேர்த்திக்கடன்

நாடகத்தை நேர்த்திக்கடனாக நடத்த நினைப்பவர்கள், நினைத்தவுடன் நடத்திவிட முடியாது. அதற்கு ஒரு வருடம் முன்பே முன்பணம் கொடுத்து, கோயிலில் பதிவுசெய்ய வேண்டும். அதன் பிறகு இவர்களுக்கு நாடகத்தை நடத்த உரிய தேதி வழங்கப்படும். அந்தத் தேதியில்தான் இவர்கள் நாடகத்தை நடத்த முடியும்.  

ஒரு நாடகத்தை நடத்த குறைந்தபட்சம் 25,000 ரூபாய் செலவாகிறது. இதுவே சினிமா கலைஞர்கள் அல்லது மிகப்பெரிய நாடகக் கலைஞர்களை வைத்து நாடகம் நடத்தினால், ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். தமிழகத்தில் இருக்கும் அனைத்து நாடகக் கலைஞர்களும் இந்த நாடக மேடையில் நடித்திருக்கிறார்கள் என்பது இந்தத் திருவிழாவின் தனிச்சிறப்பு.  

இந்தப் பாரம்பர்யம், மன்னர் திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அன்று நாடகம் ஆரம்பமாகும். அன்றிலிருந்து 100 நாள்கள் தொடர்ந்து நாடகம் நடக்கும்.

முதல் நாடகம் எப்போதும் `அபிமன்யு சுந்தரி'தான். 425 வருடங்களுக்கு முன்பு, இந்த நாடகம் நடந்துகொண்டிருக்கும்போது மன்னர் திருமலை நாயக்கர் வந்து பார்வையிட்டு உள்ளம் குளிர்ந்து பாராட்டினார். அதனால் அந்த நாடகத்தில் நடித்தவர்களுக்கு `திருமலை மெச்சினார்' என்ற பெயரும் வந்தது.

ஒவ்வொரு வருடமும் இந்த நாடகத்தைத் தொடங்கிவைப்பது இந்தத் திருமலை மெச்சினார் பரம்பரைதான்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நாளன்று நாடகத் திருவிழாவை முடிப்பார்கள். இந்தக் கடைசி நாளன்று பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா முடியும்" என்றார்.

நாடக நேர்த்திக்கடன்

நாடகம் தொடங்குவதற்கு முன் மேளதாளத்துடன் மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கோயிலுக்கு வருவார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில், வெளிச்சத்துக்காகத் தீப்பந்தங்களை ஏந்தி வருவது வழக்கம். இன்றுகூட அந்தச் சம்பிரதாயங்களைக் செய்துவருகின்றனர் அந்தக் கிராம மக்கள்.

தீப்பந்தம் நாடக மேடைக்கு வந்ததும், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஊரிலுள்ள அனைவரும் கடவுளுக்கு மரியாதை செலுத்திய பிறகு நாடகம் தொடங்குகிறது. இப்படி இரவு 10 மணிக்குத் தொடங்கும் நாடகம், மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடக்கும். அதுவரை கோயில்  நடை திறந்தே இருக்கும். கோயிலிலுள்ள இறைவன் நடக்கும் நாடகங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். நாடகத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களையும் இந்த ஊர்  மக்கள் கடவுளுக்கு இணையாக மதிக்கின்றனர்.

"இங்கு வந்து நாடகம் போடுவதாக வேண்டிக்கொண்டால், எப்படிப்பட்ட மனக்குறையும் உடனே நிவர்த்தியாகிவிடும் என்பது இந்த ஊர்  மக்களின் தீராத நம்பிக்கை. குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதியர் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அடுத்த வருடமே குழந்தையோடு வந்து தங்களது நாடக நேர்த்திக்கடனை நிவர்த்திசெய்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் துடிப்பான தெய்வம்" என்று பெருமையோடு கூறுகிறார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

-சுஜிதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!