Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிணிகள் ஆன அணிகள்... அ.தி.மு.க. இணைப்பில் தொடர் சிக்கல்!

ஜெயலலிதா அ.தி.மு.க.

விக்கிரமாதித்யனின் வேதாளக் கதையைவிட சுவாரஸ்யமாய் நீள்கிறது அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்பு விவகாரம். இரு அணிகள் என்பதும்கூட கண்ணுக்குத் தெரிகிற பிளவு. இரு அணிகளுக்குள்ளும் தலா நான்கு பிளவுகள் உருவாகியிருப்பதுதான் உண்மை. இந்நாள் எம்எல்ஏ-க்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் அணி ஒன்று, 'கூவத்தூர் உறுதிமொழியைக் காப்பாற்ற வலியுறுத்தி கச்சை கட்டுகிறது'. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே அடிக்கடி அப்பாயின்ட்மென்ட் கேட்டு பல அதிர்ச்சிகளைத் தருகிறது இந்நாள் அமைச்சர்களில்  ஓர் அணி. இந்த இரு அணியினரையும் தெற்றுப்பல் தெரியப் பேசி அனுப்பும் எடப்பாடி, இதில் எந்த அணியைச் சேர்ந்தவர் என்றே அடையாளம் தெரியாதபடி தானே ஒரு தனி அணியாகக் கருத்துத் தெரிவிக்கிறார். இத்தனை தடுமாற்றத்துக்கிடையிலும் ஆச்சர்யமாகத் தடம் புரளாமல், ஆட்சி நடப்பதுதான் அ.தி.மு.க-வின் ஓராண்டு சாதனை.   

சசிகலா பொதுச் செயலாளரானதற்குப் பின் அ.தி.மு.க-வில் அதிர்ச்சிகள் தொடர்ந்தன. தினகரன் துணைப் பொதுச்செயலாளரானபின் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்திருந்த வேளையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தினகரனை சிறைக்கு அனுப்பியது டெல்லி போலீஸ். பிரிவதற்குத் தெளிவானக் காரணங்களை முன்வைத்த இரு அணிகளும் இப்போது இணைவதற்குக் காரணங்கள் ஏதுமின்றி இணைப்பதற்கான இடைத்தரகர்களும் இன்றி காலையில் ஒரு பேச்சும், மாலையில் அதற்கு மாறானப் பேச்சுமாகக் குழம்பித் தவிக்கின்றன . 

தன்னால் வளர்க்கப்பட்ட ஓ.பி.எஸ் தங்களை எதிர்த்தே தனி ஆவர்த்தனம் புரிவதை ரசிக்காத தினகரன் அணி, ஓ.பி.எஸ் அணியுடன் சமரசம் ஆகிவிடக்கூடாது என்றுதான் அதிரடியாக சில காரியங்களைச் செய்தது. ஆனால், அதற்கு அதிக 'விலை' கொடுக்கவேண்டியதானது. துணைப்பொதுச்செயலாளராகத் தன் பராக்கிரமத்தைக் காட்ட நினைத்து, தோல்வியில் முடிந்தது அவருக்கு ஞானோதயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இணைப்பு பேச்சுவார்த்தைக்கான அணி அமைத்தும், அமைச்சர்கள் மூலம் ஓ.பி.எஸ் அணியுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தியும் சரியான சமிக்ஞை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் தேர்தல் ஆணைய விவகாரத்தில், சிறைக்குப் போனார் தினகரன். இதன்மூலம் ஓ.பி.எஸ்-ஸின் பிடிவாதப் பின்னணி எத்தகையது என்பதைப் புரிந்துகொண்டது தினகரன் அணி.   

ஓ.பி.எஸ். அ.தி.மு.க.

