Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மன்னார்குடி தரப்பு கைவிட்டது! 2 ஆயிரம் பேருடன் ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார் பரஞ்ஜோதி!

திருச்சி மாவட்ட அ.தி.மு.க-வில் முக்கிய இடம்பிடிக்க நினைத்தார், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி. அது இயலாததால் இரண்டாயிரம் பேருடன் இன்று ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் தொடக்கத்தில், முன்னணி அமைச்சராக வலம் வந்தவர் பரஞ்ஜோதி. திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்த பரஞ்ஜோதிக்கு  ஏழு துறைகளை வழங்கினார் ஜெயலலிதா. செல்வாக்கு மிக்க  அமைச்சராக வலம்வந்த இவர், மருத்துவர் ராணி என்பவர் கொடுத்த பாலியல் மற்றும் மோசடிப் புகாரால் அனைத்து பதவிகளையும் இழந்தார். மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என நினைத்திருந்த வேளையில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்த வளர்மதி அமைச்சரானார். அவரே அமைச்சராகத் தொடர்ந்து நீடித்துவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் 5ஐ அ.தி.மு.க கைப்பற்றியது. இதில், திருச்சி கிழக்கு வெல்லமண்டி நடராஜனும், ஸ்ரீரங்கம் வளர்மதியும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மேலும் வெல்லமண்டி நடராஜன், மாவட்டச் செயலாளராக்கப்பட்டார்.

அதோடு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் மணப்பாறை சந்திரசேகர், மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி, முசிறி செல்வராஜ் ஆகிய எம்எல்ஏ-க்கள் சசிகலா அணியில் உள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த எதையும் தினகரன் தரப்பு செய்து தரவில்லை என்கிற மனக்குமுறலில் இருக்கிறார்கள். இவர்கள், அணிமாற வாய்ப்புள்ளதாகவும் பேச்சு உள்ளது.

இந்நிலையில்தான், மருத்துவர் ராணி விவகாரத்தில் சமரசம்செய்து, பறிபோன வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைக்கும் எனக் காத்திருந்தார். மேலும், மன்னார்குடி தரப்பை நம்பி, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்குக் காய் நகர்த்தினார். அதுவும் நடக்கவில்லை. இதனால் கோபமடைந்த பரஞ்ஜோதி, ஓ.பி.எஸ். அணியில் பேசி, திருச்சி மாவட்டச் செயலாளர் பதவியை உறுதிசெய்துள்ளார். இன்று முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்புவிழாவுக்கு வருகை தரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி  2,000 பேருடன் ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement