Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.ஐ.டி. சிங்காரம், கழுகு மனிதன் ஜடாயு...! சிறுவர் கதையுலக ராஜா வாண்டுமாமா #VaandumamaMemories

வாண்டுமாமா

தமிழில் சிறுவர் இலக்கியத்துக்குப் பிரதான இடமுண்டு. பாரதி, அழ வள்ள்ளியப்பா, ரேவதி, செல்லகணபதி, பாவண்ணன், குழ கதிரேசன், கொ.ம.கோதண்டம் எனத் தொடங்கி சுகுமாறன், கொ.ம.கோ.இளங்கோ, விழியன், பாலபாரதி என இந்தத் தலைமுறையிலும் இந்தப் பட்டியல் நீள்கிறது. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் வாண்டுமா. சிறுவர் இலக்கியத்தின் பயணம் தனித்துவமானது. அந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லும் எந்தவோர் இடத்திலும் ஒரு பெயர் தவறாமல் இடம்பெறும் அது வாண்டுமாமா. அவரின் நினைவுத் தினம் இன்று.

சிறுவர்களுக்கு எழுதுவது என்பது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் எழுதுபவர்களின் வயதுக்குரிய மனநிலையிலிருந்து நகர்ந்து, சிறுவர்களின் எண்ணவோட்டத்துக்கு இடம் மாற வேண்டும். கதை எழுதுபவர் தான் பெரியவர் எனும் தோரணியில் எழுதத் தொடங்கினால் சிறுவர்கள் அந்தப் படைப்பை நிராகரித்துவிடக் கூடும். எனவே கூடுதல் கவனத்துடன் சிறுவர் கதைகளை எழுத வேண்டும். அப்போதே சிறுவர்கள் அந்தக் கதை/பாடல்/நாடகத்தையோ விரும்பிப் படிப்பார்கள். வாண்டுமாமாவின் எழுத்துகள் சிறுவர்களின் மனநிலையைத் துல்லியமாக உணர்ந்துகொண்டதாக அமைந்திருப்பவை.

சிறுவயதில் கதை எழுதுவதைப்போலவே ஓவியம் வரைவதிலும் பெரு விருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார். பாரதி எனும் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தியுள்ளார். ஓவியர் மாலியால் வாண்டுமாமா எனச் சூட்டப்பட்ட இவரின் உண்மையான பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி. விசாகன், சாந்தா மூர்த்தி எனும் புனைப்பெயர்களிலும் குழந்தைகளான படைப்புகளைப் படைத்திருக்கிறார். புதுக்கோட்டை, அரிமங்களம் ஊரில் பிறந்தவர். ஆனந்த விகடன், சிவாஜி, கிண்கினி, வானவில், கோகுலம், பூந்தளிர், தினமணி கதிர் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி சிறுவர்களுக்கான கதைகளை எழுதியவர்.

மூன்று விரல்கள், பைபிள் பாத்திரங்கள், அதிசய நாய் உள்ளிட்ட ஏராளமான கதைகளை சிறுவர்களுக்காக எழுதியுள்ளார். அதேபோல காமிக்ஸ் கதைகளை எழுதுவதிலும் வாண்டுமாமா தனித்துவமானவர். நீதி கதைகளாக சொல்லிவந்தால் நல்ல விஷயங்கள் சிறுவர்களைச் சென்றடைவதில் சுணக்கம் ஏற்படும் என காமிக்ஸ் கதைகளில் அதிகம் கவனம் செலுத்தினார். காமிக்ஸ் என்றாலே வெளிநாட்டிலிருந்து மொழியாக்கம் செய்துவருபவை எனும் நிலை தான் இன்று வரை நிலவி வருகிறது. ஆனால் அந்தக் காலத்திலேயே வாண்டுமாமா நமது தமிழகச் சூழலுக்கு ஏற்ற காமிக்ஸ் கதைகளை எழுதியிருக்கிறார். ஓநாய் கோட்டை, பவழத் தீவு சி.ஐ.டி. சிங்காரம், மர்ம மனிதன்,  கழுகு மனிதன் ஜடாயு, மரகதச் சிலை போன்ற புத்தகங்கள் சிறுவர்களின் விருப்பத்துக்கு உரியவையாக இருக்கின்றன.

வாண்டுமாமா

அவர் பத்திரிகைகளில் பணிபுரிந்தபோது, ஏராளமான எழுத்தாளர்களை சிறுவர் படைப்புகளை எழுத வைத்திருக்கிறார். அதேபோல பரிசுப் போட்டிகள் அறிவித்து சிறுவர்களையும் கதை எழுத வைத்தார். ஆனாலும் பரிசுத் தொகை மீது அவர்களின் ஈர்ப்பு சென்றுவிடாமல் குறைந்த தொகைப் பரிசுகளை அளிக்க நிர்வாகத்தை வலியுறுத்தினார். சிறுவர் இலக்கியத்தில் புதிதாக ஈடுபடுபவர்களுக்கு நல் வழிகாட்டியாகவும் விளங்கினார். ஆங்கில இலக்கியங்களைத் தமிழில் எழுதப்பட்டதுபோல மொழியாக்கம் செய்வதிலும் ஆர்வம் காட்டினார்.

இன்றைக்கும் சிறுவர்கள் தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றில் தங்களது நேரத்தைக் கழித்து வருகின்றனர். அவை, சிறுவர்களின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்க உதவி செய்வதில்லை. மாறாக ஒரு கதையைப் படிக்கும்போது அந்தக் கதையின் பாத்திரங்கள், கதை நடக்கும் சூழல் உள்ளிட்டவற்றை அந்தச் சிறுவர்கள் தங்கள் மனக்கண்ணில் உருவாக்கிக் கொள்கிறார்கள். இதன்மூலம் புதிய கதையை உருவாக்கும் திறனை மறைமுகமாக அடைந்துவிடுகின்றனர்.

சிறுவர்களுக்கு வாண்டுமாமா போன்ற படைப்பாளிகள் எழுதிய புத்தகங்களை வாங்கித்தந்து, வாசிக்க வைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கக்கூடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement