Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தை பிறந்ததும் மரக்கன்று... காத்திருப்போர் வாசிக்க நூலகம்... காரமடையில் ஒரு வித்தியாசமான மருத்துவர்!

"மாத்திரை சாப்பிடுங்க, அடுத்த மாசம் வாங்க" தவிர, தனிப்பட்ட முறையில் எதையும் பேசாமல் தன் கடமையே கண்ணாக இருக்கும் மருத்துவர்களுக்கிடையில், மக்களுக்காக பல சேவைகள் செய்துவருகிறார் காரமடையில் இருக்கும் மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

மருத்துவர்

இவர் காரமடையில் அமைதியான சுற்றுச்சூழலுக்கு நடுவில் அழகு கொஞ்சும் `சவிதா மருத்துவமனை' என்ற ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்திவருகிறார். மருத்துவத்தைத் தாண்டி பல நல்ல விஷயங்களையும் செய்துவருகிறார். பிறக்கும் குழந்தை பெயரில் ஒவ்வொரு பெற்றோருக்கும் மரக்கன்றுகள் கொடுத்து வித்தியாசம் காட்டிவரும் இவர் சமீபத்தில், அவரது மருத்துவமனையின் முதலாமாண்டு விழாவில் செய்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரிய வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் பெற்றுத் தந்துள்ளது.

மருத்துவமனையில் நோயாளிகளையும் அவர்களுடன் வருபவர்களையும் பெரிதும் சோதனைக்குள்ளாக்குவது, காத்திருக்கும் நேரம்தான். அதைப் பயனுள்ளதாக மாற்ற எண்ணிய மருத்துவர் சசித்ரா தாமோதரன், சிறிய அளவிலான நூலகம் ஒன்றை மருத்துவமனையிலேயே ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் பேசியபோது... "நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோவை. மிடில் க்ளாஸ் ஃபேமிலிதான். அதனாலயே நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு படிச்சேன். பன்னிரெண்டாவதில் ஸ்டேட் ரேங்கர், கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட், யுனிவர்சிட்டி ஸ்டார் ஹோல்டர்னு ரொம்ப நல்லாவே படிச்சேன். பல வருடங்கள் வெளியே வேலைபார்த்துட்டு, இப்ப சொந்தமா மருத்துவமனை ஆரம்பிச்சிருக்கேன்.

எங்க பாட்டி நிறைய புத்தகம் படிப்பாங்க. அதேபோல அப்பாவும் படிப்பாங்க. அப்படியே எனக்கும் என் அக்காவுக்கும் அந்தப் பழக்கம் வந்திருச்சு. சின்ன வயசுல இருந்து நிறைய புத்தகங்கள் வாசிப்போம். என் புத்தக வாசிப்புப் பழக்கம்தான், மருத்துவமனையில் நூலகம் அமைக்கக் காரணம்.

Doctor Sachithra

இப்பலாம் தமிழ் மீதான பற்று குறைஞ்சுட்டே வருது. அதை ஒரு பெருமையாகூட வெளியே சொல்லிக்கிறாங்க. தமிழ் மீதான ஆர்வத்தைக் குழந்தைகளிடம் கொண்டுவருவதற்கான முயற்சினுகூட இதைச் சொல்லலாம். பக்தப்பிரகலாதன், அபிமன்யூ கதையெல்லாம் புராணம்னு சொல்லிட்டிருக்கோம். ஆனால் அவையும் உண்மைகளைச் சுமந்துதான் இருக்கு. ஐந்தாவது ஆறாவது மாதங்கள்ல அம்மா இந்த மாதிரி புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சா, குழந்தையின் மனவளர்ச்சிக்கு அது உறுதுணையா இருக்கும். புத்தகம் படிப்பதும் இனிமையான இசை கேட்பதும் கட்டாயமா செய்யவேண்டிய செயல்கள். 

இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் இருமுறை அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதற்காகவும் மனதளவில் அவங்களைத் திடப்படுத்துவதற்காகவும் நிறைய உரைகள் எல்லாம் கொடுக்குறோம். மாதம் இரண்டு முறை அந்த மாதிரியான வகுப்புகள் நடத்தறோம்.  அப்படியே யோகா போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை முறையே வளர்ப்பதற்கான வகுப்புகளும் எடுக்குறோம். அவர்களுக்கான உடற்பயிற்சிகள், உணவு முறைகள், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பற்றிய தெளிவு, தாய்ப்பாலின் மகத்துவம் போன்றவை சொல்லித் தருகிறோம்.

