சசிகலா அணி விநியோகித்த ரூ.732 கோடி இவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்காது! புதிர் கிளப்பும் அன்புமணி | Anbumani questions on the distribution of Rs.732 Crores by Sasikala team

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (13/06/2017)

கடைசி தொடர்பு:14:09 (13/06/2017)

சசிகலா அணி விநியோகித்த ரூ.732 கோடி இவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்காது! புதிர் கிளப்பும் அன்புமணி

Anbumani

கையூட்டு தருவதும், பெறுவதும் குற்றம் என்பதால் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள சசிகலா - எடப்பாடி பழனிசாமி கூட்டணி செய்த முறைகேடுகள் மற்றும் தகிடுதத்தங்கள் குறித்து பாமக முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டதை அக்கட்சியின் உறுப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார். சசிகலா தலைமையிலான அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கும் பதவிச்சண்டை  உச்சகட்டத்தில் இருந்தபோது சசிகலா அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த பேரங்கள் தொடர்பாக இரு அணிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசி, அவர்கள் தெரிவித்தக் கருத்துகளை அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து ஆங்கிலத் தொலைக்காட்சியும், தமிழ்த் தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனிடம் நடத்தப்பட்ட உரையாடலில்,‘‘சசிகலா அணியில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ரூ.6 கோடி தருவதாகக் கூறினர். அடுத்த நாள் பணம் தட்டுப்பாடு காரணமாக ரூ.2 கோடி பணமும், மீதத்துக்குத் தங்கமும் தருவதாக உறுதியளித்தனர். அப்போதே அதைக் கொடுத்திருந்தால் நான் உட்பட யாருமே பன்னீர்செல்வம் அணிக்கு சென்றிருக்க மாட்டோம். பன்னீர் செல்வம் அணியில் சில உறுப்பினர்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். வேறு சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்தால் அவர்களுக்குப் பன்னீர்செல்வம் அணியில் அமைச்சர் பதவி வாங்கித் தருவேன்’’ என்று கூறியிருக்கிறார். சசிகலா அணியைச் சேர்ந்த சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜிடம் நடத்தப்பட்ட உரையாடலில், ‘‘சசிகலா அணி சார்பில் பணம் தரப்பட்டது உண்மைதான். அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சில உதிரிக் கட்சி உறுப்பினர்களுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமாகத் தரப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

இரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்த தகவல்கள் சிதம்பர ரகசியங்கள் அல்ல. அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால், இந்த உண்மைகள் இப்போது ஆதாரங்களுடன் வெளிவந்திருப்பதுதான் குறிப்பிடத்தக்கது ஆகும். அதிமுகவின் இரு அணியினரும் தங்களை உத்தமர்களாகக் காட்டிக்  கொண்டாலும் அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க எப்படியெல்லாம் பேரங்களை நடத்தினார்கள் என்பது தமிழக மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல வாக்காளர்களுக்குக் கையூட்டு, வென்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அதைத் தக்கவைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு, ஆட்சியமைக்கத் தடை ஏற்படுத்தாமலிருக்க உரியவர்களுக்குக் கையூட்டு, இடைத்தேர்தலில் வெற்றி பெற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மூலம் கையூட்டு, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு கையூட்டு என ஆளும் அதிமுக பயணித்த பாதையைப் பார்த்தாலே அந்தக் கட்சியின் ஊழல் சாம்ராஜ்யத்தை உணர முடியும்.

தமிழக அரசியலைத் திமுகவும், அதிமுகவும் எந்த அளவுக்கு சாக்கடை ஆக்கியிருக்கின்றன என்பதற்கு இது சிறந்த உதாரணம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கையூட்டு தருவது உள்ளிட்ட செலவுகளுக்காக அதிமுக ரூ.10,000 கோடியும், திமுக ரூ.6,000 கோடியும் செலவழித்திருக்கின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இத்தனை கோடிகளை வாரி இறைப்பவர்களால் எப்படி நல்லாட்சி  வழங்க முடியும். கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகம் சீரழிந்ததற்கு இரு கட்சிகளும் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொண்டு அடித்தக் கொள்ளைகள்தான் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளைத் தடுக்க மத்திய, மாநில அரசு அமைப்புகளும் தவறி விட்டன. ஆட்சி மாற்றம் நடைபெற்ற நேரத்தில் இரு அணிகளின் உறுப்பினர்களுக்கு பணப் பட்டுவாடாவும், தங்கமும் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்கப்பட்டன என்பது குழந்தைகளுக்குக்கூட தெரிந்த உண்மை.  ஓர் உறுப்பினருக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என்றால் சசிகலா அணியிலிருந்த 122 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.732 கோடி விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அமைப்புகளான சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றுக்கும், தமிழகக் காவல்துறைக்கும் தெரியாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினரிடம் இவற்றையெல்லாம் எவரும் விநியோகித்திருக்க முடியாது.

ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ரூ.4000 வீதம்  கையூட்டு வழங்கப்பட்டபோது, அந்தப் பணம் எங்கிருந்து விநியோகிக்கப்பட்டிருக்கும் என்பதைச் சரியாக யூகித்து சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தி ஆதாரங்களைப் பறிமுதல் செய்தது. ரூ.4000 கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்த வருமானவரித்துறைக்கும் மற்ற அமைப்புகளுக்கும்  ரூ.6 கோடி வீதம் கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதா அல்லது இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனரா என்பது மர்மமாக உள்ளது. சசிகலா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பன்னீர்செல்வம் அணி உறுப்பினர்களுக்கும் கையூட்டு கொடுக்கப்பட்டதற்கு இதைவிட வலிமையான ஆதாரம் தேவையில்லை. ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கையூட்டு கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்து ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் பினாமி அரசு இனியும் நீடிக்கக் கூடாது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 171(e) பிரிவின்படி கையூட்டு தருவதும், பெறுவதும் குற்றம் என்பதால் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.