வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (10/06/2017)

கடைசி தொடர்பு:20:06 (10/06/2017)

வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நடப்பட்ட 50 வயது அரச மரம்..!

அரச மரம்

ஒரு மரம் என்பது மரம் மட்டுமல்ல...மனிதன் சுவாசிப்பதற்கான பிராணவாயு பெட்டகம். பறவைகள் முதல் எறும்பு வரை, புழு,பூச்சி முதல், கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் வரை வசிக்கும் அபார்ட்மென்ட். எத்தனையோ உயிர்களுக்கு உணவாக, உறைவிடமாக இருக்கும் மரங்களை, நாம் என்றுமே மகத்தானதாக பார்ப்பதில்லை. அவற்றை வெறும் மரமாகவே பார்க்கிறோம். அந்த பார்வை குறைபாடுதான் இத்தனை சூழலியல் சிக்கல்களுக்கும் காரணமாகியிருக்கிறது. சின்னஞ்சிறிய விதை மண்ணில் விழுந்து, தன்னெழுச்சியாய் முளைத்து, தன் மென்மையான துளிர்கள் மூலமாக பூமியை துளைத்து வெளியே வருவது முதல், செடியாகி, கிளைந்து, மரமாகி, காய், கனிகள் கொடுப்பது வரை எத்தனை இடர்களை சந்தித்து வளர்கிறது ஒருமரம். அத்தனையும் தாங்கி ஆண்டுக்கணக்கில் நிற்கும் ஒரு மரத்தில் இருந்து மனிதன் கற்றுகொள்ள பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. வெயில், மழை, பனி என எத்தனையோ போராட்டங்களைத் தாங்கி, வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களை தங்கள் தேவைக்காக சிலமணி நேரங்களில் வெட்டி எறிந்துவிடுகிறோம். தான் வாழ்ந்த காலமெல்லாம் நமக்கு உயிர்காற்றை ஊட்டிய மரங்களுக்கு நாம் செய்யும் நன்றி இதுதானா?

இந்தக் கேள்வி, 50 ஆண்டுகள் பழமையான ஓர் அரசமரத்திற்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே உள்ள ஏ.எம்.சி சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் கட்டடம் கட்ட நினைத்த தனியார் நிறுவனம், அந்த மரத்தை அப்புறப்படுத்த நினைத்தது. இந்தத் தகவல் ஏற்கெனவே திண்டுக்கல்லில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமை உண்டாக்கி வரும் திண்டி மா வனம் அமைப்பினருக்கு தெரிந்ததும் அரசமரத்தை காக்க களமிறங்கினர். தனியார் நிறுவனத்தினரிடம் பேசி, அவர்களின் அனுமதியோடு மரத்தை, வேரோடு பெயர்த்து நடும் பணியை தொடங்கினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி மரத்தை வேரோடு பெயர்த்து, புதிதாக நடுவது இதுவே முதல்முறை என்பதால் பொதுமக்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

அரச மரம்  அரச மரம்

மரம்

மரம் வேரோடு பறிக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரம் நடுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், 12 அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுக்கப்பட்டது. அந்த குழியில், அரசமரம் இருந்த இடத்தின் மேல்மண்னை மூன்றடிக்கும், வேர்மண்ணை இரண்டடிக்கும் கொட்டி, தண்ணீர் ஊற்றி குழி தயார் செய்யப்பட்டது. அதற்கு மேல், மரம் வேர்விடும் வகையில் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய மண்கொட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, மரத்தை வேரோடு அகற்றும் பணி தொடங்கியது. 70 அடி உயரம் இருந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டப்பட்டு அதன் உயரம் பாதியாக குறைக்கப்பட்டது. அடிப்பகுதியில் 10 அடிக்கும் மேல் ஆழமாகத் தோண்டி வேர்களுக்கு சேதாரமில்லாமல் மரம் சாய்க்கப்பட்டது. தாய்மண்ணோடு சாய்க்கப்பட்ட மரம், ராட்சத கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு, ரவுண்ரோடு, திருச்சி - திண்டுக்கல் புறவழிச்சாலை வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டுவரப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் மரம் கொண்டுவரப்பட்டது. 

மரம்

அங்கு ஏற்கெனவே தயாராக இருந்த குழியில் மரம், தாய்மண்ணோடு நடப்பட்டது. இந்த முயற்சிக்கு தனியார் நிறுவனத்தினர், வேளாண்மைதுறையினர், காவல்துறையினர் மற்றும் திண்டி மா வன உறுப்பினர்கள் அனைவருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.விஜய் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய திண்டி மா வனம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ராஜாராம், ‘‘ மரங்களின் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காகவும், திண்டுக்கல் மாவட்டத்தை பசுமைபோர்த்திய மாவட்டமாக மாற்றவேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டதுதான் திண்டி மா வனம் அமைப்பு. அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து இதை ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம். இந்த நிலையில்தான், 50 ஆண்டு வயதுடைய அரசமரத்தை காக்க வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பினர் இந்த பணியை செய்திருக்கிறோம். இந்த பணி எங்களுக்கு மனநிறைவை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் எங்கள் மூதாதையர்களைக் காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டிருக்கிறது. இந்த மரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்க காரணம், இந்த இடத்தில்தான் பல்வேறு கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள் கூடுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல நிழல் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் இதுப்போன்று தேவையில்லை என நினைக்கும் பாரம்பரியமான மரஙக்ளை வேறொரிடத்தில் நடமுடியும் என்ற செய்தியையும் அவர்கள் உணரவேண்டும் என்பதற்காக இதை செய்திருக்கிறோம். தொடர்ந்து மரத்திற்கு நீரூற்றி பரமாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பிரதிபலனும் பாராது, சமூகநலனுக்கான இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் திண்டி மா வனம் சார்பாக நன்றி’’ என்றார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்