நம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் மரங்களும் நம் குழந்தைகள்தான். அதனால் ஒவ்வொரு குழந்தைகள் பிறக்கும்போது ஒரு மரக்கன்றுக்கு குழந்தையின் பெயரையே சூட்டி அன்பளிப்பா கொடுக்குறோம். குழந்தைகள் மாதிரியே அதையும் அவங்க பக்குவமா வளர்க்குறாங்க. அவங்க ஊருக்குத் தகுந்த மாதிரி வளரக்கூடிய மரங்களைத்தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்குறோம். எங்க மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கிறதுக்கு தனி அறை அமைச்சிருக்கோம். நிறைய மருத்துவமனைகளில் அந்த வசதி இல்லை. பிரசவத்தின்போது கணவர்களும் உடன் இருக்கணும்னு விருப்பப்பட்டா, அதற்கான அனுமதிகளையும் கொடுக்குறோம்.

மருத்துவர்

நூலகம் ஆரம்பிக்கும்போதும் சரி, மரக்கன்றுகள் கொடுக்க ஆரம்பிக்கும்போதும் சரி நிறைய நண்பர்கள் முன்வந்து உதவினாங்க. நம்மள மாதிரியே நிறைய பேருக்கும் இந்த எண்ணம் இருக்கு. அவர்களோட ஒட்டுமொத்த பிரதிநிதியா நான் இருக்கேன்னு நினைக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு. நூலகம் ஆரம்ப நிலைலதான் இருக்கு. இன்னும் நிறைய நூல்கள் சேர்க்கணும். இதை ஒரு மருத்துவமனையா மட்டும் பார்க்காம, அவங்க இங்க வர்றப்ப அவங்களுக்கு மனதளவுல பெரிய ரிலாக்ஸைத் தர்ற இடமாவும் இருக்கணும்னு நான் நினைக்கறேன்.

தொடர்ந்து ஃபேஸ்புக்லையும் ட்விட்டர்லையும் செயல்பட்டுட்டு வருகிறேன். தினமும் ஏதோ ஒரு தகவல் பதிவிடுகிறேன். அந்தந்தத் தினத்தைப் பற்றிய செய்திகள்னு என்னால் முடிஞ்சவரை சமூக வலைதளங்களிலும் அறிவுரைகளும் விழிப்புஉணர்வுகளும் கொடுத்துட்டு வர்றேன். `கொஞ்சும் தமிழில் கொஞ்சம் மருத்துவம்' என்ற தலைப்பில் ட்விட்டர்லையும், முப்பது திருப்பாவை பாடல்களுக்கு சிறுகதை எழுதி விளக்கம் கொடுக்குற புத்தகமும், `அஞ்சு செகண்ட் அட்டகாசம்' என்ற ஒரு நூலையும் எழுதிட்டு வர்றேன். `கருவாகி உருவாகி உயிராகி' என்று கர்ப்பிணிகளுக்குத் தேவையான குறிப்புகள் நிறைந்த புத்தகத்தை இங்கு வர பெண்களுக்கு இலவசமா கொடுக்குறோம். அது அவர்களின் குழப்பங்களுக்கு எல்லாம் தெளிவு கொடுக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பக்கத்தில் இருக்கிற பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் போய் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுக்குறேன்.

என்னுடைய கணவரும் மகனும் ரொம்ப உதவியா இருக்காங்க. எந்தெந்தத் தலைப்புகளில் எழுதணும்னு அவங்களும் நிறைய கருத்துகள் சொல்றாங்க. எதிர்காலத்துல ஒரு கருத்தரிப்பு மையமும் என்னுடைய பாட்டி பேர்ல ஒரு அறக்கட்டளையும் ஆரம்பிக்கணும்கிறதுதான் என் ஆசை. நான் பண்ற விஷயங்களுக்குப் பாராட்டுபவர்களுக்கு எல்லாம் நான் சொல்றது ஒரே வாக்கியம்தான்,`Miles to go'. இன்னும் நிறைய விஷயங்கள் செய்யணும். நான் இந்தச் சமுதாயத்தில் ஒரு மருத்துவரா மட்டும் இல்லாம, அக்கறைகொண்ட மனுஷியாவும் இருக்கிறதுல பெருமையா இருக்கு."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement