Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசாத்திய சித்தி... ஐ.ஏ.எஸ் இலக்கியாவின் வெற்றிக்குப் பின் நின்ற வேதநாயகி!

லக்கியா, இந்திய ஆட்சிப்பணிக்கு கடந்த மே 31 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ள ராணிப்பேட்டை தமிழச்சி. இந்திய அளவில் 298-வது இடத்தில் தேர்வாகியுள்ள இவரின் தந்தை ராணுவ வீரர்; தாய், பள்ளி ஆசிரியை. ஒரு விபத்தில் இருவரும் இறந்துவிடவே அம்மாவுடன் பிறந்த தங்கையான வேதநாயகியிடம் அடைக்கலமாகும் சூழல். இளம்பெண்ணாக இருந்த வேதநாயகி, விடாமுயற்சியுடன் தன் அக்கா மகளைப் படிக்கவைத்து கலெக்டர் ஆக்கியுள்ளார். இலக்கியாவை வெற்றிபெறவைத்த கதை கேட்டோம் வேதநாயகியிடம்... 

இலக்கியா IAS

"நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். நான்கு அக்கா ஒரு அண்ணன், நான் எனப் பெரிய குடும்பம் எங்களுடையது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சமூகப் பணிகளுக்கான முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். என் இரண்டு அக்காக்கள் இறந்துவிட்டனர். அப்படி இறந்த ஓர் அக்காவின் மகள்தான் இலக்கியா. அவருடன் பிறந்தது இரண்டு தம்பிகள். 2004 ஆம் ஆண்டு என் அக்காவும் அவரின் கணவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். அவர்கள் இறந்த பிறகு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. வசதிகளற்ற சூழலில் அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துவிட உறவினர்கள் யோசனை சொன்னார்கள். எனக்கு அப்போது 25 வயது. முதுகலை முடித்த நேரம். தொடர்ந்த வாசிப்பினால் நான் ஒரு பெண்ணியவாதியாகவும், கடவுள் மறுப்பாளராகவும் மாறியிருந்த காலகட்டம். மேலும், தொடர்ந்து மக்கள் சேவையிலும், மக்கள் உரிமைகளுக்கான விழிப்புஉணர்வு பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்ற கனவுகளுடன் இருந்தவள். 

அப்படியான சூழலில் என் கால்களைச் சுற்றி தாயையும் தகப்பனையும் இழந்த மூன்று பிள்ளைகள் நின்றிருந்தன. அதில் மூத்தவரான இலக்கியாவுக்கு அப்போது 12 வயது. வளர்ந்த இடத்திலிருந்து பிடுங்கி வேறு இடத்தில் நடுவது போன்ற செயல்தான், திடீரென விடுதிக்கு அனுப்பிவைப்பது. அப்பா-அம்மா இருந்து விடுதிக்குப் படிக்கப் போவது என்பது வேறு. அவர்கள் இருவருமே இறந்த நிலையில் விடுதிக்குப் போனால் அவர்களின் கல்வி நிச்சயம் பாதிக்கப்படும் என்று உணர்ந்தேன். அவர்களை நானே வளர்க்க முடிவுசெய்தேன். அவர்களிடமும் `விடுதிக்குப் போகிறீர்களா?' எனக் கேட்டபோது `அங்கு செல்ல விருப்பம் இல்லை' எனத் தெரிவித்துவிட்டனர். 

அன்றைக்கு நானே மிகவும் கஷ்ட ஜீவனம்தான். சொற்பமான சம்பளத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்தேன். என் வாழ்க்கையின் திடீர் கடமையாகவும் ஒரு யுவதியைத் திடீரென பொறுப்புமிக்கப் பெண்ணாக மாற்றிவிட்ட மூன்று குழந்தைகள் என் கால்களைச் சுற்றி நின்றனர். அன்றைக்குத் திருமணமாகாத இளம்பெண்ணான நான், மூன்று குழந்தைகளுடன் வீடு வாடகைக்குக் கேட்டால்கூட யாரும் தர மாட்டார்கள். அவ்வளவு கஷ்டத்துடன்தான் நாள்களை நகர்த்தினோம்" என்றவர் இலக்கியா குறித்து பேசத் தொடங்கினார்.

``நான் என்றைக்குமே `ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும்' என்று அவர்களிடம் சொன்னதே இல்லை. நான் தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பதைப் பார்த்து 'நான் மருத்துவராகி, மக்களுக்கு இலவசமாகச் சேவை செய்ய வேண்டும்' என்றுதான் சொல்லிவந்தார். ஆனால், அவருக்கு அறிவியல் கொஞ்சம் சிரமம் என்பதை அவரும் உணரவில்லை; நாங்களும் உணரவில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வந்த பிறகு அதில் நாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. `இனி மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், அதிகமான பணம் தேவைப்படும். சரி மக்கள் சேவை செய்ய மற்றொரு வாய்ப்பை வழங்குவது இந்திய ஆட்சிப்பணி. அதற்கு முயற்சி செய்யலாம்' என்ற ஆலோசனையைத் தெரிவித்தேன். இலக்கியாவும் ஏற்றுக்கொண்டார். அதன் முதல்கட்டமாக ஆங்கில இலக்கியம் படித்தார். தொடர்ந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலை சமூக சேவை முடித்தார். அதன் பிறகு `சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி'யில் சேர்ந்து படித்து முதல் முறை தேர்வை எழுதினார். அதில் குறைந்த மதிப்பெண்ணில் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன் பிறகு படிப்பில் ஒரு தெளிவு கிடைத்து. ஒரே நோக்கமாகப் படித்து இன்றைக்கு வென்றுள்ளார். 

சளைக்காத என் பணியில் முதல் வெற்றியாகவும் ஊக்கப்படுத்தும் செய்தியாகவும் இலக்கியாவின் இந்திய ஆட்சிப்பணி தேர்வை நினைத்துக்கொள்கிறேன். என்னுடன் இருந்து மக்களின் துயரங்களை கண்ணால் பார்த்தவர் இலக்கியா. அதனால் அன்பும் சேவையும்கொண்ட ஒருவராக இந்திய மக்களுக்குச் சேவைசெய்வார் என்று முழுமையாக நம்புகிறேன்" என்றார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement