Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுக்கு சோ எழுதிய கடிதம்! போயஸ் கார்டன் ஃபிளாஷ்பேக்

ஜெயலலிதா

னிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம். ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்களாலும் சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்டு. போயஸ்கார்டனில்  81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதிநிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நுாற்றாண்டு. 

'அவரது அழுகையை ஆறுதல்படுத்தியிருக்கிறது.’ ‘தனிமையை தட்டிக்கொடுத்து மறக்கச்செய்திருக்கிறது.' 'துயரத்தைத் துடைக்க முயற்சித்திருக்கிறது.' 'மனச்சோர்வுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.' இப்படி அவரது தாயின் மறைவிற்குப்பின் வாழ்வின் எல்லாமுமாக அந்த இல்லம் அவருக்கிருந்தது. குறிப்பாக அவரது முதல்மாடியிலுள்ள அவரது அறை.  உறவுகளால், நெருங்கிய நண்பர்களால், தான் அதிகம் நேசித்தவர்களால், நேசிக்கப்பட்டவர்களால் காயப்படுத்தப்படும் சமயங்களில் தன் அறையின் கதவுகளைச் சாத்திக்கொள்வதுண்டு. அந்த அறையின் கதவு அதற்குப்பின் எப்போது திறக்கும் என்பது அவரது முடிவுதான். எத்தனை துயரத்தோடு நுழைந்தாலும் மீண்டும் கதவு திறக்கும்போது புது மனுஷியாகி இருப்பார். அதுதான் ஜெயலலிதா. அப்படி அவரின் கோபதாபங்கள், சாந்தம், கொண்டாட்டம் என அந்தந்த நேர உணர்வுகளின் ஜெயலலிதா வெளிப்படுத்திய உஷ்ணங்களை இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறது அந்த இல்லம்.

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் உருவான அரசியல் வெப்பம் இப்போது அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தையும் தீண்ட ஆரம்பத்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் தொடர்ந்து போயஸ் இல்லத்திலேயே வசிக்கத்துவங்கினர். ஜெயலலிதா இருந்தபோது அந்த இல்லத்துக்கு அளிக்கப்பட்ட அதே பாதுகாப்பு அவரின் மறைவுக்குப்பின்னரும் அளிக்கப்பட்டது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அதைக்கேள்வி எழுப்பிய பின்னரே அதிகபட்ச பாதுகாப்பு குறைக்கப்பட்டது. சசிகலா சிறை செல்ல நேர்ந்தபோது போயஸ் கார்டன் தினகரன் கட்டுப்பாட்டில் வந்தது. ஜெயலலிதா காலத்தில் பணியாற்றிய வேலைக்காரர்களில் சிலர் மட்டும் அங்கேயே தங்கியிருந்து பராமரிப்புப் பணிகளைப் பார்த்துவந்தனர். 

போயஸ் கார்டன் ஜெயலலிதா வாழ்வில் இடம்பெற்றது எப்படி?....

மைசூரில் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் திடீர் மரணம் அடைந்தபின் வறுமையினால் ஒரு தனியார் கம்பெனியில் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார் சந்தியா. சென்னையில் தங்கியிருந்து தமிழ்ப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவரது தங்கை வித்யாவதி சந்தியாவை தனக்குத் துணையாக சென்னை வரவழைத்தார். வித்யாவதியைத் தேடிவந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, அதிர்ஷ்டக் காற்று அடிக்க ஆரம்பித்தது. கன்னடத் தயாரிப்பாளர் கெம்புராஜ் மூலம் சினிமா வாய்ப்பு தேடி வந்தது சந்தியாவை.  மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சந்தியா. பின் தங்கை வீட்டிலிருந்து அடையாறு, காந்தி நகரில், நான்காவது மெயின் ரோடில் ஓரளவு வசதிகொண்ட ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஜெயலலிதா மற்றும் அவரது சகோதரர் ஜெயக்குமாரின் பால்ய வயது கழிந்ததும் இங்குதான். சந்தியா சினிமாவில் ஓரளவு புகழடைந்து வருமானம் ஈட்ட ஆரம்பித்தபின் இதன்பிறகு தி.நகர் சிவஞானம் தெருவிலுள்ள வீட்டுக்கு குடிவந்தார். அப்போது தங்கை வித்யாவதியும் உடன் வசித்தார். 

போயஸ்

ஜெயலலிதாவின் இளமைப்பருவத்தைப் பகிர்ந்துகொண்டது இந்த இரு இல்லங்கள்தான். பின்னாளில் ஜெயலலிதாவுக்கு நன்னகர்த்தவ்யா என்ற கன்னடப்படத்தில் பந்துலு மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது இந்த வீட்டிலிருந்தபோதுதான். அதன் மூலம் பிரபல இயக்குநர் ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானார். அன்றுமுதல் அவரது வாழ்வில் ஏறுமுகம்தான். மளமளவென படங்களில் அவர் நடிக்கத்துவங்கிய பின் மகளின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டு வீட்டோடு தன்னைச் சுருக்கிக்கொண்டார் சந்தியா. 60 களின் பிற்பகுதியில் ஜெயலலிதா தென்னிந்தியாவின் புகழ்மிக்க நட்சத்திரமாக மிளிர்ந்தார். ஒருமுறை பிரபல இந்தி நடிகர் திலீப் குமார், அவரைத் தன் படத்தில் நடிக்கவைத்தே தீர்வதென உறுதியோடு தயாரிப்பாளர் ஒருவரை அவசரஅவசரமாக விமானம் பிடித்து ஜெயலலிதாவின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். ஆனால், இந்தித் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த அந்தக் கதாநாயகனின் படத்தில் தனக்கு முக்கியத்துவமிருக்காது என வந்தவரை அதே விமானத்தில் திரும்ப அனுப்பினார் ஜெயலலிதா. அதுதான் ஜெயலலிதா! 

பெரிய நடிகை என்றாலும் கணக்கு வழக்குகளில் அவர் உஷாரானவர் இல்லை. அதனால் வெகுளியான தன் மகளின் எதிர்காலத்திற்காக பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டும் ஆசை உருவானது, சந்தியா மனதில். அதற்காக தேனாம்பேட்டையில் 1968 ஆம் ஆண்டு சந்தியா 10 கிரவுண்ட் இடத்தை வாங்கினார். தாயும் மகளும் அத்தனை சிரத்தையாக பல இன்ஜினீயர்களுடன் கலந்துபேசி வீட்டின் வடிவமைப்பை முடிவுசெய்தனர். தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அந்த வீடு பிடித்துப்போனால், மீண்டும் போயஸ்கார்டன் வீட்டின் வரைபடத்தை மாற்றுவார். இப்படி பல முறை மாற்றினாலும் மகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காமல் தலையசைப்பார் சந்தியா. இப்படி சிமென்ட் ஜல்லியோடு சந்தியாவின் வாழ்நாள் கனவும் சேர்த்துக்கட்டப்பட்டதுதான் போயஸ் கார்டன் இல்லம். 

அம்மா சந்தியாவுடன்

சிவாஜியுடன் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் நடித்துக்கொண்டிருந்தபோது போயஸ் இல்லம்  கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 72 ஆம் ஆண்டில் வீடு கட்டும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது. தன் மகளுக்காக ஆசை ஆசையாக பார்த்துப் பார்த்து போயஸ் இல்லத்தைக் கட்டிய சந்தியா வீடு கட்டி முடியும் நேரம் உயிருடன் இல்லை. தன் மகளுக்காக பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் ஒருநாளும் மகளுடன் மகிழ்ச்சியாய் இருக்க விதி அவருக்கு இடம்கொடுக்கவில்லை.

கிரகப்பிரவேசத்துக்கு சில நாள்களுக்கு முன் திடீரென ரத்த வாந்தி எடுத்த சந்தியாவை பதறியடித்து பூந்தமல்லியிலிருந்த பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர் வேலையாட்கள்.  அப்போது“அம்முவுக்குச் சொல்லாதீர்கள். உடனே ஓடிவந்துவிடுவாள். படப்பிடிப்பு பாதிக்கும்.” என இறப்பிலும் மகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டினார் சந்தியா. ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்துபோனார். 

வீட்டின் பூமி பூஜை சமயம் அதுதொடர்பாக பேசுவதற்கு ஒரு படத்தின் படப்பிடிப்பிலிருந்த ஜெயலலிதாவைக் காண வந்தார் சந்தியா. அப்போது இருவருக்குமிடையே நடந்த சிறு வாக்குவாதத்தில் அபசகுணமாக ஜெயலலிதா ஒருவார்த்தையைக் கூற, அது பலித்துவிட்டதாக ஜெயலலிதாவே சொல்லி வருந்தியிருக்கிறார் பின்னாளில். 

ஜெயலலிதாவின் வாழ்வில் முதல் பெருந்துயரம் அதுதான். அதுநாள் வரை அம்மாவைத்தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது. காலையில் கண்விழித்தது முதல் இரவு உறங்கும்நேரம் வரை அவருக்கு எல்லாமே அம்மாதான். ஆனால் அம்மா தனக்காகக் கட்டிய வீட்டில் அவரில்லாமல் இருக்கவேண்டிய துர்பாக்கியம் அவருக்கு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை ஆதிக்கம் செலுத்தத்துவங்கியது அந்த நாளிலிருந்துதான். பல உறவுகளால் அவர் காயம்பட்டது அப்போதுதான்.
 
வீட்டுக்கு வேதவல்லி என்ற தன் தாயின் பெயரைச் சுருக்கி 'வேதா இல்லம்' எனப் பெயர் சூட்டிய ஜெயலலிதா வேறு வழியின்றி தன் சித்திகள் மற்றும் உறவினர்களோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வாழத்தொடங்கினார். 

இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்தபோது தமிழ்சினிமாவின் அத்தனை பிரபலங்களும் வந்து ஜெயலலிதாவை ஆசிர்வதித்தார்கள். எம்.ஜி.ஆரைத்தவிர! ஜெயலலிதாவுடன் சிறு மனக்கசப்பு ஏற்பட்டிருந்ததால் அவர் வரவில்லை. ஆனாலும் தன் பரிசான தனக்கு நெருங்கிய நண்பர் மூலம் விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அதைத் தொட்டும் பார்க்காத ஜெயலலிதா சில மாதங்களுக்குப் பின் கசப்பு நீங்கியபின்னர்தான் அதைப் பிரித்து பார்த்ததாகச் சொல்வார்கள். 

கிரகப்பிரவேசத்தின்போது வேதங்களையும், வேதங்களின் ஆகம சூத்திரங்களையும் கொண்டு வீட்டின் பெயரான ‘வேதா நிலையத்தின்’ பெயரிலேயே ஒரு பாடலை பாடி ஜெயலலிதாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் கச்சேரி செய்ய வந்த வீணை வித்வான் சிட்டி பாபு. 

இந்தக் கிரகப்பிரவேசம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு மனதில் மறக்கமுடியாத இன்னொரு சம்பவமும் உண்டு. அதை ஜெயலலிதாவே விவரிக்கிறார் இப்படி....

கூட்டமொன்றில்

“சோவை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன். நாங்களிருவரும் நெருங்கிய நண்பர்கள்! சோவுடன்கூட ‘டீ அவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன்’, ‘அண்டர் செகரட்டரி’, ‘ஹிட்டன் ட்ரூத்’ ஆகிய நாடகங்களில் நடித்திருக்கிறேன். என் குடும்ப நண்பர் சோ.
என் புதுமனை புகுவிழாவிற்கு சோவுக்கு அழைப்பிதழ் அனுப்பினேன். நேரில் அவர் வீட்டுக்குச் சென்று அழைக்க முடியாததால், பலமுறை அவர் வீட்டிக்குப் போன் செய்து அவருடன் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், சோ வீட்டில் இல்லை. என் வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு சோ வராதது என் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. கிரகப்பிரவேசத்துக்கு மறுநாளே படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்ல நேரிட்டதால், சோ வராததற்குக் காரணத்தைக் கடிதம் மூலம் கேட்டறிய விரும்பினேன். சோ, சுமார் ஆறு பக்கங்களுக்குக் குறையாமல், மிகவும் அழகான கடிதம் ஒன்றை எழுதி எனக்கு அனுப்பியிருந்தார். நான் நேரில் வந்து அழைக்காததைப் பற்றி வருந்துவதாக அதில் எழுதியிருந்தார்.

நான் சாதாரணமாக எல்லா கடிதங்களையும் படித்தவுடன் கிழித்தெறிந்துவிடுவேன். ஆனால், சோ எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். தான் கிரகப்பிரவேசத்துக்கு வராததைப் பற்றி மன்னிக்கும்படிக்கு கேட்டும், கர்வத்தினால் மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் நடந்து கொள்வதைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஓர் அழகிய அற்புதமான சிறுகதை அந்தக் கடிதம்!”.

தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா நூறாவது பட கொண்டாட்டத்தைக் கண்டது, நம்பிய மனிதர்களால் நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளானது, உறவினர்களால் நடுவீதிக்கு கொண்டுவரும் நிலை உருவானது, வாய்ப்புகள் குறைந்து பொருளதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அதிமுகவில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணி சினிமாவில் வெளிப்படுத்திய சோகம், ஆனந்தம், துக்கம், விரக்தி வெறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் நிஜமாய் அனுபவித்தது இந்த வீட்டில்தான். 

