வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (13/06/2017)

கடைசி தொடர்பு:18:31 (13/06/2017)

'சேவ் சக்தி' வரலட்சுமியின் அரசியல் மீட்டிங் ஏன்?

வரலட்சுமி

விவசாயிகளின் பிரச்னைக்காக விஜய் குரல் கொடுக்கிறார்; டெல்லி போராட்டத்தில் விஷால் பங்கேற்கிறார் என ஆண் நடிகர்களைப் பற்றிய செய்திகளுக்கு இடையில், நடிகைகளுக்கும் சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ளது என்பதை முன்னிறுத்துகிறார் நடிகை வரலட்சுமி. 

தமிழ்நாட்டில் உள்ள பல நடிகைகள், நடிப்பதில் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். நடிப்பைத் தவிர மற்ற செயல்பாடுகளும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல்தொல்லைகளைத் தடுக்கும்விதமாக 'சேவ் சக்தி' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார், நடிகை வரலட்சுமி.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, 'போடா போடி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து, 'தாரை தப்பட்டை', 'மதகஜராஜா' ஆகிய படங்களில் நடித்தார். குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவரின் பேச்சு, தைரியம் ஆகியவற்றால் அதிக அளவில் பிரபலமானார். கம்பீரமான குரலில் மனதில்பட்டதைப் பட்டெனப் பேசும் அவர், சினிமா துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துமிருக்கிறார். திடீரென பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில், கேரளத்தில் நடிகை பாவனா காரில் சென்றபோது, அவருடைய கார் டிரைவர் மற்றும் சிலரால் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளானார். திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நேரத்தில் இப்படியொரு அவலம் நேர்ந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல், தனக்கு நேர்ந்த பிரச்னையை ஊடகங்கள் மூலம் வெளியில்சொன்னார். பாவனாவுக்கு சக நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு நடிகையும் தனக்கு நேர்ந்த பாலியல்துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்லத் தொடங்கினார்கள். அப்போதுதான் நடிகை வரலட்சுமியும், "பிரபல இயக்குநரும் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்" என்று பகிரங்கமாக சொன்னார். 

இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும்விதமாகவும் நடந்த பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணவும் ’சேவ் சக்தி' என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கினார். இதில், மாவட்டம்தோறும் மகிளா நீதிமன்றங்கள் அமைக்கவேண்டும் என்பதே இந்த பாதுகாப்பு அமைப்பின் முக்கிய கோரிக்கை. கடந்த மார்ச் 1- தேதி இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. மார்ச் 8-ம் தேதி நடிகைகள் மட்டுமின்றி எல்லா பெண்களும் இந்த மனுவில்  கையெழுத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதில், 60 ஆயிரம் பெண்கள் கையெழுத்து இட்டிருந்தனர். அந்த மனுவை ஜூன்12ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தார்,வரலட்சுமி . 

அந்தச் சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி, " பாலியல் தொல்லைகளை அனுபவித்த பெண்கள் வழக்கு தொடர்ந்தால் 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். மாவட்டம்தோறும் மகிளா நீதிமன்றங்களை அமைக்கவேண்டும். இப்போதைக்கு சென்னையில் ஒரே ஒரு மகிளா நீதிமன்றம்தான் இருக்கிறது. இது பற்றி முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.

ஓர் அமைப்பைத் தொடங்கி, மூன்று மாதங்களுக்குள், பெண்களுக்கான முக்கிய பிரச்னை ஒன்றை, முதல்வரின் பார்வைக்கு வரலட்சுமி கொண்டுசென்றுள்ளார். பெண்ணுக்கு ஒரு பிரச்னை என்றால், சினிமா துறையில் இருந்து முதலில் குரல் கொடுப்பவர்களில் வரலட்சுமியும் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கலாம். இவரைப் போல சமூக ஈடுபாடு கொண்ட பெண்கள் அரசியலுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். வரலட்சுமி எடுத்துவைத்திருக்கும் இந்த முதல் அடி, அரசியலுக்குள் நுழைவதற்கான முதல்படியாகவும் இருக்கலாமோ? யார் அறிவார்? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்