Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘சசிகலா குடும்பத்தின் தயவு தேவையில்லை!’ - தினகரன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க.

தினகரன்

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன ஆளும் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும். 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசின் ஆதரவு இருப்பதால்தான், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அமைதியாக இருக்கின்றன. 'தன்னை நோக்கி பா.ஜ.க தலைமை வரவேண்டும்' என எதிர்பார்த்தார் தினகரன். அவரது நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை கடந்த 5 ஆம் தேதி சந்தித்தார் டி.டி.வி.தினகரன். 'கட்சி ஒன்றுபட வேண்டும் என்று நினைத்ததால் ஒதுங்கி இருந்தேன். கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன். அறுபது நாள்கள் அமைதியாக இருக்கும்படி சசிகலா அறிவுறுத்தினார்' எனப் பேட்டியளித்தார். அவருடன் எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட எட்டு பேர் அப்போது இருந்தனர். இதன்பின்னர், ஒவ்வொரு எம்எல்ஏ-க்களாக தினகரனை நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பு அரசியல் மட்டத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. "தினகரனை 33 எம்எல்ஏ-க்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இதனை எடப்பாடி பழனிசாமி அரசு அதிர்ச்சியோடு கவனித்தது. அதிருப்தி எம்எல்ஏ-க்களை நேரில் சந்தித்த முதல்வர், 'உங்களுடைய தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகிறேன். அமைச்சர் பதவி குறித்து என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது. அரசுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். அவர்களும், 'ஆட்சிக்கு எதிராக தினகரன் செயல்பட இருந்தார். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்' என விலகி வந்துவிட்டனர். தற்போது ஐந்து எம்எல்ஏ-க்கள் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். இதில், கொங்கு மண்டல எம்எல்ஏ-க்களான தோப்பு வெங்கடாச்சலமும் செந்தில்பாலாஜியும் அடக்கம்" என விவரித்த ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவர், 

அமித் ஷா"குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் இருந்த ஆதரவு, தற்போது இல்லாத சூழலில் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் தினகரன். 'குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதா? பா.ஜ.க தரப்பில் இருந்து சசிகலாவிடம் ஆதரவு கேட்பார்களா?' என டெல்லி வட்டாரத்தில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகிறார். அமித் ஷாவுக்கு நெருங்கிய நண்பர் தமிழ்நாட்டில் உள்ள ஒருவரிடம், 'ஆதரவு கேட்டால், உடனே தருவோம்' என அவர்களுக்குத் தகவல் சொல்லுங்கள்' எனக் கூறியிருக்கிறார். அந்த நபரோ, 'என்னை அவர்கள் நல்லமுறையில் நடத்துகின்றனர். உங்கள் கோரிக்கை குறித்துக் கூறினால், பணம் வாங்கிவிட்டேன் என அவர்கள் சந்தேகப்படலாம். என்னால் எதுவும் செய்ய முடியாது' என உறுதியாகக் கூறிவிட்டார். இதைப் பற்றி தமிழக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரிடம் அந்த நபர் விவாதித்திருக்கிறார்.

அதற்குப் பதில் அளித்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர், 'சசிகலா குடும்பத்தின் தயவு எந்தக் காலத்திலும் நமக்குத் தேவையில்லை. அவர்கள் ஆதரவு இல்லாமலேயே நாம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினகரன் நினைத்தார். அந்த முயற்சியில் அவர் தோல்வியடைந்துவிட்டார். நம்மிடம் நெருங்குவதற்கு அவர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நாம் அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உ.பியில் முலாயம் சிங்குக்கு எதிராக அரசியல் செய்ததைப்போல, மகாராஷ்ட்ராவில் சரத் பவாருக்கு எதிரான அரசியலை முன்னெடுத்ததைப் போல், தமிழ்நாட்டில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகச் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும்' எனக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் குடும்ப உறுப்பினர்களும் பாராமுகமாக இருப்பதால், பெரும் மனக் குழப்பத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன்" என்றார் விரிவாக. 

இதனையடுத்து, தினகரனிடம் பேசிய அவருடைய ஆதரவாளர்கள், 'தேர்தலைப் புறக்கணித்தால், நமக்கு எவ்வளவு எம்எல்ஏ-க்கள் ஆதரவு என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாம்தான் எக்ஸ்போஸ் ஆவோம். பா.ஜ.கவை எதிர்த்து, காங்கிரஸ் பக்கம் செல்ல முடியாது. மோடியைக் கடுமையாக எதிர்த்தால், சிறுபான்மை வாக்குகளை நம் பக்கம் கொண்டு வர முடியும். குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆட்சியில் உள்ளவர்களுக்கும் நாம் யார் என்பதைக் காட்டும் வகையில் சில செயல்களைச் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று பேசிய தினகரன், 'முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. என் கவனம் முழுவதும் கட்சியை ஒருங்கிணைத்து நல்லாட்சியை அளிக்க வேண்டும் என்பதுதான். முதல்வர் பதவி வேண்டும் என நினைத்திருந்தால், பழனிசாமியை முதல்வராக்கிய அன்றே அடைந்திருக்க முடியும். கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் நினைக்கின்றனர். சிலர் அந்தக் கருத்துக்கு எதிராக உள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. 'இரு அணிகளும் விரைவில் இணையும்' என நடராசன் கூறுகிறார். ஆனால், அவருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படையான விஷயங்கள் தெரியவில்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார். 

‘ஆட்சி அதிகாரத்திலும் கட்சியிலும் என்னுடைய அதிகாரம்தான் இருக்கிறது’ என்பதை வலிந்து காட்ட முயற்சி செய்கிறார் தினகரன். குடியரசுத் தலைவர் தேர்தலை ஓர் ஆயுதமாக பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். அந்த ஆயுதத்தை அவருக்கு எதிராகவே திருப்பிவிட்ட பெருமை, பா.ஜ.கவையே சேரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement