"கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கவில்லை!"- விளக்கும் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள்

கல்பாக்கம் அணுமின் நிலையம் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சென்னை அணுமின் நிலைய நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 'சர்வதேச தரத்தில் இயங்கி வருகிறது கல்பாக்கம் அணுமின் நிலையம். கதிர்வீச்சின் அளவு அதிகரித்ததாக வெளியான தகவல்களில் உண்மையில்லை' என்கின்றனர் விஞ்ஞானிகள். 

கல்பாக்கம் அணுஉலை

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம். கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் மீது கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தனர். அவர்கள் பேசும்போது, 'கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி பராமரிப்புப் பணிக்காக மூடப்பட்ட அணுமின் நிலையம், மே மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அணுமின் நிலையம் திறக்கப்பட்ட ஓரிரு நாள்களில் மூத்த பொறியாளர் பார்த்திபனுக்கு (scientific officer-G), அணுமின் நிலைய கதிர்வீச்சுப் பகுதியில் வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பொதுவாக, இந்தப் பணிகளை தொழில்நுட்ப உதவியாளர்கள்தான் செய்வார்கள். பணியாளர்களை முறையாக சோதிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், பார்த்திபன் அங்கே அனுப்பப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் இறந்தார். இதற்கு அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கதிர்வீச்சுதான் காரணம். அதிகாரியின் மரணம் இயற்கையானதாக அமையவில்லை. அன்றைய தினமே,  கட்டடத்தைவிட்டு (Reactor building-1) உடனே வெளியேறுங்கள் என தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிப்பு ஒன்றை அணுமின் நிலைய நிர்வாகம் வெளியிட்டது. காற்றில் உள்ள கதிர்வீச்சின் அளவை இவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. 'ஓர் ஊழியர் எவ்வளவு கதிர்வீச்சை உள்வாங்கலாம்?' என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் சிலவற்றை வரையறை செய்திருக்கிறது. அதன்படி, உள்கதிர்வீச்சின் அளவு 10 சதவிகிதமாகவும் வெளிக் கதிர்வீச்சின் அளவு 90 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் வெளிக் கதிர்வீச்சால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், சென்னை அணுமின் நிலையத்தில் உள்கதிர்வீச்சின் அளவு 30 சதவீதத்தைத் தாண்டிவிட்டது' என்றனர் கவலையுடன். 

இதுகுறித்து கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகளிடம் பேசினோம். 'மூத்த அதிகாரி பார்த்திபனின் மரணத்துக்கு கதிர்வீச்சு காரணம் அல்ல. அவருக்கு உடல்ரீதியாக சில பிரச்னைகள் இருந்தன. சென்னை அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் உள்ளன. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் வரையறையின்படி, அனுமதிக்கப்பட்ட அளவுக்குக்கீழ்தான் சென்னை அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சின் தன்மை உள்ளது' என்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!