Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாய்வார்களா... பதுங்குவார்களா...? சட்டமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்!

டிடிவி தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை தொடங்குகிறது. இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்டிருந்த குழுவை கலைத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள 33 எம்.எல்.ஏக்களும் அரசு மீது கொந்தளிப்பான நிலையில்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அரசுக்கு எதிராக பாய்வார்களா...? பதுங்குவார்களா..? என்பது சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தெரிந்துவிடும்.  

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அன்று சட்டமன்றத்தில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜனவரி 27, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் விவாதம் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதன் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16-ம் தேதி பதவி ஏற்றார். புதிய  அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது.

ஓ.பன்னீர்செல்வம்  

அதன்பின்னர், மார்ச் 16-ம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்றம் கூடியது. 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்தது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் அப்போது வந்ததால், மறுதேதி குறிப்பிடப்படாமல், சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. ஜூன் 11-ம் தேதி அன்று பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்து வைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். 

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நடத்தப்படும் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்துக்காக, 'ஜூன் 14-ம் தேதி அன்று சட்டமன்றம் கூடுகிறது' என்று சில தினங்களுக்கு முன்னர், ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு வெளியிட்டார். அதனை சட்டமன்ற செயலாளர் பூபதி, அதிகாரபூர்வமாக அறிக்கை மூலம் வெளியிட்டார். நாள் வாரியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் மானியக்கோரிக்கைகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். ஜூலை 19-ம் தேதி வரை மானியக்கோரிக்கை கூட்டம்  நடக்கிறது. ஜூன் 14ம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது. ஒரு மணி நேரம் கேள்வி நேரம். அதன் பிறகு 'நேரமில்லா நேரம்' என்று அழைக்கப்படும் நேரத்தில், அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கேள்வியாக எழுப்பும். நாளைத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில், 'வறட்சி, மாட்டிறைச்சி' போன்ற பிரச்னைகள் குறித்துக் கவன ஈர்ப்புத் தீர்மானங்களை தி.மு.க கொடுத்துள்ளது. மேலும், எம்.எல்.ஏ-க்களை வளைக்க ஆளும்கட்சி சார்பில், பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள பிர்சனை குறித்தும் கேள்வி எழுப்ப தி.மு.க திட்டமிட்டுள்ளது.

ஸ்டாலின்

இந்த கூட்டத்தொடரில், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி மசோதா, காவிரி நீர் பிரச்னை என்று பல்வேறு பிரச்னைகளை கிளப்பத் தி.மு.க தயாராக இருக்கிறது. அதுபோலவே, 'ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்' என்பதில், ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். எனவே, சி.பி.ஐ விசாரணை கேட்டு இந்தக் கூட்டத்தொடரில் பிரச்னையைக் கிளப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை, எம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க இருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டி.டி.வி தினகரன் அணியில் உள்ள 33 எம்.எல்.ஏ-க்கள் அவ்வப்போது அரசுக்கு எதிரானக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களை, இந்த சட்டமன்றக் கூட்டத்தில், மானியக்கோரிக்கைகளின் போதும், சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்யும்போதும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க வைக்க சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இந்தக் கூட்டத்தொடரில், பதுங்குவார்களா அல்லது பாய்வார்களா என்பதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement