வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (13/06/2017)

கடைசி தொடர்பு:20:53 (13/06/2017)

"நான் வந்துட்டேன்னு சொல்லு..!” - ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்பிய நோக்கியா! #Nokia6

நோக்கியா மொபைல்களுக்கு இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 3310 மாடலை இந்தியாவில் வெளியிட்டது. இந்நிலையில் இன்று நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களும் 128 GB எக்ஸ்பாண்டபிள் மெமரி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மூன்று ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டுப்பேசிய நோக்கியா இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் அஜய் மேத்தா, "தனிச்சிறப்புடைய நோக்கியா எப்போதும் மக்களின் பிராண்ட். நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கை தான் நோக்கியாவின் அடிப்படை. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் இவ்விரண்டையும் உறுதிசெய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

நோக்கியா 3 :

நோக்கியா 3 - Nokia 3

ஹெம்.எம்.டி குளோபல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போன்களில், குறைந்த விலை கொண்ட மாடல் இதுதான். 5 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் 8 மெகா பிக்சல் கேமராக்கள், 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி போன்ற வசதிகளுடன் இந்த மாடல் வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷனில் இயங்கும் இந்த மொபைல், 2630 mAh பேட்டரித்திறன் கொண்டது. இந்த மாடல் வரும் 16-ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.

விலை : ரூ. 9,499/-

நோக்கியா 5 :

Nokia 5 - நோக்கியா 5

அலுமினியத்தால் ஆன முழு மெட்டல் பாடியுடன், காம்பேக்ட் ஸ்மார்ட்போனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது நோக்கியா 5 மாடல். 5.2 இன்ச் டிஸ்ப்ளே, Qualcomm® Snapdragon™ 430 பிராஸசர், ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷன், 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி, 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, 3000 mAh பேட்டரித் திறன் போன்ற வசதிகள் அசத்துகின்றன. மேலும், இதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இருப்பதால் இரட்டிப்புப் பாதுகாப்பு உறுதி. இந்த மொபைல் அடுத்த மாதம் 7-ம் தேதியில் இருந்து ப்ரி-புக்கிங் முறையில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

விலை : ரூ. 12,899/-

நோக்கியா 6 :

Nokia 6 - நோக்கியா 6

மீடியம் பட்ஜெட் மொபைல் சந்தையை மனதில்கொண்டு ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், இந்த மாடலை வெளியிட்டுள்ளது. முழு மெட்டல் பாடியுடன் அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த மாடல். மற்ற இரு மாடல்களை விட இதில் RAM அதிகமாக உள்ளது. 3 GB RAM, 32 GB இன்டர்னல் மெமரி, Qualcomm® Snapdragon™ 430 பிராஸசர், 16 மெகா பிக்சல் திறன் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் திறன் கொண்ட முன்பக்க கேமரா போன்ற வசதிகள் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளன. ஃபிங்கர்பிரின்ட் சென்சார் உடன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைலின் பேட்டரித்திறன் 3000 mAh என்பது மட்டும் சிறிய குறை. இதே வசதிகளுடன் ப்ளாக் கலரில் 4 GB RAM மற்றும் 64 GB இன்டர்னல் மெமரி கொண்ட மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாடல் அமேசான் தளத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதி நேரடியாக விற்பனை செய்யப்படவுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடி விலையில் இந்த மொபைலை வாங்க முடியும்.

விலை : ரூ. 14,999/-

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்நிலையில், ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்