முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா!

பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரிலா டப்ரோஸ்கியுடன் ஜோடி சேர்ந்தார். இன்று நடந்த இறுதிப் போட்டியில் போபண்ணா - கேப்ரிலா ஜோடி, கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா, ஜெர்மனியின் லினா  கிரோயின்ஃபெல்ட் ஜோடியை  எதிர்கொண்டது.
 

ரோகன் போபண்ணா

முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா - கேப்ரிலா ஜோடி, அதன்பின் சுதாரித்தது. இரண்டு மேட்ச் பாயின்ட்களைப் பாதுகாத்து, முடிவில் 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தன் டென்னிஸ் வாழ்வில் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் போபண்ணா. அவர் வயது 37.  

இத்தனை ஆண்டு டென்னிஸ் வாழ்வில் போபண்ணா இரண்டு முறை மட்டுமே கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்  2010 அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் பாகிஸ்தானின் குரேஷியுடன் ஜோடி சேர்ந்த போபண்ணா, அமெரிக்காவின் பிரயன் சகோதரர்களிடம் தோல்வியைத் தழுவினார். அதன்பின் ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது முதன்முறையாக, பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறினார். இந்தமுறை வெற்றி வசமானது. 

போபண்ணா, பிரெஞ்ச் ஓபன் வென்றதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் வென்ற நான்காவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா மட்டுமே கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்தனர். தற்போது போபண்ணா அந்த வரிசையில் இணைந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்கள் பட்டியில் போபண்ணா இணைந்ததுமே, சானியா மிர்ஸா ட்விட்டரில் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!