Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அவர் இருந்திருந்தா நாங்க அனாதையா நின்றிருக்க மாட்டோம்!” - கலங்கும் சசிபெருமாள் மனைவி மகிழம் #VikatanExclusive

மதுஒழிப்பு போராட்டம்

மிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக்கும் சூழலில் கடந்த முப்பது ஆண்டுகளாக மதுவிலக்குக்காக போராடி இறுதியாக  2015 ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை என்ற ஊரின் டவர் மீது ஏறி உயிரிழந்த சசிபெருமாளை இன்னும் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். காரணம், ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் வெடித்துக்கிளம்பும் மதுவுக்கெதிரான போராட்டங்களின்போது சசிபெருமாளும் கிளர்ந்தெழுந்துகொண்டேதான் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அதனால்தான்  இந்தப் போராட்டங்கள் குறித்து சசிபெருமாள் மனைவி மகிழம் என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். 

சசிபெருமாள் மனைவி

“ஊருல தண்ணிப்பிரச்னை, ரோடு பிரச்னை, குழாயடி சண்டை, புருசன் பொண்டாட்டி சண்டைனு சின்னச் சின்ன விஷயத்துக்கே முதல் ஆளா ஓடிப்போய் நிக்குறவரு என் வீட்டுக்காரரு. அவரோட ஒரே குறிக்கோளான டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்காக போராடிக்கிட்டு இருக்குற மக்களை போலீஸ்காரங்க அடிச்சு வெரட்டுறதப்பாத்து சும்மாவா இருந்துருப்பாரு. கொதிச்சுப்போயிருப்பாரே. ஏன்னா, அவருக்கு சனங்க மேல யாரும் கை வக்கக்கூடாது. நம்மளோட உரிமைய கேட்டு வாங்குறதுல தப்பில்ல. அதே நேரத்துல அது காந்திய வழியில அகிம்சையா இருக்கணும். அந்த அகிம்சைய போராடுறவங்களும் போராட்டத்துக்குப் பாதுகாப்பு கொடுக்குறவங்களும் கடைபிடிக்கணும்னு நினைப்பாரு.

நான் அவர கல்யாணம் கட்டிக்கிட்டு வந்ததும் அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் இனி உன் பொழப்பே வீதியிலதாண்டினு கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அந்த அளவுக்கு அவரு பொதுவாழ்க்கையில தீவிரமா இருந்தவரு. ஆனா, ஊர்க்காரங்க சொன்ன மாதிரி அவரு என்னை வீதிக்கு வான்னு அழைச்சிக்கிட்டு வரல. 'உனக்கு எது சரின்னு படுதோ அத செய். போராட வான்னு உன்ன கட்டாயப்படுத்த எனக்கு எந்த உரிமையும் இல்ல' ன்னு அவர் சொன்னதும்தான் என்னால முடிஞ்ச உதவிகளை அவருக்காக பண்ண ஆரம்பிச்சேன்” பேசிக்கொண்டே இருந்தவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகளை நம்மிடம் போனில் அறிமுகம் செய்து வைத்துவிட்டு தொடர்கிறார்.

''இதோ, இவதான் எம்பொண்ணு. பக்கத்துல உள்ள ஸ்கூல்ல ஏழாவது படிக்கிறா. அவளையும் என்னையும் கடைசி வர எந்த சங்கடமும் இல்லாம நல்லா பாத்துக்கிட்டாரு. வெளியூருக்குப் போனாகூட அடிக்கடி போன்ல பேசிடுவாரு. ஆனா, எம்பொண்ணு அடிக்கடி அவ அப்பாவைத் தேட ஆரம்பிச்சிடுவா. நானும் எத்தனையோ நாள் அவர்கிட்ட ஏங்க இத்தனை காலம் உங்க கொள்கைக்காகவும் மக்களுக்காவும் போராடுனீங்க. இனியாவது நம்ம பொண்ணுக்காக வாழலாமேன்னு சொல்லுவேன்.

மகிழம் தன் மகளோடு

அதுக்கு அவரு, ' நான் அவளுக்காகவும்தானே போராடுறேன். நாளைக்கு நம்ம பொண்ணு வெளியில போய்ட்டு பத்திரமா வீடு திரும்ப வேணாமா? குடிகாரங்க இருக்குற நாடு என்னைக்குமே பாதுகாப்பானதா இருக்காதும்மா. அத ஒழிக்குற வரை என் போராட்டம் தொடரும். ஒருவேளை எனக்கு எதுவும் ஆகிடுச்சுன்னா நீ நம்ம பொண்ண நல்லா பாத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு சொல்லிட்டு ஒரு போராட்டத்துக்காக மெட்ராஸ் கிளம்பி போனவரு அங்க இருந்து நேரா மார்த்தாண்டத்துக்கு போயிருக்கிறாரு.

அன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு நினைக்குறேன். காலைல போன் பண்ணி  'நான் மார்த்தாண்டம் பக்கத்துல ஒரு ஊர்ல இருக்கேன்மா. இங்க போராட்டத்த முடிச்சிட்டு நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவேன். பாப்பாவ பத்திரமா பாத்துக்கோமா'ன்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டாரு. நானும் வழக்கம்போல மாட்டுக்கு புல்லறுக்கப் போயிட்டேன். மத்தியானம்போல ஊருக்காரங்கள்லாம் அடிச்சி பெரண்டு வந்து விஷயத்த சொன்னதும் என் மூச்சே நின்னுபோயிடுச்சு. 

இதுக்கு முன்னாடி கூட ஒருமுறை டவர்ல ஏறி போராடுனாரு. அப்பவே அப்டிலாம் பண்ணாதீங்க. நம்ம புள்ளய நெனச்சுப் பாருங்கன்னு சொன்னேன். எம்பேச்ச கேக்கவே இல்ல. அவ்ளோ உணர்ச்சிவசப்பட்டவரு ஒரு நிமிசம்கூட பொண்டாட்டி புள்ளைய நினைக்காம மக்களுக்காகவே உசுர விட்டுட்டாரு. எந்த மக்களுக்காக அவர் உசுர விட்டாரோ இப்ப அந்த மக்கள் வீதியில எறங்கிட்டாங்க. தெனம் தெனம் மக்களோட போராட்டத்தை டி.வியில பாக்கும்போது உச்சி குளிருது. அன்னைக்குப் போராடுனது என் வீட்டுக்காரரு மட்டுந்தான். ஆனா, இப்போ கோடி சனங்க டாஸ்மாக்குக்கு எதிரா திரண்டு நிக்குறாங்க. இனிமேல் அதிகாரம் பண்றவங்களை இந்த சனங்களே பாத்துப்பாங்க, சீக்கிரமே என் வீட்டுக்காரரோட கனவு நனவாகிடும்னு நம்பிக்கை வந்துடுச்சுய்யா. ஆனா, என்ன ஒண்ணு அவரு மட்டும் உசுரோட இருந்திருந்தா நானும் எம்பொண்ணும் அனாதையா நின்னுருக்க மாட்டோம். அவரு போனதும் கூடவே காடு, கழனின்னு எல்லாமே கையவிட்டுப் போயிடுச்சு. இப்போ என்கிட்ட இருக்குற ஒரே சொத்து இந்த மாடு மட்டுந்தான். அது கொடுக்குற பால காசாக்கித்தான் எங்க வயிறு நெறையுது” என்கிற மகிழம் அம்மாளின் அழுகை குரல் மட்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement