வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (10/06/2017)

கடைசி தொடர்பு:20:19 (10/06/2017)

வார விடுமுறையில் குழந்தைகளுக்குச் சொல்ல 4 கதைகள்! #KidsStories

விடுமுறை நாட்களில் குழந்தைகள் டிவியையே பார்த்துட்டே இருக்கிறார் எனப் புகார் சொல்பவரா நீங்கள்? அப்படியெனில் தவறு குழந்தைகள் மீது மட்டுமல்ல... உங்கள் மீதுதான். பொழுதைக் கழிக்க டிவியைத் தவிர வேறெதுவும் இல்லையெனில் அவர்கள் என்னதான் செய்வார்கள். டிவியின் இடத்தில் கதையை வைப்போம். இந்த வார விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல அருமையான நான்கு கதைகள் இதோ.


கதை

நீ யார்?
ரவி பிரகாஷ்

பிரவீண் ரொம்பச் சூட்டிகையான பையன். படிப்பிலும் கெட்டி. ஆனால், அவன் விஷயத்தில் எல்லாமே ஏடாகூடமாக நடந்துவிடுகிறது.

 வகுப்பில், கரும்பலகையில் இருக்கும் கணக்கை அவசரமாக எழுதும்போதுதான் பென்சில் கூர் உடைந்துபோகிறது; பேனாவில் இங்க் தீர்ந்துபோகிறது. ''எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ?' என்று அப்பாவிடம் புலம்பினான் பிரவீண்.

அப்பா, அவன் தலையைத் தடவி சிரித்தார். 'பிரவீண், இந்தப் பிரச்னை எல்லாருக்குமே உண்டு. செய்யற வேலையைச் சரியா செஞ்சுட்டே போனா, எல்லாம் சரியாயிடும்' என்றார்.

ஆனாலும், பிரவீண் சமாதானமாகவில்லை என்பதைப் புரிந்துகொண்ட அப்பா, அவனை  கிச்சனுக்கு அழைத்துப்போனார். காஸ் ஸ்டவ்வைப் பற்றவைத்து, அதன் மூன்று பீடங்களிலும் மூன்று கிண்ணங்களை வைத்து, பாதியளவு நீர் ஊற்றினார். அப்பா செய்வதைப் புரியாமல் வேடிக்கை பார்த்தான் பிரவீண்.

நீர் சற்றுக் கொதி வந்ததும், ஒரு பாத்திரத்தில் ஒரு கோழிமுட்டையைப் போட்ட அப்பா, இன்னொன்றில் ஓர் உருளைக்கிழங்கைப் போட்டார். மூன்றாவதில் கொஞ்சம் டீத்தூளைப் போட்டார். அவற்றைக் கொதிக்கவிட்டார். பின்னர், கோழிமுட்டையை எடுத்து அவனிடம் கொடுத்து, ஆட்டிப் பார்க்கச் சொன்னார். அது, கல் போன்று இருந்தது. உருளைக்கிழங்கு,  மிருதுவாக இருந்தது. டீத்தூள், டிகாக்‌ஷனாக மாறியிருந்தது.

'புரிகிறதா... கொதிக்கும் நீர் என்பதுதான் பிரச்னை. ஆனால், ஓட்டுக்குள் திரவமாக இருந்த முட்டை, கொதிக்கும் நீரில் கடினமாகிவிட்டது. உறுதியாக இருந்த உருளைக்கிழங்கு நன்கு வெந்து, மென்மையாகிவிட்டது. டீத்தூள், கொதிக்கும் நீரையே மணமுள்ளதாக மாற்றிவிட்டது. இந்த மூன்றில் நீ யார்? பிரச்னையைக் கண்டு இறுகிப்போகிற முட்டையா? குழைந்து மென்மையாகும் உருளையா? பிரச்னையையே பயனுள்ளதாகச் செய்கிற டீத்தூளா? நீயே முடிவு செய்துகொள்!' என்றார் அப்பா.

பிரவீண் மனம் தெளிந்தது.

கதை

யார் மன்னன்
- வர்தினி

ஒரு மன்னருக்கு கமலன், விமலன் என்ற இரண்டு மகன்கள். மன்னருக்கு வயதாகிவிட்டது. இரண்டு மகன்களில் ஒருவரிடம் நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தார். இருவருக்குமே தான்தான் மன்னர் ஆக வேண்டும் என்ற ஆசை.

 மன்னருக்கும், இளவரசர்களுக்கும் கல்வி மற்றும் கலைகளைக் கற்றுக்கொடுத்த குரு அங்கே வந்தார். அவர் சொல்லை யாரும் மீறியது இல்லை. எனவே, அவரிடமே புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

குரு, தன் பையில் இருந்து இரண்டு கோல்களை எடுத்தார். ''கமலன், விமலன்... இவை இரண்டும் மந்திரக்கோல்கள். ஒன்று, இரும்பு போன்ற எந்தப் பொருள் மீது பட்டாலும் தங்கமாக மாறும். மற்றொன்று, உமியையும் அரிசியாக மாற்றும். இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் என்றால், நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

கமலன், ''இதில் என்ன சந்தேகம். தங்கமாக மாற்றும் மந்திரக்கோலையே எடுத்துக்கொள்வேன். நம்மிடம் நிறைய தங்கம் இருந்தால், அதைக்கொண்டு எதையும் வாங்கலாமே'' என்றான்.

விமலனோ, ''தங்கம் இருந்தால் பொருள்களை மட்டும் அல்ல, பலரின் விரோதத்தையும் வாங்க வேண்டியதுதான். அதைக் கைப்பற்ற எதிரிகள் படையெடுத்து வருவார்கள். எந்த நேரமும் எதிரிகளோடு போரிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். செல்வம் இருந்தும் நிம்மதி இருக்காது. ஒரு மனிதன், போதும் என்று சொல்வது உணவு விஷயத்தில்தான். வயிறு நிறைந்தால், மகிழ்ச்சி பிறக்கும். கலைகள் வளரும்'' என்றான்.

''சபாஷ் விமலா, நீயே இந்த நாட்டை ஆளத் தகுதியானவன்'' என்றார் குரு.

கதை

உன் பெயர் என்ன?
- கொ.மா.கோ.இளங்கோ

அப்பா, ஒரு விளம்பரப் பலகை ஓவியர். வீடு முழுக்க சாய டப்பிகள் குவிந்துகிடக்கும். அப்பா வரைவதை பக்கத்தில் உட்கார்ந்து, பார்த்து ரசிப்பேன்.

அன்று அப்பா, ஒரு விளம்பரப் பலகையை எழுதிக் கொண்டிருந்தார். ''என்னப்பா எழுதுறீங்க?'' என்று கேட்டேன்.

''எழுத்துக் கூட்டி நீயே படிச்சுப் பாரு'' என்றார். அப்போது, அவரது கைப்பேசி ஒலிக்க, எங்கோ அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.

எல்கேஜி படிக்கும் எனக்கு, உயிரெழுத்துகள் மட்டும்தான் தெரியும். அதில் ஒன்றுகூட இதில் இல்லை. அதனால், ஈச்சமாறு குச்சி ஒன்றை ஒடித்தெடுத்து உட்கார்ந்தேன். சாய டப்பியைத் திறந்து, குச்சியால் தொட்டு எடுத்தேன். விளம்பரப் பலகையில் இருந்ததைப் பார்த்துப் பார்த்து, இடது கையில் எழுதிக்கொண்டேன்.

அப்போது, வானம் இருட்டிக் கொண்டுவந்தது. வீட்டுக்குள் இருந்து வந்த அம்மா, 'மணி, மழை வரப்போகுது உள்ளே வா'' என்று சொல்லிவிட்டு, விளம்பரப் பலகையை எடுத்து உள்ளே வைத்தார். நானும் உள்ளே வந்துவிட்டேன்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஏதோ முனகல் சத்தம். எட்டிப் பார்த்தேன். அங்கே, ஒரு காலியான சாய டப்பியின் மூடிக்குக் கீழே, விசித்திரமாக ஏதோ மின்னியது. ஆவலோடு அங்கே சென்று பார்த்தேன்.

'தயவுசெஞ்சு என்னைக் கொஞ்சம் தூக்கிவிடேன். மேலே இருந்து தவறி விழுந்துட்டேன். இந்த மூடி, காற்றில் பறந்துவந்து மேலே விழுந்துவிட்டது' என்ற அது, பல வண்ணங்களில் இருந்தது.

மூடியை எடுத்த நான், ''நீ யாரு, உன் பேர் என்ன?'' என்று கேட்டேன்.

''என்னோட பேரை, உன் கையில எழுதி இருக்கே. நான்தான் வானவில்'' என்று சொல்லிவிட்டு, சிரிப்புடன் மேலே சென்றுவிட்டது.

வீடு திரும்பிய அப்பாவை வாசலிலேயே நிறுத்தி, ''அப்பா, அந்தப் பலகையில் எழுதி இருக்கிறது வானவில்'' என்றேன்.

''அட, சரியா சொல்லிட்டியே எப்படி?'' என ஆச்சர்யமும் சந்தோஷமுமாக, அப்பா என்னை தூக்கிக்கொண்டார்.

மேலே இருந்த வானவில் சிரித்தது.

கதை

பட்டாம்பூச்சிகள் எங்கே?
- விஷ்ணுபுரம் சரவணன்

சாதனா, அவசரமாக புத்தகங்களைத் தன் பையில் வைத்துக் கொண்டிருந்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் சாதனாவுக்கு, புத்தகங்களுக்கு அட்டை போடுவது பிடிக்காது. அட்டை போடாமலே பத்திரமாக வைத்திருப்பாள். ஒவ்வொரு புத்தகமாக பைக்குள் வைத்தவளுக்கு, தமிழ், ஆங்கிலப் புத்தகத்தைப் பார்த்தபோது ஆச்சர்யம். அந்தப் புத்தகத்தின் அட்டையில் இருக்க வேண்டிய இரண்டு பட்டாம்பூச்சிகளையும் காணவில்லை.

அவை, சாதனாவுக்கு ஃப்ரெண்ட்ஸ். ஒன்று, பெரிதாக பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் இருக்கும். சின்னப் பட்டாம்பூச்சி, இளமஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில் இருக்கும். பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்துதான் செல்வாள். அப்படி செல்லும்போது, அந்தப் பட்டாம்பூச்சிகளோடு பேசிக்கொண்டே வருவாள். சில சமயம், அவை பறந்துவந்து தோளில் அமர்ந்துகொள்ளும். இன்று எங்கே போனதோ தெரியவில்லை...

பட்டாம்பூச்சிகள் இல்லாத புத்தகத்தைப் பையில் வைத்துக் கொண்டு, பள்ளிக்குக் கிளம்பிவிட்டாள். சாதனாவுக்கு ரொம்பவும் கவலையாகிவிட்டது. அந்தப் பட்டாம்பூச்சிகளிடம் சொல்வதற்கு ஒரு கதை தயார் செய்திருந்தாள். டீச்சர் பார்த்துக் கேட்டால், என்ன செய்வது என்ற பயமும் ஒரு பக்கம் வந்தது.

பெருமாள் கோயில் திரும்பியதும் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். அவை வரவில்லை. பாலத்தைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பாலத்திலிருந்து இறங்கியதும் தும்பைச் செடியில் பட்டாம்பூச்சிகள் இரண்டும் அமர்ந்திருந்தன. இவளைப் பார்த்ததும் பறந்துவந்து தோளில் அமர்ந்துகொண்டன. சாதனாவுக்கு கோபம் கோபமாக வந்தது.

'ஏய்... ரெண்டு பேரும் எங்கே போனீங்க. உங்கள எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?' என்றாள். அதற்கு அவை, 'உன் புத்தகத்தில், நாங்க இருக்கும் இடத்தில் பூக்களே இல்லை. அதனால்தான் பூக்கள் இருக்கும் இடமா போனோம்' என்று சொல்லிவிட்டு, புத்தக அட்டையில் உட்கார்ந்துகொண்டன.

அவை சொல்வது சரிதான். 'பூக்கள் இல்லாமல் பட்டாம்பூச்சி எப்படி இருக்க முடியும்?’ என்று நினைத்தாள் சாதனா. தன் வகுப்புக்குச் சென்றதும், கலர் பென்சில் எடுத்து, பட்டாம்பூச்சிகளுக்கு அருகே அழகான பூ ஒன்றை வரைந்தாள்.

-

குழந்தை வளர்ப்பில் கதைகள் சொல்வதும் மிக முக்கியமானது. கதைகள் உங்கள் குழந்தைகளுக்கு புதிய உலகத்தைத் திறக்கும்.


டிரெண்டிங் @ விகடன்