Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அவங்களுக்கு கோயிலுக்குள்ள அனுமதி இல்லை...!” - சாதியால் ஒடுக்கப்படும் பெருஞ்சலங்கையாட்டம்

பெருஞ்சலங்கையாட்டம்

கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இருக்கிறது அந்தச் சிறிய கிராமம். இரைச்சலற்ற அமைதியான நகரங்கள்போல் இல்லாத பசுமைமிக்கச் சாலைகளும், திங்களூர் என்ற பெயர்ப் பலகையும் அங்கே நம்மை வரவேற்றன. விழாக்காலம் என்பதால், ஊருக்குள் இருக்கும் அம்மன் கோயிலில் ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டு, மாலைப்பொழுதில் கலை நிகழ்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது. கூடவே, கோயிலின் பின்பக்கத்திலிருந்து ஜல்... ஜல்... என எழுந்தது சலங்கை ஓசை.

பார்ப்பதற்கு எடைகூடிய வெண்கலத்தில் பெரியவடிவில் செய்யப்பட்ட சிப்பிகள்போல் இருந்தன ஒவ்வொரு சலங்கையும். அதை, பெருஞ்சலங்கை என்கிறார்கள். ஒரு மனிதன் சராசரியாக இரண்டு கிலோவரை தனது இரு கால்களாலும் சலங்கைகளைத் தாங்க முடியும். ஆனால், இரண்டு குழந்தைகளின் கனம் இருக்கும்  சுமார் 20 சலங்கைகளை அசாத்தியமாக எடுத்து இருகால்களிலும் கட்டிக்கொண்டனர். அவற்றைக் கால்களில் கட்டிக்கொண்டு நீண்டநேரம் நிற்பதே சிரமம் என்னும் சூழலில், அவர்கள்  கோயில் முன்பு ஆடத் தயாராகினர். அனைவருமே தொழில்முறைக் கலைஞர்கள். அப்படிச் சலங்கை கட்டிக்கொண்டிருந்தவர்களில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவனும் அடக்கம்.

"ஊர்த் திருவிழாக்களில் அப்போ... இங்க இருக்கற அண்ணே, மாமா எல்லாரும் ஆடுவாங்க. நான், அவுங்ககிட்ட கத்துகிட்டேன். அவுங்க எல்லாரும் ஆடும்போது, அவுங்க பின்னாடி நின்னுகிட்டு நானும் கொஞ்ச நேரம் ஆடுவேன்” என்று சிரிப்புடன் கூறுகிறார். அவர் கூறிக் கொண்டிருக்கும்போது மற்ற சிறுவர்கள் அவனைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் பெருஞ்சலங்கை ஆட்டம் தெரிந்திருக்கிறது.

பெருஞ்சலங்கை ஆட்டம், கோவை -  ஈரோடு பகுதிகளில் தமிழக நாட்டார் மரபுக் கலை ஆகும். அந்தச் சலங்கைகள் திடீரென்று சத்தம் எழுப்பி ஆடுவதால் ’உள்ளி விழவு’ என்றும் கூறப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்கள், ''இது தமிழ் இலக்கியத்திலிருந்து வந்த சொல்லாடல்'' என்று சான்றுகளைக் காண்பிக்கிறார்கள். ஆனால், இந்தக் கலையை உயிர்ப்பாகப் பிடித்துக்கொண்டிருக்கும் திங்களூர் பெருஞ்சலங்கை ஆட்டக்காரர்களுக்கு, இதுபோன்று ஏடுகளில் மட்டுமே எஞ்சியிருக்கும் இலக்கியத் தரவுகள் தேவையாக இருக்கவில்லை.

பெருஞ்சலங்கையாட்டம்

கைவிரல்கள் மேலும்கீழுமாக அசைந்து லயம் பிடிக்க... சுற்றி இருக்கும் மொடா மேளம், அளிக்கிச் சட்டி, பறை, தவில் என அத்தனையும் தாளம் சேர்க்க... கால்களைத் தூக்கித் தூக்கிவைத்து நிலம் அதிர... சன்னதம் வந்ததுபோல் அந்தக் கோயில் முன்பு ஆடத் தொடங்குகினர். சலங்கை கட்டிய சிறுவர்கள் அவ்வப்போது பின்னால் நின்று ஆட, சுமார் இருபது நிமிடங்கள் இடைவிடாமல் அந்த ஆட்டம் நீடிக்கிறது. 

“இது, எங்களுக்குச் சின்ன வயசுலேந்து சொல்லிக்கொடுத்த ஆட்டம். பெரிய சலங்கை என்பதால, காலில் கட்டினதும் அப்படியே கால் நரம்பையெல்லாம் பிடிச்சு இழுக்கும்; மயக்கம்கூட வரும். எங்களோட மொத்த வலுவையும் காலுக்குக் கொடுத்து ஆடுவோம். எங்களுக்குத் தெரிஞ்சு முப்பாட்டன் காலத்துலேந்து எங்க குடும்பத்துல ஆடிட்டு இருக்கோம்” என்றார் ஒருவர். காலில் வலிகள் இருந்தாலும் முகத்தில் வியர்வையுடன் சேர்த்து பெருமிதமும் அவர்களிடம் துளிர்க்கிறது.

அதுவரை ஆட்டத்தைக் கைகொட்டித் தாளம்போட்டு ரசித்த பார்வையாளர்கள் அனைவரும் கோயிலுக்குள் செல்கின்றனர். பூசாரி அம்மனுக்காகத் தீபமேற்றிக் காண்பிக்க... கோயிலுக்கு வெளியே இருந்தபடியே ஆட்டக்காரர்கள் அதனைப் பார்க்கிறார்கள். உயிரைக்கொடுத்து ஆடியவர்கள் ஏன் கோயிலுக்குள்ளே செல்லவில்லை என்கிற கேள்வி நமக்கு?

பெருஞ்சலங்கையாட்டம் பக்கவாத்திய கலைஞர்கள்

பெருஞ்சலங்கைக்குப் பக்கவாத்தியம் வாசித்த ஒருவரிடம் இருந்து பதில் அதற்குக் கிடைக்கிறது. ''அவுங்க சாதி வேற; அதனால, அவுங்களுக்குக் கோயிலுக்குள்ள அனுமதி இல்லை. சலங்கைய தூக்கிட்டு ஆடிட்டு சாமிய அப்படியே வெளிய இருந்து பாத்துட்டுப் போயிடணும். பூசாரி வெளிய வந்து அவுங்களுக்கு விபூதி எல்லாம் கொடுத்தனுப்புவார்” என்றார்.

கொங்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள் மட்டுமே உயிர்ப்பித்து வைத்திருக்கும் கலையாக இது இருக்கிறது. ஆனால், சாதியக் கட்டுகள் அங்கே இன்னும் நிலவியிருக்கும் சூழலில் கலை அனைத்து மக்களுக்குமானது என்கிற சிந்தனை அங்கே இருப்பதில்லை. பெரும் கலைஞராக இருந்தாலும், அவர் குறிப்பிட்ட சாதி என்கிற பார்வையில் அனைத்துமே அங்கு சிதைந்துவிடுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கடந்து, பெருஞ்சலங்கையாட்டம் பயணிக்க முடியாமல் சிக்கிக்கொண்டிருப்பதற்கு இதுவும் காரணம்.

சலங்கையைக் கையில் எடுத்துக்கொண்டு எடை தாங்க முடியாமல் ஒரு சாய்மானத்துக்காகக் கோயிலின் சுவர் அருகே ஒரு சிறுவன் செல்கிறான், “அந்தப் பக்கம் எல்லாம் சாயக் கூடாதுய்யா..” என்று கூறிக்கொண்டே ஒருவர், கழற்றிய சலங்கையைத் தோளில் போட்டுக்கொண்டு 'ஜல்... ஜல்...' என ஒலி எழுப்பிக்கொண்டே நகர்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement