Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 மாதத்துக்குள் அனைத்தும் மாறும்! - ட்விஸ்ட் வைக்கும் பி.ஜே.பி தலைவர்கள்

பி.ஜே.பி

மிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் சில நாள்களுக்கு முன், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. பி.ஜே.பி. யின் விவசாயப்பிரிவு மாநிலத் தலைவர் பொன்.விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டைத் தொடங்கிவைத்த தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில்,“கருணாநிதியின் வைர விழா, பிரதமர் மோடியைத் திட்டுகிற விழாவாகவே நடந்தது. நதிநீர் இணைப்பு என்பது வாஜ்பாயின் கனவு; அதைத் தடுத்ததே ராகுல் காந்திதான். அவரிடம், மு.க.ஸ்டாலின் கேட்கவேண்டியதுதானே? தமிழகத்தில் விவசாயிகளின் நலன்கருதி ஸ்டாலின் எத்தனை அணைகள் கட்டினார். அவர் தமிழகத்துக்கு எந்தத் தொலைநோக்குத் திட்டமும் கொண்டு வரவில்லை. எப்படி திமுகவுக்கு விவசாயத்தைப் பற்றி பேசத் தகுதி உள்ளது? பெரியார் பிறந்த மண்ணில் பி.ஜே.பி வளராது என்கிறார்கள். தமிழகம், பி.ஜே.பி வளரத் தகுதியான மண்தான். கண்டிப்பாக பி.ஜே.பி காலூன்றும். காவிக் கொடியை ஊன்றியே தீரும். தற்போது ஸ்டாலின் முதல்வராக வருவார் எனக் கருத்துக் கணிப்பு வருகிறது. அது சாத்தியம் இல்லை. ஊழலற்ற ஆட்சியை வழங்கும் மோடியின் தலைமையில் பி.ஜே.பி.யால் மட்டுமே தமிழக அரசியல் சூழ்நிலையை மாற்றமுடியும். பி.ஜே.பி அல்லாமல் தமிழகத்தை யாரும் ஆளமுடியாது என்கிற நிலையை உருவாக்குவோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடியை ஏற்றியே தீருவோம்” என்றார். 

அடுத்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு, விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஒரு விவசாயி, 100க்கு 20ரூபாய் காப்பீடு செய்யவேண்டியிருந்தால், அதில் 2ரூபாய் மட்டும் விவசாயி கட்டினால் போதும். மீதமுள்ள ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். இப்படிப்பட்ட திட்டம் தமிழகத்தில் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைத்திருக்கும். இவ்வளவு விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள். மேலும் விவசாயிகளின் உற்பத்தியை இணையதளம் மூலம் நல்ல விலைக்கு விற்பதற்கு, மத்திய அரசு, ’ஈநாம்’ திட்டம் கொண்டுவந்துள்ளது. இதுவும் தமிழகத்தில் பரவலாக்கப்படவில்லை. கடந்த 2014ல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை பல்லாயிரம் கோடி இருந்தது. அதை ஜன்தன் கணக்கு மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அனைத்துக்கும் மோடியை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின் ஏன் மாநில அரசைக் கேள்வி கேட்கவில்லை. எம்எல்ஏ., எம்பி., இல்லாமல் போனாலும் இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட அனைத்திலும் தமிழகத்தை பிஜேபி மறப்பது இல்லை” என்று கூறினார்.

இறுதியாகப் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், ”கடந்த 2011-12 பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசு, விவசாயத்துக்காக 24,256 கோடி ஒதுக்கினார்கள். அதில் ரூபாய் 966 கோடி ரூபாயைச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பினார்கள். மேலும் 2012-13 மற்றும் 2013-14-ம் ஆண்டுகளில் 4328 கோடிக்கு மேல்  திருப்பி விட்டார்கள் இந்தத் துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா.? ஆனால் மோடி அரசு, 2016-2017ல் விவசாயத்துக்காக 45,035கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 12,468 கோடி ரூபாயைக் கூடுதலாக ஒதுக்கியுள்ளார்கள். தமிழகத்தில் வறட்சியால் 400 விவசாயிகள் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவில் ஒரு எம்எல்ஏ கூட மரணமடைந்த விவசாயி வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. ஆனால் நான், 6 விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன். விவசாயிகள் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது, துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை என்று மறுத்தார். இதைவிட மோசமான செயல் உண்டா.?அதிமுக அரசு விவசாயிகளை, பாமர மக்களை மதிக்கவில்லை. தமிழர் நலனுக்காகச் செயல்படுவதாகச் சொல்லும் கழக ஆட்சிகள் சொல்வது பொய். தமிழக விவசாயிகள் மரணத்துக்குக் காரணமான நீசர்கள் இவர்கள்தான். காவிரி பாய்ந்தோடிய ஸ்ரீரங்கத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. ஆறுகளும் இல்லை. அந்தளவுக்கு மணல் கொள்ளை நடக்கிறது. காவிரியைத் தராத கர்நாடகாவுக்கு மணல் லாரி லாரியாக செல்கிறது. காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி அது நடந்துவிடக்கூடாது. காவிரி பிரச்னையில், அ.தி.மு.க, தி.மு.க, என எந்தக் கட்சியும் கர்நாடகக் கட்சிகளைக் கண்டிக்கவில்லை. கர்நாடகாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் பி.ஜே.பி அரசு அமைய வேண்டும். வருகின்ற ஜனவரி பொங்கல் திருநாளில் தமிழக பி.ஜே.பி புதிய மாறுதலைக் காண உள்ளது. 6 மாதத்துக்குள் என்ன மாற்றம் உருவாக உள்ளது எனப் பொறுத்திருந்துப் பாருங்கள். கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லா தமிழகம்” என்றார் ஆவேசமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement