’பால்வளத்துறை அமைச்சரே முழுப் பொறுப்பு’ : பொன்னுசாமி | TN government is responsible for Milk contamination : Ponnusamy

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (08/06/2017)

கடைசி தொடர்பு:11:28 (09/06/2017)

’பால்வளத்துறை அமைச்சரே முழுப் பொறுப்பு’ : பொன்னுசாமி

மதுரையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கலப்படத்தைத் தெரிந்துகொள்ளவும் நடத்தப்பட்ட 
பால் கலப்படம் கண்டுபிடிக்கும் சோதனையில்... ஒரு பால் மாதிரியில் டிடெர்ஜென்ட் ஆயில் கலக்கப்பட்டது தெரிந்தது. இந்தத் தகவலால் தமிழகமே அதிர்ந்துள்ளது.

ponnusamy

 

பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுச்சாமி கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், "தமிழக அரசு சார்பில் மதுரை கோ.புதூரில் இன்று  நடைபெற்ற இலவச பால் பரிசோதனை முகாமில் 108 பால் மாதிரிகளில் ஒரு பால் மாதிரியில் மட்டும் டிடர்ஜென்ட் ஆயில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.  குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எனப் பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்வதை, அது எந்த நிறுவனமாக இருந்தாலும் எவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பாலில் கலப்படம் செய்திருக்கும் அந்நிறுவனத்துக்கு எங்களது 'தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்' சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் அதிரடி ஆய்வுகள் நடத்தி, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி அது எந்த நிறுவனம் என்பதை உடனடியாக பொதுமக்களுக்கு ஒளிவு மறைவின்றி அறிவிக்க வேண்டும் என்பதையும் மதுரை மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கலப்பட பால் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல, பட்டும் படாமல் ஆண்டவன் மேல் பழியைப் போட்டு, தான் தப்பித்துக்கொள்கின்ற வகையில் பதில் தெரிவித்துள்ளார். தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் பேசிய பால்வளத்துறை அமைச்சருக்கு எங்களது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது போன்ற கலப்பட நிறுவனங்களின் பாலை அருந்தி, அதன்மூலம் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எனப் பொதுமக்களில் எவருக்கேனும் உயிருக்கு ஆபத்தோ அல்லது வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டாலோ அதற்கு பால்வளத்துறை அமைச்சரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க