Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை

யோகா

பெண்கள் வாழ்வின் முழுமையே திருமண பந்தத்தில்தான் உள்ளது என்ற சூழல் சமூகத்தில் நிலவுகிறது. பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாக செயல்படுவதில்தான் தங்கள் பிறப்பின் லட்சியமே அடங்கியுள்ளது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பல பெண்கள் தனக்கென வேலை, பொழுதுப்போக்கு என எதுவும் இல்லாமல், அனைத்தையும் துறந்து குடும்பமே கதி என இருக்கின்றனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரச்னைகள் எழும்போது அந்தப் பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. குடும்பத்தின் அன்றாடத் தேவைக்கு என்ன செய்வது? குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குவது? எனப் பெரும் கவலைக்குள் மூழ்கிவிடுகின்றனர். அதிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும் பெண்களில் ஒருவராக, சாதனைப் பெண்மணியாகத் திகழ்கிறார் சிவகாசியைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஞானவாணி. குடும்ப வலி தந்த வலிமையில்தான் சாதித்த கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னோட சொந்த ஊர் சாத்தூர். எல்லா பொண்ணுங்களைப் போல எனக்கும் பட்டப்படிப்பு முடிச்சதும் கல்யாணம். கல்யாணங்கிற பந்தத்தை நாங்க இரண்டு பேரும் முழுசா புரிஞ்சுக்கிறதுக்குள்ள குழந்தைப் பொறந்துருச்சு. கணவர்தான் நமக்கு எல்லாம்னு முடிவு பண்ணி எந்த வேலைக்கும் போகாம, வீட்டு வேலை, குழந்தையை வளர்க்கிறதுனு இருந்தேன். சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் தொடங்கி டைவர்ஸ் நோட்டீஸ் வர்ற அளவுக்குப் போயிடுச்சு. வேலைக்கே போகாத எனக்கு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கிற பொறுப்பு. எனக்கு வெளியுலகமே தெரியாது. இனி இப்படிதான் நம் வாழ்க்கை என்பதை ஏத்துக்கவே முடியல. அழுது அழுது மனஅழுத்தம் அதிகமாயிருச்சு. இனி குழந்தைகளுக்கு நான் மட்டும்தானு மனசுக்கு தெரிஞ்சாக்கூட என்னால அந்த வலியிலிருந்து வெளியேற முடியல'’ எனச் சொல்லும் போதே குரல் தழுதழுத்தது.

யோகா

‘‘மன அழுத்ததிலிருந்து விடுபடுறதுக்காக யோகா கத்துக்கிட்டேன். அப்ப என்னோட பெரிய பையன் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். சின்ன பையன் எல்.கே.ஜி. முதல்ல சிரமமா இருந்துச்சு. தொடர்ந்த முயற்சி, பயிற்சியோட பலனா யோகாலேயே பிஜி டிகிரி படிக்கிற வரைக்கும் உயர்ந்தேன். என்னோட பொறந்த வீட்ல கொஞ்சம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. சமூகத்துல அங்கீகாரம் கணவர்தானு நினைச்ச என் நினைப்பு பொய்யாயிருச்சு. அவரோட அடையாளம் இல்லாம, நமக்குனு ஒரு அடையாளம் வேணும்ன்ற வெறி மட்டும் மனசுல நெருப்பா இருந்தது. ஸ்கூல்ல போயி பிள்ளைகளுக்கு யோகா கிளாஸ் எடுத்தேன். வீட்லேயும் பெண்கள், குழந்தைகளுக்குனு பிஸியா கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல மாநில அளவுல யோகா போட்டி நடந்தது. அதுல கலந்துக்கிட்டு முதலிடத்துல வந்தேன்’’ எனப் பெருமையாக சொன்னவர், அதன் பின் நடந்த சாதனைகளை விவரிக்கத் துவங்கினார்.

“முதல் வெற்றி தந்த ஊக்கத்தால 2013-ல் 20 நிமிஷத்துல 310 ஆசனங்கள் செஞ்சு உலக சாதனை பண்ணினேன். அடுத்து, 2015-ல ஜிம் பால்ல 1875 ஆசனங்கள் பண்ணி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல இடம் பிடிச்சேன். இப்பக்கூட கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுவும் சீக்கிரம் கிடைச்சிரும்னு’’ என நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானவாணி.. தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் விதத்தைப் பகிர்ந்தார்.

“வர்மக்கலையும் எனக்கு அத்துப்பிடி. யோகா, வர்மக்கலையால பெண்களோட வாழ்க்கையில ஏற்படுற மனப்பிரச்னை, உடல் பிரச்னையைத் தீர்க்க முடியும். அதுக்கான பயிற்சிகளைப் பெண்களுக்குக் கத்துக் கொடுத்துட்டு வர்றேன். எனக்குப் பாரம்பர்யத்துல அவ்ளோ பற்று. வளர்ற தலைமுறை நல்ல உணவு, ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை. அதனால குழந்தைங்களுக்கு இலவச யோகா பயிற்சியோட, சித்தர் வாழ்வியல் நெறி முறைகளையும் கற்றுத் தர்றேன். குழந்தைங்க நிறையப் பேர் ஆர்வமா கத்துக்கிட்டு வர்றாங்க. யோசிச்சுப் பார்க்கிறப்ப, எவ்ளோ அடிச்சாலும், ஸ்பின் பால் மாதிரி உயர எழுந்ததாலதான் நாம இன்னிக்கு இந்த அளவுல உயர முடிஞ்சதுனு நினைச்சுப்பேன்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close