விரக்தியின் விளிம்பில் நின்று இந்த வீட்டில் இருமுறை தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவைக் கூட அவர் எடுத்ததாகச் சொல்வார்கள். 

ஒருமுறை போயஸ் கார்டனில் தன்னைச் சந்திக்க வந்த ஒரு தயாரிப்பாளரைப் பேசி அனுப்பிவிட்டு மாடியிலுள்ள தனது அறைக்குப் படியேறிச்சென்ற ஜெயலலிதா திடீரென மயக்கமுற்று விழுந்தார். தலையில் அடி. பதறிய ஊழியர்கள் பதறியடித்து எம்.ஜி.ஆருக்குத் தொலைபேசியில் தகவலைச் சொன்னார்கள். எம்.ஜி.ஆர் வந்து ஜெயலலிதாவை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானார் அப்போது உதவியாக இருக்க ஜெயலலிதாவின் சித்திகளைத் தேடினார். ஆனால் அவர்கள் மாடியில் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலைக்காரர்கள் கூறினார்கள். 'மகள் மயக்கத்தில் கிடக்க, அப்படியென்ன அவர்களுக்குள் வாக்குவாதம்' எனக் குழப்பத்துடன் எம்.ஜி.ஆர் மாடிக்குப் போனார். அங்கு, “ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஆனால் கொத்துச்சாவியை யார் வைத்துக்கொள்வது” எனச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் சித்திகள். கோபமாகப் பேசி அவர்களிடமிருந்து சாவியைப் பிடுங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாராம். சில மணிநேரத்துக்குப்பின் ஜெயலலிதா கண்விழித்தபோது கொத்துச்சாவியுடன் நின்றிருந்த எம்.ஜி.ஆர், “அம்மு யார் எதிரிகள், யார் உறவுகள் எனப் பிரித்தறிந்து ஜாக்கிரதையாக இரு”என அறிவுரை சொல்லிக்கிளம்பினார்.

இப்படிஜெயலலிதாவின் வாழ்வில் மேடும் பள்ளமுமான சம்பவங்களைக் கண்டது போயஸ் கார்டன் இல்லம்.
இரண்டு மாடிகளுள்ள போயஸ் கார்டனின் முன்பக்க வீட்டில் (பழைய வீடு) கீழ்தளத்தில் நான்கு அறைகள் பெரிய வராண்டா டைனிங் ரூம் கெஸ்ட் ரூம்  இரண்டு ஆபிஸ் ரூம்கள் சமையலறையை ஒட்டி 2 பெரிய ஸ்டோர் ரூம்கள் இரண்டாவது மாடியில் இரு அறைகள். இந்த வீட்டிற்கு பின்புறம் வீட்டின் வேலையாட்களுக்கு என தனியே கட்டப்பட்ட தனியறைகள் உண்டு.  இது தவிர வீட்டின் பின்புறமுள்ள கார்ஷெட்டுக்கு மேல் பெரிய ரூம்கள் இருந்தன. முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் பிரமாண்ட படுக்கை அறை இருந்தது. இதனருகில் உள்ள பெரிய அறைகளில் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்கள், அவரது பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகள் இருந்தன. ஜெயலலிதாவின் முதல் மாடி அறையிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள அறைக்குச் செல்ல  மாடியிலேயே ஒரு பாலம் அமைக்கப்பட்டது. பின்னாளில் அவர் முதல்வரானபின் இதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டபின் 36, 31 ஏ என இரு இலக்கங்கள் அளிக்கப்பட்டன. பழைய வீட்டின் கிழக்குத்திசையில் 31 ஏ என இலக்கம் குறிப்பிடப்பட்ட பகுதி 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 5 மாடிகள் உண்டு.

நாய்ப்பிரியரான ஜெயலலிதா ஆரம்பத்தில் இந்த வீட்டில் விதவிதமான நாய்களை வளர்த்தார். பின்னாளில் அரசியலில் தீவிரமாக இறங்கியபோது கட்சிப்பிரமுகர்கள் பலர் வந்துபோக ஆரம்பித்தபோது நாய்கள் தொந்தரவாக இருந்ததால் அவற்றை வேறு இடங்களில் வளர்த்தார். 

ஜெயலலிதா தலைமையேற்றிருந்த கட்சி சர்ச்சைக்குள்ளாகி பரபரத்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது அவர் வாழ்ந்து மறைந்த அவரது இல்லமும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறது. இப்போதைக்கு இது முடிவுக்கு வராது என்றே தெரிகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement