வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (13/06/2017)

கடைசி தொடர்பு:16:05 (13/06/2017)

'50 ஆயிரம் கொடுத்தாதான் டிசி'- மிரளவைத்த கல்லூரி... பணம் கட்ட பிச்சையெடுக்கும் மாணவர்கள்

தலித் மக்கள் படித்து வேலைக்குப் போய், வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு உதவிசெய்துவருகிறது. ஆனால் கல்லூரி நிறுவனங்கள், படித்துமுடித்த பிறகு பணத்துக்காக சான்றிதழ்களைத் தர மறுக்கின்றன. ''அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்துவிட்டோம். பலன் இல்லை. அதனால்தான், கல்லூரிக்கு பணம்கட்ட பிச்சை எடுத்துவருகிறோம்'' என்கிறார்கள் மாணவர்கள். அரியலூர் மாவட்டத்தை அதிரவைத்துள்ளது, இந்தச் சம்பவம்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவரிடம் பேசினோம். "நான் சிறு வயதாக இருக்கும் போதே எங்க அப்பா இறந்துவிட்டார். எங்க அம்மா மட்டும்தான். அவங்களும் கல்வெட்டுற வேலைக்குப் போய்தான் எங்களைப் படிக்க வச்சாங்க. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சப்போ, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இலவசமாக படித்துப் பட்டம் பெறலாம் என்று விநாயகா கல்லூரி நிர்வாகம் விளம்பரம் கொடுத்தார்கள். அதைபார்த்த பிறகு, திட்டக்குடியில் 20-க்கும் மேற்பட்ட எனது நண்பர்களோடு அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகில் உள்ள விநாயகா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று விசாரித்தோம். அங்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஒரு பைசாகூட கொடுக்கவேண்டிய தேவையில்லை என்றனர்..

அரசே எல்லா பணத்தையும் கட்டிவிடும். அதுமட்டுமில்லாம, உங்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு பணம் கொடுக்கும் என்றார்கள். அதனா நாங்க, செலவே இல்லாம டீச்சராகப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் திழைத்தோம். 2014-16 ஆம் ஆண்டில், எஸ்சி, எஸ்டி மாணவ-மாணவிகள் இலவச கல்வித் திட்டத்தில் இந்தக் கல்லூரியில் சேர்ந்தோம். மொத்தம் 40 மாணவ, மாணவிகள் படிச்சோம். கல்லூரி நிர்வாகத்தினர் எங்களிடம் நீங்கள் ரெகுலரா காலேஜிக்கு வரவேண்டிய தேவையில்லை. காலேஜ் ஃபீஸ் 23,000 எங்களுக்கு வந்துவிடும், ஊக்கத்தொகை பணம் 3,000 உங்க அக்கவுண்டுக்கு வந்துவிடும். எக்ஸாமுக்கு வந்தால் மட்டும்போதும். தேவையில்லாமல் கல்லூரிக்கு வரவேண்டியதில்லை என்றார்கள். இதனால் பலர் காலேஜிக்கே வராமல் இருந்தார்கள்.

பிறகு,  கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனர். எக்ஸாம் நேரத்தில் மாணவர்கள் பணம் கட்டினால்தான் பரீட்சை எழுதமுடியும் என்று வீட்டுக்கு லெட்டர் அனுப்பினார்கள். நாங்க எதுக்கு பணம் கட்டணும்னு கேட்டதுக்கு, 'இதெல்லாமாப்பா உங்ககிட்ட சொல்லமுடியும். பணம் கட்டினா பரீட்சை எழுதமுடியும். இல்லனா முடியாது' என்று கறாராக சொன்னார்கள். பிறகு, நான் ரெண்டு வருஷமும் 6,000 பணம் கட்டி பரீட்சை எழுதி கல்லூரிப் படிப்பை முடிச்சோம். கோர்ஸ் கம்ப்லீட்டட் 'சர்டிஃபிக்கேட், டிசி, மார்க் ஷீட் வேணும்னு கேட்டதுக்கு, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணத்தை கட்டுங்க'ன்னு சொன்னாங்க. 'எதுக்கு சார்னு கேட்டதுக்கு, காலேஜ் மெயின்டனன்ஸ் சார்ஜுனு சொல்றாங்க. அதுக்கு நான், ''நாங்க தினக்கூலி, இவ்வளவு பணம் இருந்தா வேற காலேஜ்ல படிச்சிருச்சிருக்க மாட்டோமா. இங்குவந்து ஏன் சார் படிக்கிறோம்னு கேட்டதுக்கு, பணம் கட்டுனா கட்டு, இல்லனா இடத்தைக் காலி பண்ணுனு சொன்னாங்க.

 

 

 எங்களைப் போல எத்தனை மாணவர்களிடம் பணம் பறித்தார்களோ தெரியவில்லை. கல்லூரி தரப்பினர் செய்யும் தவறுகளை முழுமையாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பூமிநாதன் கூறுகையில், "எஸ்பி, கலெக்டரிடம் புகார்கொடுக்கப் போறோம் என்றோம். அதற்கு அவர்கள், எல்லா அதிகாரிகளுக்கும் நாங்க படியளக்கிறோம். எங்களை ஒண்ணும் பண்ணமுடியாது என்றார்கள். பிறகு, 2016 டிசம்பரில்  கலெக்டர் சரவணவேலிடம் புகார்கொடுத்தோம். அவர் உடனே எஸ்சி, எஸ்டி துறைக்கு பரிந்துரைசெய்தார். அவர்களும் கல்லூரி தரப்பிடம் பேசினார்கள். அவர்களிடம் டிசி, மார்க் ஷீட் கொடுப்பதாக ஒத்துகொண்டார்கள். ஆனால், நாங்கள் போனால் கொடுக்க மாட்டோம் என்றார்கள். வெளிநாட்டிலிருந்து வேலைக்கு விசா வந்துள்ளது. பாஸ்போர்ட் எடுக்க மார்க் ஷீட், டிசி வேணும். ஆனா, இவங்க கொடுக்க மறுக்கிறாங்க. அதிகாரிகளும் பணத்தை வாங்கிக்கிட்டு நடுத்தெருவுல விட்டுடுறாங்க. இவககிட்ட போராடமுடியலை. அதனால,  கலெக்டர் ஆபீஸ்ல உள்ள அதிகாரிகள்கிட்ட  'பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தை வைத்து' டிசி, மார்க் ஷீட் வாங்கலாம்னுதான் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினோம். இப்போகூட, அதிகாரிகள் எங்களைத்தான் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுறாங்களே தவிர, கல்லூரி தரப்பை அழைச்சுப் பேச மறுக்கிறாங்க. இந்த முறையும் எங்களுக்கு கிடைக்கலைனா, சாகவும் துணிஞ்சிட்டோம்" என்றார் வேதனையுடன்.

அடுத்ததாக, கல்லூரி முதல்வரிடம் பலமுறை பேசமுயற்சித்தோம். அவர், பதிலளிக்க மறுத்துவிட்டார். கலெக்டர் (இல்லை) பொறுப்பு டி.ஆர்.ஒ தனசேகரனிடம் பேசினோம். "ஆர்.டி.ஒ விசாரணைக்கு அனுப்பியுள்ளோம். இருதரப்பினரையும் விசாரித்து ஒருவாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். யார் மீது தவறு இருந்தாலும் அவர் மீது  நிச்சயமாக  நடவடிக்கை எடுப்போம்" என்றார் உறுதியாக.