Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு மருத்துவக் கல்லூரியை இன்று திறந்துவைக்கிறார் முதல்வர்! விழாக்கோலம் பூண்டது புதுக்கோட்டை

231 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைக்கிறார். கட்சி கொடிகள், மின்விளக்குகளால் புதுக்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.

புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரியை அறிவித்ததுடன், 231 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். அதன்பிறகு, புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் மச்சுவாடி அருகே அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட இடம் தேர்வுசெய்யப்பட்டு, 11 மாதத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ள, இந்த மருத்துவமனையில், 75 ஆயிரத்து 56 சதுர அடி பரப்பளவில் புறநோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 3 லட்சத்து 28 ஆயிரத்து 332 சதுர அடி பரப்பில், உள்நோயாளிகள் பிரிவு 5 மாடி கட்டடமாக அமைந்துள்ளது. இங்கு, வெளி நோயாளிகள் பரிசோதனை அறைகள், ரத்த வங்கி, ரத்தப் பரிசோதனை மையங்கள், சிறு அறுவைசிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ வார்டு, ஸ்கேன் பிரிவு, ரத்த சுத்திகரிப்புப் பிரிவு மற்றும் அனைத்துத் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் எனப் பல நவீன வசதிகள் உள்ளன.

முதல்வர் வருகைக்காகக் காத்திருந்த இந்த மருத்துவமனை, இன்று திறப்பு விழா காணுகிறது. இந்த விழாவுக்காக, சென்னையிலிருந்து  விமானம்மூலம் திருச்சி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கிருந்து கார் மூலம் மதியம் 12.30 மணிக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு வந்து சேர்கிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் நடக்கும் மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில், மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள், எம்பி., மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்துகொள்கின்றனர்.

இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார். முதல்வரின் வருகைக்காக நேற்றிலிருந்தே, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியிலிருந்து புதுக்கோட்டைவரை அ.தி.மு.க. கொடிகள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் இருக்கும் மின் விளக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் இருபுறமும் பொக்லைன் எந்திரங்கள்கொண்டு சீர் செய்யப்படுகிறது. இரவோடு இரவாக இந்தப் பணிகள் நடந்தன. அதேபோல முதல்வர் வருகைக்காக திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை எனப் பல மாவட்ட போலீஸார் புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ளனர். 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் திருச்சி முதல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் சார்பில்  வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement