வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (09/06/2017)

கடைசி தொடர்பு:18:21 (09/06/2017)

“அடங்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்பேன்...” கெடு விதிக்கும் டி.டி.வி.தினகரன்!

எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் மோதல்


அ.தி.மு.க கட்சி நடவடிக்கைகளில் இருந்து 45 நாள்கள் வனவாசம் சென்றுவிட்டு திரும்பியிருக்கும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தற்போது  முழுவீச்சில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தபோது, டி.டி.வி. தினகரனை 12 எம்எல்ஏ-க்கள் மட்டுமே பார்த்தனர். அதன்பின்னர், ஜூன் 3 ஆம் தேதி சென்னை வந்த அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடினர். எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று வரிசைகட்டி நின்று தினகரனை வரவேற்றனர். 2014 ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதா சென்னை திரும்பியபோது, அவரை மலர் தூவி தொண்டர்கள் வரவேற்றதுபோல, டி.டி.வி.தினகரனையும் மலர் தூவி வரவேற்றனர்.

பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க ஜூன் 4 ஆம் தேதி தினகரன் செல்வதற்கு முன்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் பேசி சில நிபந்தனைகளை விதித்துவிட்டு, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்களிடமும் பேசினார். மன்னார்குடி வகையறாக்களை சந்திப்பதையே தவிர்த்துவந்த சசிகலா, டி.டி.வி.தினகரனைச் சந்திக்க உடனே சம்மதம் தெரிவித்தார். ஜெயிலில் இருக்கும் சசிகலாவிடம் பேசிய டி.டி.வி. தினகரன், தமிழக அமைச்சர்கள் போடும் ஆட்டத்தையும் விவரித்தார். அப்போது, கட்சித் தொடர்பாக சில ஆலோசனைகளை சசிகலா வழங்கினாராம். இதுகுறித்து, நிருபர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ''இரு அணிகளின் இணைப்புக்கு 60 நாள் காலஅவகாசம் கொடுக்கலாம் என்று சசிகலா கூறியிருக்கிறார். அவர்களின் நடவடிக்கையைப் பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் நான் ஈடுபடுவேன். என்னை நீக்கி வைக்கவும், ஒதுக்கி வைக்கவும் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது'' என்று உறுதியாகக் குறிப்பிட்டார்.

சென்னை திரும்பியது முதல் தனது அடையாறு வீட்டுக்கு வரும் கட்சி நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார். தினகரனை இதுவரை 32 எம்எல்ஏ-க்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். தன்னைச் சந்திக்கும் கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களிடம், ''விரைவில் மாற்றம் வரும். தைரியமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுங்கள். அமைச்சர்கள் சிலர் சுயநலமாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதுபோன்ற பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால், ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டேன். உங்கள் தொகுதி கோரிக்கைகளை முதல்வரைச் சந்தித்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

டி.டி.வி. தினகரனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, ''முன்பைவிட இப்போது டி.டி.வி.தினகரன் உற்சாகமாக இருக்கிறார். கட்சி வளர்ச்சிப் பணிகளில் வேகம் காட்டச்சொல்லி இருக்கிறார். எந்நேரமும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் என்பதால், அதற்கு ரெடியாக இருக்கும்படி சொல்லியுள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க சார்பில் சிறப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறார். 

டிடிவிதினகரன்


சுற்றுப்பயணம் பற்றி கேட்டபோது சற்று அமைதிகாக்கச் சொல்லி இருக்கிறார். இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தினகரனின் விருப்பம். தான், அதற்கு ஒருநாளும் முட்டுக்கட்டை போட மாட்டேன் என்று குறிப்பிட்டார். இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான நம்மிடம் 50 எம்.பி-க்கள் உள்ளனர். யாருக்கும் நாம் பயப்பட வேண்டாம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எப்படி  ஆட்சியும், கட்சியும் கட்டுக்கோப்பாக இருந்ததோ அதுபோல இப்போதும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கட்சித் தலைமைக்கு அனைவரும் கட்டுப்பட்டு விசுவாசத்துடன நடந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் சசிகலா 60 நாள் டைம் கொடுத்துள்ளார்கள். அதைத்தான் தினகரன் வெளியே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்' என்றனர்.

டி.டி.வி.தினகரனின் வேகத்தைப் பார்த்து எம்.நரடாஜன், திவாகரன் உள்ளிட்ட மன்னார்குடி வகையறாக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறார்களாம். அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியபோது அவர்களிடம் டி.டி.வி.தினகரன், சீறி இருக்கிறார். ''135 எம்.எல்.ஏக்களில் நம்மிடம் 122 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். சில அமைச்சர்கள் தங்களது சுயலாபத்துக்காக பயந்துபோய் வீண் எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஜாதியைச் சொல்லி அணி திரள்வார்கள் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. ஜாதிப் பெயரைச் சொல்லிக்கொண்டு, ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஓடிவிட்டார்களா? ஒவ்வொருவரும் அவரவர் எதிர்காலத்தை முன்வைத்துதான் முடிவு எடுப்பார்கள். இப்போது இருக்கும் அமைச்சர்களின் சொந்த விருப்பத்தை மட்டும் முன்வைத்து ஆட்சி நடத்த முடியாது. கட்சியின் கொள்கை கோட்பாடுகளை முன்வைத்து அம்மா வழியில்தான் ஆட்சி செய்ய வேண்டும்'' என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார் தினகரன். புதிய அமைச்சரவை எப்படி இருக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ணி வைத்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமாக இருக்கும் பிரமுகர்கள்.

அதனால்தான், எம்.நடராஜன் பதறிப்போய் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒருவர் பொறுத்துக்கொள்வதன் மூலம் இருவர் நட்பு நீடிக்கும் என்ற கருத்தை ஏற்று அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதைத் தவற விட்டால் காலம் நம்மை மன்னிக்காது'' என்று கூறியுள்ளர். பி.ஜே.பி மூத்த அமைச்சர் வெங்கைய நாயுடுவும், ''ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற அ.தி.மு.க.-வின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி டி.டி.வி.தினகரன் தரப்பில் விசாரித்தபோது, ''இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணமும். ஆனால், அவர்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படவில்லை என்றால், உரிய நடவடிக்கை எடுக்க டி.டி.வி. தினகரன் தயங்க மாட்டார்'' என்று தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்