கட்சியில் நடக்கும் தவறுகளை அவர்களே சொல்லிவிடுவார்கள்! அ.தி.மு.க-வை கலாய்க்கும் இல.கணேசன்

இல.கணேசன்

'அ.தி.மு.க மற்றும் அரசாங்கத்தில் நடக்கும் தவறுகளைக் கட்சி நிர்வாகிகளே வெளிப்படுத்திவிடுவார்கள் போல தெரிகிறது' என்று பா.ஜ.க எம்பி., இல.கணேசன் கலாய்த்துள்ளார்.

அரியலூரில் மத்திய அரசின் சார்பில், 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பா.ஜ.க எம்பி., இல.கணேசன் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. ஆனால், மத்திய அரசைப்  பற்றி குறைசொல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன சில கட்சிகள். அதைப் பற்றி ஒன்றும் கவலையில்லை. மக்களின் நலனை நோக்கி பயணிக்கிறது பி.ஜே.பி.

வருமான வரித்துறையோ அல்லது காவல்துறையோ ஆய்வுசெய்து கண்டுப்பிடிக்கவேண்டிய விஷயங்கள் அ.தி.மு.க-வில் உள்ளவர்களே  ஒவ்வொன்றாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க  அரசாங்கத்தில், கட்சி நிர்வாகிகளே அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் வெளிப்படுத்திவிடுவார்கள் போல தெரிகிறது. இதன் காரணமாக, சட்டரீதியாக என்ன நடவடிக்கை, என்ன தண்டனை என்பது ஒரு புறம். ஆனால், மக்கள் மத்தியிலே இந்தக் கட்சியைக்குறித்து எந்தளவுக்கு அபிப்ராயம் உருவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே, மக்கள் மத்தியில் அ.தி.மு.க அரசுமீது பல சந்தேகங்கள், மர்மங்கள் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வருவது என்பது அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் உள்ளது. இது, அ.தி.மு.க கட்சிக்கு நல்லதல்ல.

இல.கணேசன்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட ஏனைய துறைகள் சற்று செயல்படத் துவங்கியுள்ளது. இருப்பினும், மற்ற மாநிலங்களில் இருக்கும் வேகம், தமிழகத்தில் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பேசியிருக்கிறார்கள். மக்களுக்கு இருக்கும் பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் வகையில், தமிழக அரசின் செயல்பாட்டின் வேகம் அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில், மத்திய அரசின் திட்டங்களைத் தற்போதுள்ள மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்தினால், மக்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தும். யார் என்பதை உரியவர்கள் முடிவுசெய்வார்கள். ஆனாலும் தன்னிச்சையாக முடிவுசெய்து அறிவிப்பதற்குப் பதிலாக, மூன்று பேர்கொண்ட மூத்த தலைவர்களைக் கொண்ட குழுவை பிரதமர் அறிவித்திருக்கிறார். அந்தக் குழு, ஏனைய அரசியல் கட்சியோடு கலந்தாலோசித்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம். அல்லது நாங்கள் அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என்று எல்லா கட்சியிலும் கேட்போம். இதில், அ.தி.மு.க வின் ஆதரவைக் கேட்போம். அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!