Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் கல்விக் கண்காட்சி... ரஷ்யாவில் மேல்படிப்பு படிப்பதற்கான வழிகாட்டி!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில், ஜூன் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மருத்துவம், பொறியியல் மற்றும் ஏவியேஷன் கல்வியைக் கற்பிக்கும் முன்னணி ரஷ்ய அரசுக் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

ரஷ்யாவின் பல்வேறு மருத்துவக் கல்வி நிலையங்கள், 500 மருத்துவப் படிப்புக்கான இடங்களை இந்திய மாணவர்களுக்கு 30 சதவிகிதம் வரை சலுகைக் கட்டணங்களில் வழங்க உள்ளன. இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற முதல்கட்ட ரஷ்ய கல்விக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு `ஃப்ரீ டிபார்சர் ஓரியன்டேஷன்' எனப்படும் முன் புறப்பாடு நோக்குநிலை நிகழ்ச்சி தென்னிந்திய ரஷ்யக் கூட்டமைப்பின் துணைத் தூதரகம் சார்பில் நடத்தப்படும்.

இதுகுறித்தான பத்திரிகையாளர் சந்திப்பு, ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டடி அப்ராடு எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான டாக்டர் ரவிச்சந்திரன், ரஷ்ய கலாசார மையத்தின் இயக்குநர் மைக்கேல் ஜே.கோர்படோவ், ரஷ்ய ஸ்டேட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஸ்வெட்லானா வாஸ்கினா மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகரான யூரி பெலோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரஷ்ய கல்விக் கண்காட்சி

இந்தக் கண்காட்சி குறித்து ரஷ்ய கலாசார மையத்தின் இயக்குநர் மைக்கேல் ஜே.கோர்படோவ் கூறுகையில், “ப்ளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக் கடிதம் இந்தக் கண்காட்சியிலேயே வழங்கப்படும். பொறியியல் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்பட ரஷ்ய கல்வி நிறுவனங்களில் அதிக சலுகைக் கட்டணங்களில் அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்” என்றார்.

மேலும் அவர், இரு நாடுகளுக்கிடையேயான நெருங்கிய உறவு பற்றியும், ரஷ்ய கல்வி அமைப்பு பற்றியும் இந்திய மாணவர்களுக்காக ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் வசதிவாய்ப்புகளைப் பற்றியும் விவரித்தார். ஆங்கிலமுறைக் கல்வியானாலும் ரஷ்ய மொழி மற்றும் கலாசாரம் பற்றி முறையான பயிற்சிகளை அளிப்பதாகவும் கூறினார். சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் ஏறத்தாழ 22 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை இந்திய மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.

ரஷ்ய ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்வெட்லானா வாஸ்கினா, ``இதுவரை 1,004 இந்திய மாணவர்கள், ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளனர். மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியும் புதுப்பிக்கப்பட்ட விடுதிவசதியும் இருப்பதால், மாணவர்கள் அங்கு வந்து மனநிறைவுடன் பயிலலாம்'' என நம்பிக்கை தெரிவித்தார். இங்கு படிக்கும் இந்திய மாணவர்களுள் 90 சதவிகிதம் பேர், படிப்பு முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்பி மருத்துவ சேவை அளிப்பதாகவும், மீதமுள்ள 10 சதவிகித மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் சென்று பணிபுரிவதாகவும் கூறினார்.

ரஷ்யக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகரான யூரி பெலோ, ``ரஷ்யாவில் 600-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும், 63 மருத்துவப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ரஷ்யாவில் பயிலும் 90 லட்சம் மாணவர்களுள், 12,000 பேர் இந்திய மாணவர்கள். இந்த வருடமும் இந்திய மாணவர்களை அதிக அளவில் வரவேற்க ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் காத்திருக்கின்றன’’ என்றார்.

டாக்டர் ரவிச்சந்திரன், ரஷ்யப் பல்கலைக்கழகங்களின் கல்விமுறை பற்றியும், கல்வி மற்றும் விடுதித்தரம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், ``நீட் தேர்வு போன்ற மாற்றப்பட்ட இந்திய மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் குழப்பம் நீடிக்கும் இந்தச் சூழ்நிலையில், இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும்  இந்தக் கண்காட்சி, சென்னையில் 19-வது முறையாக நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை, தென்னிந்திய ரஷ்யக் கூட்டமைப்பின் துணைத் தூதரகம் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராடு ஆகியவை இணைந்து நடத்துகின்றன. மாணவர்கள் பட்டம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் சேர, சம்பந்தப்பட்ட முக்கியப் பாடங்களில் அல்லது பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 சதவிகிதம் போதுமானது. தமிழ்வழியில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்பது மகிழ்ச்சியான தகவல்.

- மு.சசிக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement