உயர்நீதிமன்றம் தலையிட்டு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்... எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கோரிக்கை

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், உயர்நீதிமன்றம் தலையிட்டு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.   

ஜவாஹிருல்லா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டதாகவும், பலகோடி ரூபாய் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருப்பதாகவும், மூன் தொலைக்காட்சி மற்றும் டைம்ஸ் நவ் ஆங்கிலத் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து காணொலிகளுடன் கூடிய செய்திகளை வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் பிரபல ஆங்கில மற்றம் தமிழ் முன்னணி தொலைக்காட்சிகளில் இந்தச் செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகியுள்ளது. இது, தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் நடைபெற்ற திரைமறைவு ரகசியங்களைப் புலனாய்வு யுக்திகளைப் பயன்படுத்தி வெளிகொண்டுள்ள தமிழ்த் தொலைக்காட்சி 'மூன்' மற்றும் அதன் ஆசிரியர் ஷாநவாஸ் கான் பாராட்டுக்குரியவர். இந்தப் புலனாய்வு நிகழ்ச்சி, தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ரகசிய வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நியாயம்தான் என்பதை எடுத்துரைக்கும் வகையில், மூன் தொலைக்காட்சியின் புலனாய்வு அந்தரங்கக் காணொலிகள் அமைந்துள்ளன. தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவில் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உண்மைகள் முழுமையாக மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக தி.மு.க தாக்கல்செய்துள்ள வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தனது கண்காணிப்பில் ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விசாரணைக்குழு, குறுகிய காலத்தில் காணொலியில் தெரிவிக்கப்பட்டவை உண்மைத்தானா என்பதை பகுப்பாய்வுசெய்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!