Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பன் பால தொடர் விபத்துகளுக்கு இதுதான் காரணமா?!

பாம்பன்

டிக்கடி விபத்துகள் நடக்கும் ?"ஹாட் ஸ்பாட்" வரிசையில் சென்னை விமானநிலையத்துக்கு அடுத்து ராமேஸ்வரம் பாம்பன் பாலமும் சேர்ந்திருக்கிறது. பாம்பன் சாலை பாலத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் விபத்து நடக்காத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு நாள்தோறும் இங்கு விபத்துகள் நடந்து வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த 30 நாட்களில் தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால், பாலத்தில் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். 

கடந்த 1974- ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாம்பன் பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். 19.26 கோடி ரூபாய் செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின.  பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆகின. ஒரு வழியாக 14 வருடங்களுக்குப் பின் 1988-ல் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் சாலைபாலம் 'அன்னை இந்திரா காந்தி பாலம்' என பெயரிடப்பட்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் திறக்கப்பட்டது. 

இதனால், ஒரு தனித்தீவாக இருந்த ராமேஸ்வரம், பாம்பன் பாலம் அமைக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்டது. இந்த பாலத்தின் மையப் பகுதி கப்பல்கள் செல்லும் வகையில் இரும்பு இணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. கடல் காற்றில் அதிக உப்புத் தன்மை இருப்பதால் இரும்பு இணைப்புகள் துருப்பிடித்து அவ்வப்போது சேதமடைந்து விடும். இதனால் வாகனங்கள் பாலத்தைக் கடக்கும் போது அதிர்வுகள் ஏற்படும்.

பாம்பன்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அரசுப் பேரூந்து ஒன்று கடலில் விழுந்ததில், 8 பேர் பலியாயினர். அதன்பிறகு சொல்லிக் கொள்ளும் படியான விபத்துகள் பாம்பன் பாலத்தில் நடந்ததில்லை. இந்நிலையில், பாலத்தைச் சீர் படுத்த கடந்த ஆண்டு 18.56 கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னரும் பாலத்தின் மேற்பகுதி மற்றும் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து வந்தன. இதனைச் சீர்படுத்த 2.70 கோடி ரூபாய் செலவில் வழுவழுப்பான ரப்பர் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு, தார் மற்றும் குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்படும் இந்தச்சாலையில் கடந்த ஒரு மாத காலத்தில் எண்ணற்ற விபத்துகள் நடந்து வருகின்றன. 

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேரூந்துகள், டூ வீலர்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் புதிதாகப் போடப்பட்ட ரப்பர் சாலை இளகி விடுகிறது. இதனால் பாம்பன் பாலத்தில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரேக் போடும்போது, ரப்பர் சாலை என்பதால் வாகனம் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. இதனால் எதிரில் செல்லும் வாகனங்கள் மீதோ அல்லது தடுப்புச் சுவர் மற்றும் விளக்குக் கம்பங்கள் மீதோ வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது தொடர்கதை ஆகி உள்ளது. புதிய சாலையினால் ஏற்பட்ட விபத்துக்களினால் கடந்த 2 நாட்களுக்கு முன் இளம் பெண் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த உயிர் பலி மேலும் அதிகரிக்கப்பதற்கு முன்பு, இந்தப் புதிய சாலையில் உள்ள குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவுப் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கின்றனர். தரையில் விபத்து நடந்தாலே உயிர் பிழைப்பது பெரும் பாடு. இது கடலின் மேல் உள்ள பாலம். அர்த்தராத்திரி நேரங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடலைக் கூட உடனடியாக எடுக்கமுடியாது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement