Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘வேலை செய்ற எங்களை ஒடுக்க... நடத்தையைப்பத்தி பேசுவீங்களா?’ - கொதிக்கும் மகிளா காங்கிரஸ் ஹசீனா சையத்

ஹசீனா சையத்

சமீபத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பல நிர்வாகிகளுடன் மகிளா காங்கிரஸின் அகில இந்தியச் செயலாளர், ஹசீனா சையத் மற்றும் மாநிலத் தலைவர் ஜான்சி ராணியும் கலந்துகொண்டனர். அப்போது, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ஹசீனா சையத்தைத் தாக்கியுள்ளனர். 

'இந்தத் தாக்குதல் புதிதல்ல, அடிக்கடி நடக்கக்கூடியதுதான். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயதாரணி மீது கேஸ் போட்டாங்க. அதேபோல ஒன்பது மாசங்களுக்கு முன்னாடி என் மேலேயும் ஒரு கேஸ் போட்டாங்க. அதற்கான சாட்சியம் எதுவும் இல்லாததால் தள்ளுபடி ஆகிடுச்சு. அப்பவும் விடாமல், உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குப் போட்டிருக்காங்க. இப்படி யாரையெல்லாம் பிடிக்கலையோ அவங்க மேலே வழக்கு, தாக்குதல் என தொடர்ந்துட்டுதான் இருக்கு'' என ஆதங்கத்தோடு தொடர்கிறார் ஹசீனா. 

“இது காங்கிரஸ் கட்சியில் மட்டுமில்லே, எல்லாக் கட்சியிலுமே நடக்குது. கட்சிகளில் பெண்களுக்கான உரிமையும் இடமும் சுலபமா கிடைக்கிறதில்லை. பெண்களுக்காகக் கட்சியில் 33% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுது. அதில், சில சதவிகிதம்கூட எங்களுக்குக் கொடுக்கப்படலை என்பதே மறுக்கமுடியாத உண்மை. ஒன்பது மாதங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன். எல்லாத்தையும் தாண்டி வந்துவிடலாம், இதுவும் கடந்துபோகும்னு ஒவ்வொரு நாளும் நினைச்சுப்பேன். ஆனால், தொடர்ந்து பிரச்னைகளைச் சந்திச்சுட்டுதான் இருக்கேன். அன்னிக்கு சத்யமூர்த்தி பவனில் ஜான்சி ராணியின் வழிகாட்டுதலில், பிக்பாக்கெட்டரான கெளரி கோபால், என் சேலையைப் பிடிச்சு இழுத்துத் தாக்கினார். அவரைத் தொடர்ந்து ஜான்சி ராணியும் பின்புறமாக வந்து என் முடியைப் பிடிச்சு இழுத்து கழுத்தில் இருந்த கருகுமணியை அறுத்துட்டாங்க. இப்படி மோசமான ஒரு நிகழ்வு நடந்ததைச் சொன்னால், 'மீட்டிங் முடிச்சுட்டு வந்து பேசுறேன்'னு திருநாவுக்கரசர் போன்றோர் சாதாரணமா சொல்றாங்க.

மகிளா காங்கிரஸ்

இந்தச் சம்பவத்தோடு முடிந்ததால் பரவாயில்லை. வேறு ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். இப்படித்தான் நக்மா அவர்களையும் ஆட்களைவெச்சு தாக்க வந்தாங்க. நல்லவேளையாக எனக்கு முன்னாடி விஷயம் தெரிஞ்சு அவங்களை காப்பாத்திட்டேன். கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பயந்து பயந்துதான் எங்க வேலையைச் செய்ய வேண்டியிருக்கு. ஐம்பது ஆண்கள் சுற்றிநின்று வேடிக்கைப் பார்க்கிறார்களே தவிர யாருமே தட்டிக் கேட்கிறதில்லை. கட்சியில் இருக்கும் பெண்களை ஆயுதமாக ஆண்கள் பயன்படுத்திக்கிறாங்க. அது புரியாமல் ஜான்சி ராணி மாதிரியான பெண்கள் இதுபோல தவறான முறையில் நடந்துக்கறாங்க. இதெல்லாம் எப்போ மாறுமோ தெரியலை'' என்று ஆதங்கப்பட்டார் ஹசீனா. 

பல கட்சிகளிலும் பெண்களுக்குச் சரியான மதிப்போ, மரியாதையோ, பதவிகளோ கொடுப்பதில்லை. நல்லபடியாக கட்சிப் பணியை செய்துவரும் பெண்களை நடத்தை ரீதியாகவே விமர்சிப்பது தொடர்கதையாக உள்ளது. 

 

 

 

'' 'எவ்வளவு மேக்கப், லிஃஸ்டிக் பாரு', 'டிசைன் டிசைனா புடவைக் கட்டுறதைப் பாரு'னு எங்க காதில் விழுற மாதிரியே பேசுவாங்க. சாதாரணமாக ஒரு பெண் வெளியில் போனாலே தன்னை மதிப்புடன் காட்டிக்க அலங்காரம் செய்துக்கறது நார்மல். அப்படித்தான் நாங்களும் செய்யறோம். ஆனால், பொதுவெளியில் இருக்கும் பெண்களை மேக்கப்பை வைத்து, ஆண்களுடன் தொடர்புப்படுத்தறதும், நடத்தையை அசிங்கப்படுத்தறதும் வன்முறையின் உச்சம். கட்சியில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவு. நிறைய ஆண்கள் இருந்தாலும், முதல் வரிசையில் ஒரு பெண்ணுக்கு உட்காரவே இடம்கொடுக்க மாட்டாங்க. கட்சி மீட்டிங்கில் இருபது பேர் ஆண்களாகவும், ஐந்து பேர் பெண்களாகவும் இருந்தால், ஒரு பெண் நிர்வாகியையும் பேச அனுமதிக்க மாட்டாங்க. இப்படியெல்லாம் செய்தால், எங்களால் எப்படி சமூகப்பணி செய்ய முடியும். மொத்தத்தில் எங்களுக்குப் பாதுகாப்பே கிடையாது. பெண்களை அரசியலில் வளரவிடக் கூடாதுனு நினைக்கிறவங்க தங்களை மாத்திக்கணும்'' என் கொதிப்புடன் முடித்தார் ஹசீனா. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement