வடிவேலு பாணியில் வாழ்ந்த ‘ட்ரிபிள் எஸ்’! - சென்னையில் கைதான ரவுடியின் கதை #VikatanExclusive

பிரபல ரவுடி ஷியாம் சுந்தர் சிங்

சென்னையில் கைதான பிரபல ரவுடியான ஷியாம் சுந்தர் சிங் என்ற ட்ரிபிள் எஸ் என்பவரின் ஃப்ளாஸ்பேக் நடிகர் வடிவேலு கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்தது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

சென்னை விருகம்பாக்கத்தில், கேரள வைர வியாபாரி சூரஜ் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கல்லை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஷியாம் சுந்தர் சிங்கை போலீஸார் இன்று கைதுசெய்தனர். விசாரணையில் அவரைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "நெல்லை மாவட்டம், களக்காடு அருகில் உள்ள இடையன்குளத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் சிங். இவர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிறை அருகே கொலைசெய்யப்பட்ட கராத்தே செல்வினுக்கு உறவினர். கராத்தே செல்வின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கவே ஷியாம் சுந்தர் சிங் ரவுடியானார் என்பது அவருடைய பழைய கேஸ் கிஸ்ட்ரி. இவரை, ட்ரிபிள் எஸ் என்று அழைப்பதுண்டு. காலப்போக்கில் ஷியாம் சுந்தர் சிங் என்ற பெயர் மறைந்து, ட்ரிபிள் எஸ் பெயர் நிரந்தரமானது.

தென்மாவட்டங்களில் நடந்த இரு பிரிவினர்களுக்கு இடையே நடந்த மோதலில், ஒரு பிரிவினருக்காக துப்பாக்கியை தூக்கியவர்தான் இந்த ட்ரிபிள் எஸ். இவர்மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. துப்பாக்கிமூலம் எதிரிகளை மிரட்டுவதே ட்ரிபிள் எஸ்ஸின் தனி ஸ்டைல். கார் மற்றும் பைக்கில் வலம் வரும் ட்ரிபிள் எஸ்ஸிக்கு தமிழகம் முழுவதும் கூட்டாளிகள் உள்ளனர். அடுத்து, பஞ்சாயத்துத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வழக்குகள் இருந்ததால், அவரை அந்தப் பதவியிலிருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் நீக்க உத்தரவிட்டார். இருப்பினும் ரவுடியிஸத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்தது. நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் எதிரிகள் அதிகமாகியதால் மதுரை, சென்னை என இடமாறினார்.

கராத்தே செல்வின் தொடங்கிய காமராஜர் ஆதித்தனார் கழகத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு, சிதம்பரத்தில் நடந்த ம.தி.மு.க. பிரமுகரும் கான்ட்ராக்டருமான பழனிவேலை கொலைசெய்த வழக்கில் ட்ரிபிள் எஸ் கைது செய்யப்பட்டார். அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துப்பாக்கியுடன் போலீஸார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் விருகம்பாக்கத்தில் வைரத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் ட்ரிபிள் எஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை நாங்கள் பறிமுதல்செய்துள்ளோம். கொள்ளையடிக்கப்பட்ட வைரக் கல்லையும் கைப்பற்றியுள்ளோம். அதன்மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை" என்றார். 

ட்ரிபிள் எஸ்  கூட்டாளிகள்

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கேரள வைர வியாபாரியிடம் ட்ரிபிள் எஸ் கூட்டாளிகள், வியாபாரி போல வைரம் விலைக்கு வேண்டும் என்று கடந்த மாதம் போனில் பேசியுள்ளனர். அதன்பேரில், வைரத்தோடு சென்னை வந்துள்ளார் சூரஜ். அவர், விருகம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் தகவலை ட்ரிபிள் எஸ் கூட்டாளிகளுக்குத் தெரிவித்துள்ளார். உடனடியாக ட்ரிபிள் எஸ் கூட்டாளிகள் அந்த விடுதிக்குச் சென்று பேரம் பேசியுள்ளனர். திடீரென துப்பாக்கியைக் காட்டிய ட்ரிபிள் எஸ் கூட்டாளிகள், வைரத்தோடு காரில் தப்பிச்சென்றுவிட்டனர். இந்தப் புகாரின்பேரில் கொள்ளையர்களைத் தேடிவந்தோம். அப்போது, செல்போன் சிக்னல் நெல்லை, தூத்துக்குடி, மும்பை என பல இடங்களைக் காட்டின. அந்த டவர் மூலம் கொள்ளையர்களின் விவரங்களைச் சேகரித்தோம். அப்போதுதான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ட்ரிபிள் எஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று தெரிந்தது. உடனடியாக அவர்களை கைது செய்துள்ளோம்.

ட்ரிபிள் எஸ் கூட்டாளிகளைக் கைதுசெய்ததுகூட 'தவம்' படத்தில் நடிகர் வடிவேலு, திருடன் கதாபாத்திரத்தில் அவரது கூட்டாளிகள் தடயத்தை  அழிப்பதற்காக மிளகாய்ப் பொடியை கொள்ளையடித்த வீட்டிலிருந்து வடிவேலு தங்கியிருக்கும் வீடுவரை தூவியிருப்பார்கள். அதுபோல, ட்ரிபிள் எஸ்ஸினக்செல்போன் நம்பரை அவரது கூட்டாளிகள் வைர வியாபாரி சூரஜ்ஜிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அதனால்தான் ட்ரிபிள் எஸ் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்ய முடிந்தது" என்றனர். 

ட்ரிபிள் எஸ் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், "சமுதாயத்துக்காக கையில் துப்பாக்கி, கத்தியை எடுத்தவர் ட்ரிபிள் எஸ். இவரது அண்ணன் வருமான வரித்துறையில் உயர் பதவியில் உள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ட்ரிபிள் எஸ், கராத்தே செல்வினைக் கொன்றவர்களைப் பழிவாங்கவே துப்பாக்கியைப் பிடித்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் தன்னுடைய சமுதாயத்தில் பிரபலமானவர்களிடம் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இந்தத் தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்ததும், ட்ரிபிள் எஸ்ஸை அழைத்து கைப்பிள்ளை நடிகர் வடிவேலை படத்தில் கவனிப்பதைப் போல கவனித்த சம்பவங்களும் உண்டு" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!