வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (13/06/2017)

கடைசி தொடர்பு:13:58 (13/06/2017)

நீட் விடைத்தாள் வெளியீடு! கருத்துத் தெரிவிக்க 1000 ரூபாய் கட்டணம்

நீட் விடைத்தாளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மே 7ஆம் தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளால் கடும் சிரமத்துக்கு மாணவர்கள் ஆளானதோடு, கேள்வித்தாள்களும் மிகவும் கடினமாக இருந்தது. மேலும், ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்படவில்லை என்றும், மாநிலத்துக்கு மாநிலம் வினாத்தாள்கள் வேறுமாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதித்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்ததோடு, மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் தடை விதித்தது.

இந்த நிலையில், நீட் விடைத்தாளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும், விடைத்தாளில் ஆட்சேபனை இருந்தால் இன்று அல்லது நாளை மாலைக்குள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.