இனி, சவால் விடுவதும் சண்டைக் குணமும் எடுபடாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டே  சமரசத்துக்கு வந்திருக்கிறது தினகரன் அணி. ஓ.பி.எஸ்-ஸுக்கு மத்திய அரசு பின்னணியாக இருப்பது ஒரு மாபெரும் பலம். கூடவே, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப்பின் உருவான ஒரு தலைவராகவும் மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டார் ஓ.பி.எஸ். எனவே, எதிர் அரசியல் செய்வதென்பது ஓ.பி.எஸ்-ஸுக்கே சாதகமாக முடியும் என்பதால், சமரசம் செய்து அவரை மீண்டும் கட்சியில் தொடரச்செய்வதே தினகரனின் எண்ணம். இதனாலேயே சிறையிலிருந்து மீண்டு வந்தபின் அவரின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. 

நேற்று இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர் “நான் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம்மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். அவர் எனக்குச் சிறந்த நண்பரும்கூட. அவர்  விரைவில் கட்சிக்குத் திரும்பி வருவார். அ.தி.மு.க-வில் 90 சதவிகித கட்சியினரும், நிர்வாகிகளும் எங்களுடன்தான் உள்ளனர். இரு அணிகளையும் இணைப்பதை துணைப் பொதுச் செயலாளராக எனது உறுதியான கடமையாகவே கருதுகிறேன். நான் டெல்லி செல்வதற்கு முன்பு கட்சியிலுள்ள சில தலைவர்கள் 'அணிகள் இணைவதற்கு வசதியாக நான் ஒதுங்கி இருக்க வேண்டும்' என்றதால்தான் ஒதுங்கி இருந்தேன்” என்றார். 

தேனியில் எங்கோ ஒரு மூலையில் ஜானகி ஆதரவாளர் என்ற முத்திரையோடு விரக்தியாக டீ ஆற்றிக்கொண்டிருந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு அரசியலில் அடுத்தடுத்துப் பதவிகள் வந்ததற்கு தினகரன் ஒரு முக்கியக் காரணம். ஆரம்ப நாள்களில், ஜெயலலிதாவுக்கு இணையான மரியாதையைத் தினகரனுக்கும் தருவார் ஓ.பி.எஸ். 'சார்' என்றே அழைப்பார்; பவ்யமாக அவர் முன் பேசுவார். தினகரன் பல சமயங்களில், ஓ.பி.எஸ்-ஸை பெயர் சொல்லித்தான் அழைப்பார். ஆனால், இன்று 'சார்' என்கிறார்; 'அண்ணன்' என அழைக்கிறார். அந்தளவு அவருக்கு கிலி கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். 

அ.தி.மு.க-வில் அடுத்த அதிரடியாக கூவத்தூரில் பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆடியோ பேச்சு வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவரும் ஒரு முன்னாள் பிரமுகரிடம், 'அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து தொடரும் இந்த குழப்பங்களால் அதன் எதிர்காலம் என்ன ஆகும்' என்றக் கேள்வியை முன்வைத்தோம்.

தினகரன் அ.தி.மு.க.

“அ.தி.மு.க அணிகள் இணையும் என்ற எண்ணம் எங்களுக்குப் பட்டுப்போய்விட்டது. எம்.ஜி.ஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு மாபெரும் கட்சி அ.தி.மு.க. ஆனால், ஜெயலலிதா இறந்தபிறகு 6 மாதம் வரைக்கூட கட்சியைக் காப்பாற்றி வைக்கமுடியவில்லை. கருணாநிதியின் ஊழலை எதிர்த்து அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர், அதை வெறும் மாநிலக் கட்சியாக நிறுத்தாமல், பிற்காலத்தில் தேசியக் கட்சியாக மாற்ற விரும்பி 'அகில இந்திய அண்ணா தி.மு.க' எனப் பெயர் மாற்றம் செய்தார். ஆனால், ஜெயலலிதாவுக்குப்பின் தலைமைக்கு வந்தவர்கள் மாநிலத்துக்குள்ளேயே அதை இரு அணிகளாக மாற்றி எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். கட்சியினுடைய எதிர்காலத்தின்மீது நிஜமான அக்கறை இருந்திருந்தால், கட்சியையும் ஆட்சியையும் பிரச்னை இன்றி நடத்த ஆரம்பத்திலேயே ஒரு சமரசமான முடிவை  எடுத்திருப்பார்கள். ஆனால், ஒரே நேரத்தில் கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு ஒரு பெரிய கட்சியை அணிகளாக சுருக்கிவிட்டார்கள்” என்றார் வேதனையான குரலில்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட நலன் கருதியே முடிவெடுப்பதால், இனி கட்சி இணையும் என்ற நம்பிக்கையே அற்றுப்போய்விட்டது. சசிகலாவுக்குக் கட்சியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு உள்ளதாக ஆரம்பத்தில் அவர்கள் சொன்னார்கள். ஆனால், ஆர்.கே நகர் தேர்தலில் சசிகலாவின் பேனர் தவிர்க்கப்பட்டதிலிருந்தே அவர்கள் சொல்லியது பொய்யெனத் தெரிந்தது. அப்படியிருந்தும் கட்சியைக் கைப்பற்ற சசிகலா அணி, பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது. ஓ.பி.எஸ் அணியின் சசிகலா எதிர்ப்பைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது எடப்பாடியின் எண்ணம். அதனாலேயே சில அமைச்சர்கள், தினகரனைக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். 'ஆட்சி எடப்பாடியிடம் இருந்தாலும் கட்சியைத் தக்கவைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் முதல்வர் பதவியை அடைந்துவிடமுடியும்' என்பது தினகரனின் திட்டம். அதனால்தான் ஒதுங்கிவிட்டதாக அறிவித்தவர் இன்றும் தன் ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களை வீட்டுக்கு வரவழைத்துக் கட்சியில் தன் இடத்தை உறுதி செய்தபடி இருக்கிறார்.

இப்போது தினகரன் இறங்கிவந்து ஓ.பி.எஸ்-ஸை உருகி அழைப்பதன் பின்னணியே வேறு. அ.தி.மு.க என்ற பலம் பொருந்தியக் கட்சியின் இன்றைய நிலைக்குக் காரணம், தேர்தல் ஆணையம். சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பி.எஸ் தரப்பு ஆணையத்தை அணுகியபின்தான், கட்சிக்கு சனி பிடித்தது. கட்சியின் சின்னம் முடங்கி, 'அணிகள்' என அங்கீகாரம் சுருங்கியது. மத்திய அரசு இதில் மூக்கை நுழைக்க இதுவே காரணமானது. எனவே, தேர்தல் ஆணையத்தின் முன் அந்த புகார் மனு நிலுவையில் இருப்பது, தாங்கள் எடுக்கும் எந்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதாலேயே எப்படியாவது ஓ.பி.எஸ்-ஸை சமரசம் செய்து கட்சிக்குள் மீண்டும் நுழைத்து மனுவை வாபஸ் பெற்று இழந்த அங்கீகாரங்களை திரும்பப்பெற நினைக்கிறது தினகரன் அணி. அப்படி மீண்டும் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வாக பலம்பெற்ற பின்னர் ஓ.பி.எஸ்-ஸுடன் கச்சை கட்ட நினைக்கிறது தினகரன் தரப்பு. 

இது ஒருபுறமிருக்க, மக்கள் ஆதரவும் பெரும்பாலான கட்சித்தொண்டர்களின் ஆதரவும் மத்திய அரசின் நிலைப்பாடும் தனக்கு சாதகமாக இருப்பதால் ஓ.பி.எஸ் உற்சாகமாக இருக்கிறார். அ.தி.மு.க அம்மா அணி உள்கட்சிக் குழப்பங்களால் இன்னும் மோசமாக பலவீனமடையும் வரை காத்திருந்து, அதன்பின் உள்ளே சென்று தன்னை பலப்படுத்திக்கொண்டு கட்சியையும் ஆட்சியையும் ஒருசேரக் கைப்பற்றுவதுதான் ஓ.பி.எஸ்-ஸின் தற்போதையத் திட்டம். அதற்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில், அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னைக் கரைத்துக்கொள்வதில் பயனில்லை எனக் கருதுகிறார் ஓ.பி.எஸ். தான் நினைப்பதுபோன்ற சுமுகமான சூழல் உருவாகவில்லை எனில், புதியக் கட்சியைத் துவக்குவதுதான் அவரின் தற்போதையத் திட்டம். அதற்குமுன் அ.தி.மு.க என்ற கட்சியையும் அதன் சின்னத்தையும் முற்றாக முடக்கும் நடவடிக்கைகளில் அவர் தரப்பு தீவிரமாகும். காரணம் அ.தி.மு.க தொடர்ந்து இயங்கினால், அதை எதிர்த்து செயல்படுவது என்பது ஜெயலலிதா எதிர்ப்பு நிலை போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தும். 'தன்னை வளர்த்த கட்சியையே எதிர்க்கும் நம்பிக்கைத் துரோகி' என்ற பழிச்சொல்லுக்கும் ஆளாகிவிடக்கூடும். எனவேதான், 'ஜாக்கிரதையாக  அ.தி.மு.க-வை முடக்கி புதியக் கட்சியைத் தொடங்கி ஜெயலலிதாவைப்போன்றே தீவிர தி.மு.க எதிர்ப்பு நிலையைக் கையிலெடுத்து ஆட்சியைப் பிடிக்கலாம்' என நீண்ட கால யோசனையை மனதில் அடைகாக்கிறது ஓ.பி.எஸ் அணி.

எடப்பாடி அ.தி.மு.க.

இப்படி ஆளுக்கொரு ஆசையில், கட்சியைக் கைகழுவிக்கொண்டிருக்கிறார்கள். வியர்வை வழிய தாங்கள் கட்டிவளர்த்தக் கட்சி தங்கள் கண்முன்னே கூறுபோடப்படுவதைச் சகிக்கமுடியாமல், மனம் புழுங்கிக்கொண்டிருக்கிறான் ஒவ்வொரு தொண்டனும்” என்றார் வேதனையான குரலில். 

ஆவடிகுமார்தினகரன் அணியின் கெஞ்சலும் ஓ.பி.எஸ் அணியின் மிஞ்சலும் அ.தி.மு.க-வில் விசித்திரமான சூழல் நிலவுவதைச் சொல்கிறது. இந்தநிலையில், அதிமுக அம்மா அணியின் தலைமைக்கழகப் பேச்சாளர் ஆவடி குமாரிடம் பேசினோம்.

''ஆட்சி நடத்தப் போதிய எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் எங்களிடம் இருக்கையில், யாரிடமும் போய் நாங்கள் கெஞ்சும் நிலை இல்லை. கட்சியில் உருவான எதிர்பாராத சூழலினால், கட்சித்தொண்டர்கள் மத்தியில் சற்றுக் குழப்பம் நிலவுகிறது. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னம் முடங்கியது அவர்களை வேதனைப்படுத்தியுள்ளது. அதனால், முறையாகக் கட்சியை மீட்க சில நடவடிக்கைகளைத் தலைமை எடுக்கிறது. இது கெஞ்சுவது அல்ல. ஓ.பி.எஸ், எடப்பாடி, தினகரன் யாராக இருந்தாலும் ஜெயலலிதா உருவாக்கியக் கட்சியை அதன் கட்டுக்கோப்பை குலைக்காமல், காக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. அதில் முதற்கட்டமாக கட்சியின் நலன் கருதி ஓ.பி.எஸ்-ஸுக்கு மரியாதையான அழைப்பு விடுத்திருக்கிறார் தினகரன். இன்று அல்ல, ஆர்.கே நகர் தேர்தலின்போதே கட்சி ஒருங்கிணையும் என்றால், 'தான் ஒதுங்கியிருக்கவும் தயார்' என அறிவித்ததோடு கட்சித் தலைமையகத்திலிருந்து சசிகலா பேனர்களை அகற்றவேண்டும் என்ற ஓ.பி.எஸ்-ஸின் நிபந்தனையையும் நிறைவேற்றியவர். இத்தனைக்கும் அந்தப் பேனர்களை வைத்ததே ஓ.பி.எஸ்-ஸும் மதுசூதனனும்தான். ஆனால், கொஞ்சமும் கட்சி விசுவாசம் இன்றி தன் தனிப்பட்ட நலனுக்காகக் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் அடமானம் வைத்து தன்னை வளர்த்தக் கட்சிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டவர் ஓ.பி.எஸ். அவரின் இந்த நடவடிக்கையால்தான், மத்திய அரசு இதில் தலையிட்டது.

இதை வாய்ப்பாக்கி, தங்கள் கட்சியைத் தமிழகத்தில் நிலைநிறுத்தும் முயற்சியாக தேர்தல் ஆணையத்தின்மூலம் அ.தி.மு.க-வை இரண்டாக்கிவிட்டது பி.ஜே.பி. ஒன்று, 'பொதுச் செயலாளர் தேர்வு செல்லும்' என அறிவித்திருக்கவேண்டும் அல்லது 'செல்லாது' என அறிவித்துப் புதியதாகத் தேர்தல் நடத்த உத்தரவிட்டிருக்கவேண்டும். ஆனால், இதைத் தவிர்த்துவிட்டுக் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கியது சட்டவிரோதம். நம் பிரச்னையை நாமே பேசித் தீர்த்துக்கொள்ளாமல், தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி சென்றது, குரங்கிடம் அப்பம் பங்கிடச்சொன்னது போலாகிவிட்டது. இப்போதும் சொல்கிறேன். கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது பற்றியத் தெளிவான நடைமுறை உள்ளது. அதனால், யாரையும் கொலுபோல் அதில் உட்கார வைக்கமுடியாது. உண்மையில், அவர்களிடம் உள்நோக்கம் இல்லையென்றால், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவேண்டும். அதற்கு முன் தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள புகாரை வாபஸ் பெற்று கட்சியின் பழைய பெயர் மீட்கப்பட்டால்தான் தொண்டனும் இந்தப் பேச்சுவார்த்தையை விரும்புவான்.

சட்டவிதிப்படி பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தமுடியும். அந்தத் தேர்தலின்மூலம் யார் தங்களுக்குப் பொதுச்செயலாளராக வருவது என்பதைத் தொண்டர்கள் முடிவு செய்யட்டும். இந்த சட்ட விதி நன்கு தெரிந்திருந்தும் ஓ.பி.எஸ் முரண்டு பிடிப்பதில்தான் உள்நோக்கம் உள்ளது. அவரை ஆட்டிவைப்பவர்கள் அவரைச் சிக்கலில் தள்ளிவிட்டார்கள். இப்போது திரிசங்கு நிலையில் அவர் உள்ளார். மாஃபா, மைத்ரேயன், கே.பி முனுசாமி போன்றவர்களின் தவறான வழிகாட்டுதலால், அவர் தற்போது புதுக்கட்சியைத் தொடங்கும் மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கான அணியை அமைத்துவிட்டு டெல்லிக்கு அபிடவிட்டுகளை எடுத்துச்சென்றதே அவர்களுக்கு எங்களுடன் இணைந்து செயல்படுவதில் துளியும் விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. தனக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்த கட்சியின் எதிர்காலத்துக்காக நல்ல முடிவை ஓ.பி.எஸ் அணி எடுக்கவேண்டும். அதுதான் தன்னை உயர்த்திய ஜெயலலிதாவுக்கு அவர் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்” என முடித்தார்.

தங்களுக்குப்பின் கட்சியை வழிநடத்தும் தகுதியானத் தலைவர்களை உரிய நேரத்தில், அடையாளம் காட்டிச் செல்லாததற்குத் தண்டனையாகத் தாங்கள் அரும்பாடுபட்டு வளர்த்தக் கட்சியையே காவு கொடுக்கவேண்டியிருக்கிறது ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement