Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”18 வருஷமா பாக்குறேன்... அப்ப இருந்த ஊட்டி இப்ப இல்ல..!” - ஓர் ஊட்டிவாசியின் வேதனை #VikatanExclusive

ஊட்டி

1819 ம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆட்சியராகப் பணியில் இருந்தார் ஆங்கிலேயரான ஜான் சல்லிவன். விடுமுறை நாள்களை எப்படி கழிக்கலாம் என யோசித்தவருக்கு மலை உச்சியிலுள்ள அந்த இடத்தைப் பற்றிய தகவல் வருகிறது அந்த இடத்தின் சிறப்புகளைக் கேள்விப்பட்டவுடன் அங்கே எப்படியாவது சென்று விடுவது என முடிவெடுக்கிறார். பழங்குடியின மக்களின் உதவியோடு கோத்தகிரி வழியாக கரடு முரடான மலைப்பாதைகளின் வழியாக அந்த இடத்தைச் சென்றடைகிறார். அங்கே சென்றவுடன் அவருடைய பயணக் களைப்பு மறைந்து போகிறது. கேள்விப்பட்டது போலவே மனதையும் உடலையும் புத்துணர்ச்சி ஆட்கொள்ள அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போகிறது. பின்பு அவர் அங்கேயே தங்குவதற்கு வீட்டை கட்டியதும், நீலகிரியின் தந்தை என அழைக்கப்பட்டதும் தனி வரலாறு. அத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த இடம் ஒத்தகமந்து என அழைக்கப்பட்ட உதகமண்டலம். சுருக்கமாக ஊட்டி.

ஆனால் ஊட்டி கடந்த 20 ஆண்டுகளில் அதன் மக்களின் வாழ்வியல், காடுகள், வாழும் விலங்குகள், காலநிலை, சுற்றுச்சூழல் எனப்
பெருமளவு மாற்றத்தைக் கண்டிருக்கிறது அந்த மாற்றத்தை அங்கே இருப்பவர்களை விடவும் சிறிது கால இடைவெளியில் ஊட்டிக்குச் சென்று வந்தவர்களுக்கு எளிதில் தெரியும். அப்படி சில வருடங்களுக்கு பின்னால் சமீபத்தில ஊட்டிக்குச் சென்றபோது என்ன மாற்றங்களை உணர்ந்தீர்கள் என சங்கரன்கோவிலைச் சேர்ந்த துரை மோகன்ராஜிடம் கேட்டோம்...

"18 வருடங்களுக்கு முன்னால் 1999ல் கல்லூரியில் சேருவதற்காகப் பயணித்த முதல் பயணம் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து பாக்கு மரங்கள் அடர்த்தியாக நிறைந்திருந்த சாலையின் வழியே பேருந்து சென்று மலை ஏற ஆரம்பித்தவுடன் ”மலைகளின் அரசி உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்று பலகை இருந்தது. பெயருக்கு அல்ல; அது நிஜமாகவே அரசிதான் என்று நான் அங்கு தங்கியிருந்த காலங்களில் உணர்ந்தேன்.

அப்பொழுது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்வதற்கு குறைவான பேருந்துகளே இருந்தன. அதேபோல மேலே செல்லும் கார், வேன்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருந்தது. முன்பெல்லாம் மலையில் ஏற ஆரம்பித்து விட்டாலே சுத்தமான காற்று, தைல மரங்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனால், பல வருடங்கள் கழித்து இப்பொழுது செல்லும்போது கரும்புகை வாசத்தையே அதிகமாக உணர முடிகிறது.

ஊட்டி

வழியெங்கும் குரங்குகள் இருந்தாலும் அதன் நடவடிக்கைகள் மாறியிருக்கின்றன. முன்பெல்லாம் வாகனங்கள் வருவதைப் பார்த்தாலே மரத்தில் ஏறிவிடும் குரங்குகள் தற்பொழுது ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் பயமின்றி அருகே வந்து ஏதாவது உணவுப்பொருட்கள் கிடைக்குமா எனக் கையேந்தி நிற்கின்றன. சுற்றுலாப்பயணிகள் தொடர்ச்சியாக உணவை அளித்ததனால் ஏற்பட்ட விளைவு இது.

ஊட்டி ஏரியின் நிலைமை மிகவும் மோசம். அது தற்பொழுது மாநகரின் ஒட்டுமொத்த சாக்கடைகள் சேரும் இடமாகிவிட்டது, ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகும் பரப்பளவும் பெருமளவு காணாமல் போய் விட்டன. காலையிலும் மாலையிலும் ஊட்டியின் சாலைகளில் நடப்பதற்காகவே அங்கே தங்கியிருந்த ஆட்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது. மக்கள் எங்கேயும் நடந்து செல்ல விரும்புவதில்லை. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டதன் காரணமாக காற்றும் மாசடைந்துவிட்டது.

பல வருடங்களுக்கு முன்புவரையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஊட்டியில் பார்ப்பது அபூர்வம். குளிர்பானங்கள் கிடைத்தாலும் கூட கண்ணாடி பாட்டிலில்தான் கிடைத்தன. ஆனால் தற்பொழுது  பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஊட்டியில் அதிகமாகிவிட்டது. ஊட்டியின் பசுமையான புல்வெளிகளையும் அதில் மேயும் ஆடு மாடுகளையும் இன்று காணமுடியவில்லை. ஊட்டிக்குச் செல்லும் வழியில் இருந்த சிறு அருவிகளும் வறட்சியால் வற்றிவிட்டன.

ஊட்டிஊட்டியில் தண்ணீருக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என நினைத்திருந்தேன். ஆனால் காலநிலை மாற்றத்தால் மழை சரியான அளவில் பெய்வதில்லையாம். முன்பெல்லாம் பகலில்கூட சற்று குளிர் தெரியும். ஆனால் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்துவிட்டது.

ஊட்டிக்குச் சென்றாலே எங்கிருந்து பார்த்தாலும் பசுமை தெரியும் என்ற நிலை மாறி கான்கிரீட் கட்டிடங்களே அதிகமாக இப்பொழுது கண்களுக்குத் தெரிகின்றன. கட்டுமான விதிமுறைகளுக்கு மாறாக ரிசார்ட்களும்,ஹோட்டல்களும் தாறுமாறாக அதிகரித்திருக்கின்றன.

மொத்தத்தில் மலை அரசி தனது அழகை இழக்க ஆரம்பித்துவிட்டாள் என்றே சொல்லத் தோன்றுகிறது. பொதுவாக வெளிநாடுகளில் இந்த மாதிரி இடங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். அந்த இடம் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும். ஆனால் நமது ஊரில் இயற்கையைப் பாதுகாக்க அரசு தவறி விட்டது. ஊட்டியைப் பாதுகாக்க அரசு அங்கே மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்ய வேண்டும். கட்டுமானப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு கனரக வாகனங்களுக்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் ரயில் பாதையைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒன்று இனிமேலும் அரசு தாமதித்தால் ஊட்டி அதன் தனித்தன்மையை முற்றிலும் இழந்து விடும்” என்றார்.

மோகன்ராஜ் மட்டுமில்லை. பல நாள்கள் இடைவெளிக்கு பின் ஊட்டிக்குச் செல்லும் அனைவருமே உணரும் ஒரு விஷயம்
"ஊட்டி முன்னாடி மாதிரி இப்போ இல்லை" என்பதாகத்தான் இருக்கும். மாற்றங்கள் நல்லதுதான். ஆனால் அவை சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?

மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ள நீலகிரி  இயற்கையால் நமக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடை. 1986 ம் ஆண்டில் இந்தியாவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகம் என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். உலகில் புலிகளும், ஆசிய யானைகளும் மற்ற இடங்களில் அழிந்தாலும் கடைசியில் அவை வாழும் இடம் நீலகிரியாகத்தான் இருக்கும் என்ற ஆராய்சியாளர்களின் கூற்று  பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்தால் மலை முழுதும் நீல நிறத்தில் மாறிவிடுவதால்தான் அதற்கு நீலகிரி என்றே பெயர் வந்தது வரலாறு. ஆனால் இப்பொழுதோ மலை முழுவதும் கான்கிரீட் கட்டிடங்கள்தான் காணப்படுகின்றன இனிமேலும் அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் மலை அரசியின் அழகை எதிர்கால சந்ததியினர் புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement