யானையால் குத்தப்பட்ட வனஊழியரின் கண்ணீர் கசிய வைக்கும் சிகிச்சைக் கணக்கு!

முன்னாள் மாவட்ட வன அலுவலர் அவர். பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் வனத்துடனும் அதன் மணத்துடனும் எப்போதும் தொடர்பில் இருப்பவர். வனத்துறையை பொறுத்த வரை, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கடை நிலை ஊழியர்கள். வயிற்றுப் பாட்டுக்காக உயிரை பணயம் வைப்பவர்கள். வேட்டையைத் தடுப்பது இவர்களது முக்கிய பணி.  காடுகளுக்குள் பல கிலோ மீட்டர்கள் நடந்தே செல்வார்கள். அதுவும் தளி ஆளாக...அபாயகரமான பணி. இவர்களைப் போன்ற கடை நிலை ஊழியர்களுக்கு கூட அரசு சார்பில் நல்ல காலணி வாங்க நிதி கொடுக்கப்படுவதில்லை. மாதச் சம்பளம் ரூ. 6750 . விடுப்பு, குறிப்பிட்ட  நேர வேலை கிடையாது, இரவு பகல் , காடும் மேடும் சுற்ற வேண்டும்.  இன்னல்படி , இன்ஸ்யூரன்ஸ் என எந்த பாதுகாப்பும் இல்லாதவர்கள். பணியும் நிரந்தரம் இல்லை.பணியில் இருக்கும் போது, யானை, சிறுத்தைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களும்  உண்டு. இவர்களைப் போன்றவர்கள் வன விலங்குகளால் தாக்கப்பட்டு, உயிருக்கு போராடினால் அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதுதான் முன்னாள் மாவட்ட வன அலுவலரின் இப்போதைய வேலை. 

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலர்

கோவையில் சில நாட்களுக்கு முன்பு, காட்டு யானை ஒன்றுத் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே யானை மக்களைத் தாக்குவதற்கு முன்னதாக அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்ற வேட்டைத் தடுப்புக் காவலரை தந்தத்தால் குத்தித் தூக்கி எறிந்தது. படுகாயமடைந்த கார்த்திகேயனின் 4 விலா எலும்புகள் நொறுங்கிப் போயின. நுரையீரலை ஒட்டி பெரிய ஓட்டை ஏற்பட்டிருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.'உயிருக்கு உத்ரவாதம் இல்லை' என மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். குடும்பத்தினரோ கதறி இருக்கின்றனர்.' தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உயிர் பிழைத்திருப்பாரே'என குடும்பத்தினர் கூறி விடக் கூடாது என்கிற காரணத்தினால் வன அலுவலர்களே முடிவு செய்து, கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். 

 

 யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  தலா 4 லட்சம் வழங்கிய அரசு கார்த்திகேயனைக் கண்டுகொள்ளவில்லை,  பணியில் இருக்கும் போது, யானை தாக்கி காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க அரசிடம் பணம் இல்லையா... அல்லது சட்டத்தில் இடமில்லையா... எனத் தெரியவில்லை. ஓய்வு பெற்ற அந்த மாவட்ட வன அலுவலர்தான் களத்தில் இறங்கினார். கார்த்திகேயன் சிகிச்சைக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேரத் தொடங்கியது. சிகிச்சை அளிக்கப்பட்ட கார்த்திகேயன்  உயிர் பிழைத்தார்.    

சிகிச்சை அளிக்கப்பட்ட பில்தற்போது, கார்த்திகேயனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும் அதற்கு நிதி திரண்ட விதம் மற்றும் செலவு கணக்கை முன்னாள் வன அலுவலர் நேற்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அது அப்படியே... வாசகர்களின் பார்வைக்கு...''அன்புள்ளம் கொண்ட என் நண்பர்களும் WNCT உறுப்பினர்களும் இணைந்து இன்று மாலை நான்கு மணிவரை அளித்த தொகை ரூ. 1,30,000. யானையால் குத்தப்பட்ட வேட்டைத்தடுப்புக்காவலர் திரு. கார்த்திகேயன் அவர்களின் மொத்த மருத்துவ செலவு  ரூ.2,65,000.  வனத்துறை சூழல் சுற்றுலா குழுவில் இருந்து ஒரு லட்சமும் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஏற்கனவே 25,000 முன் பணமாக கட்டி இருந்தனர். மீதம் 1,30,000 செலுத்த வேண்டும். 

இதில் தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் இஸ்மாயில் மற்றும் என் மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி சின்னசாமிஇனிய நண்பர் திரு. சம்பத்குமார் 25000 நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எம். சி.எச். மருத்துவமனைத் தலைவர் Dr. நல்ல. பழனிச்சாமி 35,000 தள்ளுபடி செய்தார். வனப்பாதுகாவலர் திரு. ராமசுப்ரமணியன் ராஜா அவர்கள் முன்னிலையில் திரு. சித்திக் அலி மற்றும் திரு. சிராஜுதீன் ஒரு லட்சத்தை செலுத்தியுள்ளனர். இனி, மருத்துவக் கவனிப்பு மட்டும் போதுமானதால், மருத்துவமனைச் செலவை குறைக்கும் பொருட்டு திரு. கார்த்திகேயன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஊருக்கு செல்ல வாகன வசதி செய்து தரப்பட்டது. தேவையான மருந்து பொருட்கள் வாங்கித்தரப்பட்டன. இன்னும் மூன்று மாதம் ஓய்வும் சிகிச்சையும் எடுக்க வேண்டுமாம்.

திரு. முகமது சலீம் அவர்களால் ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளது. 'சிறுதுளி' வனிதா மோகன் மேடம் நிதியுதவி செய்வதாக வாக்களித்துள்ளார். மேற்கொண்டு செலவுகளுக்கு இது போதுமானது. எனவே மேற்கொண்டு இது தொடர்பாக பணம் ஏதும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்புள்ளம் கொண்ட தங்கள் உதவி ஓர் உயிரை காப்பாற்ற உதவியது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் யானை விரட்டுவது போன்ற உயிர் ஆபத்து  நிறைந்த பணிகளுக்கு செல்லும் காவலர்கள் தங்களை காப்பாற்ற நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலும் சிறப்பாக பணியாற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள். நிதி அளித்த ஒவ்வொருவரின் பாதங்களுக்கு எங்கள் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.''

வேட்டைத் தடுப்புக் காவலர் உயிரைக் காப்பாற்ற நிதி திரட்டிய அந்த மாவட்ட முன்னாள் வன அலுவலரின் பெயர்... பத்ரசாமி சின்னசாமி!

சாமிதான்! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!