Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' தோசை சாப்பிடற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை!'  -தீபாவால் கொந்தளித்த தீபக்

போயஸ் கார்டனில் தீபா

போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், மகனும் மோதிக் கொண்ட காட்சிகள், அண்ணா தி.மு,க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. மாதவனும் ராஜாவும் வந்ததால்தான் இவ்வளவு பிரச்னையும்' எனக் கொந்தளிக்கின்றனர் தீபக் தரப்பினர். 

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் இறந்த தினத்தில் இருந்து, அவருடைய சொத்துக்கள் குறித்த சர்ச்சை எழுந்து கொண்டே இருக்கிறது. ' போயஸ் கார்டன் உள்பட அம்மாவின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும்' என்ற தொண்டர்களின் கோரிக்கையும் ஈடேறவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்தில் தீபாவுக்கு இருந்த ஆதரவு, தற்போது பெரிதாக இல்லை. இந்நிலையில், நேற்று காலை போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு திடீரென வந்தார் தீபா. ' என் தம்பிதான் வரச் சொன்னான்' எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார். அவர் சென்ற பிறகு அவருடைய கணவர் மாதவன், பேரவை நிர்வாகி ராஜா உள்ளிட்டவர்களும் உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் இருந்த சசிகலா படங்களை அவர்கள் வெளியே கொண்டு வர, விவகாரம் வெடித்தது. தீபா தரப்புக்கும் கார்டன் பாதுகாவலர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.

ஒருகட்டத்தில், தீபாவின் கணவர் மாதவனுக்கும் பேரவை நிர்வாகி ராஜாவுக்கும் இடையில் மோதல் வெடித்தது. ' வீட்டில் இருந்த நகை, பணத்தையெல்லாம் திருடிக் கொண்டு ஓடிப் போனவன்தானே நீ' என மாதவனைப் பார்த்து அவர் கொதிக்க, ' நீ பொறுமையா இரு ராஜா' என சமாதானப்படுத்தினார் தீபா. ஒருகட்டத்தில், போலீஸ் துணை கமிஷனர் சரவணன் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதன்பின்னர் பேட்டியளித்த தீபா, " சசிகலா குடும்பத்துடன் என் தம்பி தீபக் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களாகவே என் தம்பியோடு நான் பேசுவதில்லை. இன்று காலை அவன் வரச் சொன்னதால்தான் வந்தேன். நான் போனபோது, அங்கே போலீஸார் இல்லை. உள்ளே நுழைந்ததும், தீபக் சண்டை போட ஆரம்பித்தான். என்ன நடக்கிறது என யூகிப்பதற்குள் எங்களை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிவிட்டார்கள். என் அத்தையைக் கொன்ற சசிகலாவுடன் சேர்ந்து கொண்டு தீபக் செயல்படுகிறார்' எனக் கொதிப்பை வெளிக்காட்டினார். 

தீபக்கார்டனில் நடந்த மோதல் குறித்த தீபக் தரப்பிடம் பேசினோம். " போயஸ் கார்டனுக்குள் நடந்த சண்டை திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. நேற்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கார்டனுக்குள் தீபா வந்துவிட்டார். வெளி உலகுக்கு சண்டை தெரிய ஆரம்பித்தது ஒன்பது மணிக்குப் பிறகுதான். கடந்த சில நாள்களாகவே, 'தீபாவிடம் பேச வேண்டும்' என தீபக் நினைத்தார். 'சொத்து விவகாரம் உள்பட பல விஷயங்களை உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம். மீடியாக்களிடம் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை' என்பதை தீபாவிடம் விளக்கமாவே கூறி வந்தார். நேற்று நடந்த சண்டை பற்றி தீபக்கிடம் நாங்கள் கேட்டபோது, ' அவர் என்னுடைய அக்காதானே. உட்கார்ந்து பேசி முடிவெடுக்கலாம் என நினைத்து, ' வரும்போது நீ மட்டும் வா. வேறு யாருக்கும் போன் போட்டு வரச் சொல்லாதே'ன்னு சொன்னேன். நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தோம். தோசை சாப்பிடச் சொல்லி, சாப்பிட வைத்தேன். அவரும் சாப்பிட்டார். இந்த ராஜாவால்தான் எல்லா பிரச்னையும். அவர் வராமல் இருந்திருந்தால் பிரச்னை வேறு மாதிரிப் போயிருக்கும்'  என வேதனைப்பட்டார்' என விவரித்தவர்கள்,

" ஜெயலலிதா இறந்த பிறகு, 'கட்சிக்குள் பதவி வேண்டும்' என ஆசைப்பட்டார் தீபக். அவரை எந்த இடத்திலும் தினகரன் ஆதரிக்கவில்லை. நடராசன் கட்டுப்பாட்டில் தீபக் இருப்பதால், அவருக்குக் கொடுக்கப்பட்ட சில வாக்குறுதிகளையும் தினகரன் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து முறையிட்டார். 'தினகரனிடம் எதையும் கேட்டுப் பெறும் நிலையில் நான் இல்லை. தினகரனை துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது' எனவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் தீபக். நேரடியான மோதல் வலுத்தாலும், அவர் எந்தநேரமும் போயஸ் கார்டனுக்குள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்குள்ளும் மூன்று அணிகள் உருவாகிவிட்டன. ' இனி நாம் கேட்டது எதுவும் கிடைக்கப் போவதில்லை' என்பதை உணர்ந்த பிறகு, 'தீபாவுடன் இணைந்து கேட்டுப் பெறுவோம்' என்ற மனநிலைக்கு வந்தார். ஆனால், தீபா பின்னால் இருக்கும் சிலர் அவரைத் தவறாக வழிநடத்துகிறார்கள். மிகச் சாதாரணமாக அணுக வேண்டிய விஷயத்தை பூதாகரமாக்கிவிட்டார்கள். யாருக்கும் தகவல் சொல்லாமல் தீபா மட்டும் வந்திருந்தால், அனைத்தும் சுமூகமாக முடிந்திருக்கும்" என ஆதங்கப்பட்டனர். 

" ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப் பிறகு, அரசியல் பாதையில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் தீபா. பொதுமக்களும் முன்பு போல அவரைச் சந்திக்க வருவதில்லை. ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் அவர். திகார் சிறையில் இருந்த வந்த பிறகு, தினகரனை எம்எல்ஏ-க்களில் சிலர் தினம்தினம் சந்தித்து வந்தனர். தன்னை பொதுத் தலைவராக காட்டிக் கொள்ள தினகரன் முயற்சி செய்து வருகிறார். இதனை சசிகலா குடும்பத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. தீபக்கை முன்வைத்து நேற்று நடந்த ரகளை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக உணர்கிறோம். தினகரன் ஆதிக்கத்தை முழுவதுமாக திசைதிருப்ப நடத்தப்பட்ட நாடகமாகவே உணர வேண்டியிருக்கிறது" என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement