"24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு" - சாத்தியமா இல்லை வெற்று விளம்பரமா..? | Is it Possible to give power connection in 24 hours?

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (13/06/2017)

கடைசி தொடர்பு:15:54 (13/06/2017)

"24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு" - சாத்தியமா இல்லை வெற்று விளம்பரமா..?

மின் இணைப்பு திட்டம் தொடங்கிய அமைச்சர் தங்கமணி

விண்ணப்பம் செய்து 24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற ‘புதிய’ திட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி.

இந்தத் திட்டத்தின்படி, புதிய இணைப்பு கோரும் வீடுகள் மற்றும் வணிகக்கட்டடங்கள்...  மின் பகிர்மானப் பெட்டியில் இருந்து 100 அடி தொலைவில் இருந்தால், விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள்  மின் இணைப்பு வழங்கப்படும். மின் இணைப்பு கோரும் இடம் புதைவடம் உள்ள பகுதியில் இருந்தால், விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படும். இந்தத் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், பல மாடி வணிகக் கட்டடங்களுக்குப் பொருந்தாது. 

இந்தத் திட்டம் குறித்து இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் செல்வராஜிடம் கேட்டோம். “புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் ஏழு நாள்களுக்குள், அதிகபட்சம் 30 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று மின்சாரச் சட்டத்தில் உள்ளது. குறிப்பிட்ட இந்த நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படாவிட்டால், அந்த விண்ணப்பதாரருக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய், அதிகபட்சம் 1000 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். ஆனால், இவை எதையும் தமிழக மின்வாரியம் பின்பற்றுவதில்லை. 

24 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படும் என்றால், அதற்கு முன்பாக விண்ணப்பத்தைப் பதிவுசெய்து முக்கியம். ஆனால், பதிவுசெய்வதுதான் குதிரைக்கொம்பாக உள்ளது. விண்ணப்பத்தை நேரில் கொண்டுபோனால், உடனடியாக பதிவுசெய்யப்படுவதே இல்லை. அங்கு, பல்வேறு பேரங்கள் நடக்கும். அந்த சான்றிதழ் இல்லை, இந்த சான்றிதழ் இல்லை என்று சொல்லி இழுத்தடிப்பார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் பதிவுசெய்வார்கள். இதுபோன்ற சட்டவிரோத அணுகுமுறைகளைத் தடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போது, இ-சேவை மையங்கள் பரவலாக உள்ளன. அங்கே, விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம் என்று அறிவித்தால், நுகர்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார் செல்வராஜ்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் விஜயன், “ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது நடைமுறையில் எளிதாக இல்லை. அது பல நேரங்களில் வேலைசெய்வதில்லை. மேலும், எத்தனை பேர் ஆன்லைனுக்குப் போவார்கள் என்பதும் கேள்விக்குறியான ஒன்று. ஆன்லைனைப் பொறுத்தவரை, ஏதாவது பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். 

அமைச்சர் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், பல மாடி வணிக வளாகங்கள் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால், வீடுகள்தான் வரும். ஆனால், ஒரு சில கிராமங்கள், மலைப்பகுதிகள் தவிர தமிழகத்தில் சுமார் 95 சதவிகிதம் மின் இணைப்பு தற்போது உள்ளது. எனவே, கூடுதலாக மின் இணைப்பு வேண்டுமென்று ஒருவர் விண்ணப்பித்தால், அந்த இடத்தில் கம்பம் மற்றும் இணைப்புகள் ஏற்கெனவே இருக்கும். எனவே, புதிய இணைப்பை உடனடியாகக் கொடுப்பதில் பிரச்னை இருக்காது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதை ஏதோ ஒரு பெரிய திட்டத்தைப்போல, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் அமைச்சர் கலந்துகொண்டு அறிவிப்பு செய்கிறார்.

ஆனால், மின்துறை செய்ய வேண்டிய பல முக்கிய விஷயங்கள் உள்ளன. புதிய இணைப்புக்குத் தேவையான சாதனங்களை வழங்குவது முக்கியமானது. ஏற்கெனவே, மீட்டர் உட்பட அனைத்து சாதனங்களையும் மின்வாரியமே வழங்கிக்கொண்டிருந்தது. பிறகு, அவற்றை நுகர்வோரை வாங்கித்தர வேண்டும் என்று சொன்னார்கள். மின்சாதனங்களை மின்வாரியமே வழங்குவது, மீட்டர் போன்ற சாதனங்கள் தாமதமின்றி கிடைப்பதை உறுதிசெய்வது போன்றவற்றில் மின்துறை கவனம் செலுத்தினால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்