Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவரே கரும்பலகை... ஓவியமே பாடம் - அசத்தும் அரசுப் பள்ளி!

 அரசுப் பள்ளி

    'தனியார் பள்ளிகள்தான் க்ரியேட்டிவிட்டியோடு மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தும். அரசுப் பள்ளிகள் கடமைக்குப் பாடங்களை நடத்தும்' என்கிற பெற்றோரின் எண்ணமே, பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டுபோய் தனியார் பள்ளிகளில் கொட்டவைக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளைவிட சிறந்த முறையில் அக்கறையோடும் க்ரியேட்டிவிட்டியோடும் பாடங்களைப் போதிக்கும் அரசுப் பள்ளிகள் உண்டு. அப்படி ஒரு பள்ளிதான், கரூர் மாவட்டம், தாந்தோனிமலை ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியில் பணிபுரியும் சாந்தி என்ற ஆசிரியை சுவரில் ஓவியங்கள் வரைந்து, அதன்மூலம் பாடம் நடத்துகிறார்.   பள்ளியின் வகுப்பறைகளில் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓவியம், மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம், அளவீடுகளைப் புரியவைக்கும் ஓவியம், அடுத்த வகுப்புக்குச் செல்வதை பட்டாம்பூச்சிகளின் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தும் ஓவியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், கண்களையும் மனதையும் கொள்ளையடிக்கிறது. ''இதையெல்லாம் வரைஞ்சது எங்க சாந்தி டீச்சர்தான்'' என மாணவர்கள் உற்சாகமாக அவரிடம் அழைத்துச் செல்கிறார்கள்.  

ஆசிரியை

 

"2000-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். அப்போது நாற்பது மணவர்களே இருந்தாங்க. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கணும் என்கிற ஆர்வமே இல்லாததை கவனிச்சேன். பசங்களும் பள்ளிக்கூடம் வராமல் சுத்திட்டிருந்தங்க. பலரிடமும் போய்ச் பேசி பார்த்தாச்சு. படிக்கும் சூழ்நிலைமீது அவங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினால், தேடி வருவாங்கனு நினைச்சேன். பாடங்களை அவங்களுக்குப் புரிகிற மாதிரி நடத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன். எனக்கு ஓவியம் வரையறது ரொம்ப பிடிக்கும். அதனால், ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சாக்பீஸால் பாடங்களை ஓவியங்களா வரைஞ்சு நடத்தினேன். முன்பைவிட அவங்ககிட்டே ஆர்வம் அதிகமானதையும் பாடங்களைப் புரிஞ்சுக்கிறதையும் உணர்ந்தேன். என் யோசனைக்கு வெற்றியடைஞ்சதை நினைச்சு உற்சாகமானேன்.   அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அரசு ஆரம்பிச்சபோது, இந்த மாவட்டத்தில் பத்து பள்ளிகளைத் தேர்வுசெஞ்சாங்க. அதில் எங்கள் பள்ளியும் ஒண்ணு. அது இன்னும் உற்சாகத்தைக் கொடுத்துச்சு. பெற்றோர்களிடம் பேசினேன். அவங்களே பெயின்ட், பிரஷ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து அடுத்த வாரத்துக்கான பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சுடுவேன். பள்ளி நாட்களில் அதைவைத்து பாடங்களா நடத்துவேன். தொடர்ந்து நான்கு வருஷங்கள் இப்படி பாடங்களை ஓவியங்களா வரைஞ்சேன். என்னுடைய உழைப்புக்குச் சரியான பலன் கிடைக்க ஆரம்பிச்சது. மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் பெரிஅய் முன்னேற்றம் ஏற்பட்டுச்சு. தலைமை ஆசிரியையும் உற்சாப்படுத்தினாங்க.  

ஆயில் பெயிண்டிங்

2015-ம் வருஷம் இந்தியா முழுக்க இருக்கும் பள்ளிகளுக்கிடையே 'டிசைன் ஃபார் சேஞ்ச்' என்ற புராஜெக்ட் நடந்துச்சு. பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிப்பது, மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியைப் புதிய நிலைக்கு கொண்டுச் சென்றது. பள்ளிகளுக்கு இடையிலான போட்டி அது. அதில் எங்கள் பள்ளியும் கலந்துக்கிட்டோம். பரிசு கிடைக்கலைன்னாலும், அது எங்களை வெளியுலகுக்கு இன்னும் பெரிய அளவில் அடையாளம் காட்டிச்சு. தன்னார்வமிக்க மனிதர்களால் பள்ளியை மேம்படுத்தினோம். தரையில் மார்பிள் பதிச்சோம். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வீணான பொருள்களில் முகமூடி, அலங்கார பூஜாடிகள், பறவை கூடுகள் என தயாரிக்க சொல்லிக்கொடுத்தோம். 

அரசுப் பள்ளி

  இப்போ, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களும் எங்கள் பள்ளியைத் தேடிவந்து அவங்க பிள்ளைகளைச் சேர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. பாடக் கல்வியைத் தாண்டியும் பல விஷயங்களைச் சொல்லித்தர்றோம். நல்ல உணவு எது, கெட்ட உணவு என்று புரியவைக்கிறோம். விவசாயத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்க மண்புழு உரம் தயாரித்தல், ஆர்கானிக் முறை விவசாயத்தின் முக்கியத்துவம் என சொல்லிக்கொடுக்கிறோம். கல்வியில் மட்டுமின்றி, சமூக விஷயத்திலும் எங்கள் பள்ளி மாணவர்களை மேம்பட்டவர்களாக மாற்றிக் காட்டும் லட்சியத்தோடு எங்கள் பயணத்தைத் தொடர்ந்துட்டிருக்கோம்'' என்று புன்சிரிப்புடன் சொல்கிறார் ஆசிரியை சாந்தி.  

  படங்கள்: நா.ராஜமுருகன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement