ப்ளஸ் டூ-வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தவர் ஜைன துறவி ஆனார்! | State board topper becomes Jain Monk

வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (09/06/2017)

கடைசி தொடர்பு:21:31 (09/06/2017)

ப்ளஸ் டூ-வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தவர் ஜைன துறவி ஆனார்!

ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்த மாணவர், துறவியானார் என்றால், நம்ப முடிகிறதா? அப்படியொரு விசித்திரச் சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. அண்மையில் குஜராத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. வணிகவியல் பிரிவில், வர்ஷில் ஷா என்கிற மாணவர் 99.99 சதவிகித மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்றார். மற்ற மாணவர்கள் அனைவரும் மார்க் ஷீட் பெற பிஸியாக இருக்கையில், வர்ஷில் ஷா ஜைன துறவியாக மாறியிருக்கிறார்.

ஜைனத் துறவி ஆன பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தவர்

அகமதாபாத்தைச் சேர்ந்த வர்ஷில் ஷாவின் பெற்றோர் வருமானவரித் துறை அதிகாரிகள். வர்ஷிலுக்கு, ஜனனி என்கிற மூத்த சகோதரி  இருக்கிறார். இவரின் பெற்றோர், ஜைன மதத்தின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள்; ஜீவகாருண்யத்தை வலியுறுத்துபவர்கள். நீரிலிருந்து மின்சாரம் எடுக்கும்போது நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதால், வீட்டில் குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சியைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இரவு நேரத்தில் அல்லது தேவையானபோது மட்டுமே வர்ஷிலின் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படும்.

இவரின் சகோதரி ஆடிட்டராகப் பணிபுரிகிறார். அவரைப்போலவே இவரும் ஆடிட்டருக்குப் படிப்பார் என நண்பர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வர்ஷிலோ, துறவறப் பாதையைத் தேர்வுசெய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். வீட்டுக்கு ஆண் வாரிசு இவர் மட்டும்தான். ஆனாலும், வர்ஷிலின் பெற்றோர் மகனின் விருப்பத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, தங்கள் மகன் ஜைன துறவியாவதை ஏற்று, மனபூர்வமாக ஆசீர்வதித்தனர்.

காந்தி நகரில் நேற்று வர்ஷில் தீட்சியைப் பெறும் சடங்கு நடைபெற்றது. மகாவீரர் சிலை முன்பு  சாதாரண காதி ஷெர்வானி உடை அணிந்திருந்த வர்ஷில், சம்பிரதாயங்கள் முடிந்ததும் வெள்ளை உடை அணிந்து துறவறம் ஏற்றார்.

துறவியாக மாறியது குறித்து வர்ஷில் ஷா கூறுகையில், ``சிறுவயதிலிருந்தே நிலையான மகிழ்ச்சி, சந்தோஷம் எதில் கிடைக்கின்றன என்பதை அறிய வேண்டும் என்கிற உந்துதல் இருந்தது. என் குரு கல்யாண்ரத்னா விஜயாஜி மகராஜை  ஒருமுறை சந்தித்தேன். ஜைன மதத்தில் உள்ள நுட்பமான பல கருத்துகளை அவர் எனக்கு போதித்தார். சிறுவயதிலேயே  ஜைன துறவியாகிவிட வேண்டும் என முடிவெடுத்தேன். என் குருவோ,  'ப்ளஸ் டூ படித்த பிறகு துறவறம் மேற்கொள்ளலாம்' என உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்று, படிப்பு முடிந்ததும் துறவறம் ஏற்கிறேன்.

மனித ஆசைகளுக்கு முடிவே கிடையாது. ஆயிரத்தை லட்சமாக்க ஆசைப்படுவார்கள். பிறகு, கோடியாக மாற்ற வேண்டும் என ஓடுவார்கள். மனித ஆசை எல்லையற்றது. முடிவும் எல்லையும் கிடையாது. ஜைன துறவிகள் எதையுமே எதிர்பார்ப்பது இல்லை.  அதனால்தான் இவ்வளவு மதிப்பெண் பெற்றும் நான் படிப்பைத் தேடி ஓட விரும்பவில்லை. துறவறம்தான் எனக்கு சிறந்த பாதையாகத் தெரிகிறது. பூமியின் ஆசைகளைத் துறந்து வாழவே விரும்புகிறேன்'' என்கிறார்

ஜைன துறவிகள், கடினமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள். சமையல் செய்து சாப்பிடக் கூடாது. வீடுகளில் பிச்சையெடுத்து உண்ண வேண்டும். வெள்ளை நிற ஆடை மட்டுமே அணியலாம். செல்லுமிடமெல்லாம் நடந்தே செல்ல வேண்டும். வெறுங்காலுடன்தான் நடக்க வேண்டும்.  இத்தகைய கடினமான துறவற வாழ்க்கைமுறையைத் தேர்வுசெய்துள்ள வர்ஷில், இனி `சுவிர்ய ரத்னா விஜயாஜி மகராஜ்' என்ற புதிய பெயருடன் ஆன்மிகப் பாதையில் பயணிப்பார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்